கழட்டியே பார்க்க தேவையில்ல... உள்ள இருக்குறது அப்பட்டமா தெரியும்!! புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!
ஜிதேந்திரா இவி (Jitendra EV), மஹாராஷ்டிராவின் நாசிக்கை சேர்ந்த எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனம். கடந்த சில வருடங்களாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துவரும் ஜிதேந்திரா இவி நிறுவனத்தில் இருந்து புதியதாக கவர்ச்சிக்கரமான தோற்றத்தில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஜிதேந்திரா இவி-இன் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் ப்ரிமோ (Primo). ரூ.79,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பம்சமாக கண்ணாடி போன்றதான உடல் அமைப்பை ஹைலைட் படுத்தி ஜிதேந்திரா இவி தெரிவித்துள்ளது. அவ்வாறான தோற்றத்தில் ஸ்கூட்டர் எவ்வாறு இருக்கும் என்பதை கீழுள்ள படத்தில் காணலாம்.

ஆனால், இவ்வாறான கண்ணாடி தோற்றத்தில் ப்ரிமோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்னும் உற்பத்தி செய்ய துவங்கவில்லை என ஜிதேந்திரா இவி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், இப்போதைக்கு கருப்பு, சில்வர், சிவப்பு மற்றும் வெள்ளை பெயிண்ட் ஆப்ஷன்களில் ஜிதேந்திரா ப்ரிமோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.
ஜிதேந்திரா இவி ப்ரிமோவில் 60 வோல்ட், 26 ஆம்பியர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு உள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 65 கிமீ தொலைவிற்கு இந்த ஸ்கூட்டரில் பயணிக்கலாம். அதிகப்பட்சமாக மணிக்கு 52கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 7-டிகிரி சாய்ந்த கோணத்தில் ஓட்ட முடியும்.

இந்த இ-ஸ்கூட்டரில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் சுருள் காயில் உடன் ஹைட்ராலிக் ஃபோர்க்குகளும் இடம்பெற்றுள்ளன. முன் சக்கரத்தில் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் ட்ரம் பிரேக்கும் உள்ளன. 10-இன்ச் ட்யூப்லெஸ் டயர்கள் இந்த ஸ்கூட்டரை ஓட்டிச் செல்கின்றன. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரைடிங் மோட்களும் உள்ளன.
அத்துடன் இந்த ஸ்கூட்டரை ரிவர்ஸிலும் ஓட்ட முடியும். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், எல்இடி விளக்குகள், யுஎஸ்பி சார்ஜிங், சைடு-ஸ்டாண்ட் இண்டிகேட்டர், பேட்டரி வெப்பமடைவதை எச்சரிக்கும் வசதி உள்ளிட்டவை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் தொழிற்நுட்ப அம்சங்கள் ஆகும். ப்ரிமோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 3 வருட உத்தரவாதத்தை ஜிதேந்திரா இவி அறிவித்துள்ளது.
ப்ரிமோ தற்போதைக்கு ஒரேயொரு வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், விரைவில் ப்ரிமோ எஸ் ஸ்கூட்டரையும் 90கிமீ ரேஞ்ச் உடன் அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஜிதேந்திரா இவி உள்ளது. அதேபோல், ப்ரிமோ பிளஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் அடுத்த வருடத்தில் விற்பனைக்கு கொண்டுவர ஜிதேந்திரா இவி திட்டமிட்டுள்ளது. இதன் ரேஞ்ச் 130கிமீ என்ற அளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஜிதேந்திரா இவி ப்ரிமோ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விற்பனையில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கைனெடிக் க்ரீன் ஜூலு போட்டியாக இருக்கும். கைனெடிக் க்ரீன் இ-ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.94,990 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்கூட்டரில் 2.1 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரும், 2.27kWh பேட்டரி பேக்கும் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு அவ்வப்போது புது, புது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாக அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அவற்றை வாங்குவோரின் எண்ணிக்கை மெதுவாகவே அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் சார்ஜிங் மையங்களை ஏற்படுத்தினால் மட்டுமே இதனை வேகப்படுத்த முடியும். புதிய ஜிதேந்திரா இவி ப்ரிமோ புதுமையான கண்ணாடி டிசைனில் எல்லாம் வரவுள்ளதாக கூறப்பட்டுள்ளது, பார்ப்போம் மார்க்கெட்டில் ஜெயிக்குமா என்று...
Sourc: HT Auto


Click it and Unblock the Notifications








