இந்த ஸ்கூட்டரின் விலையில் ஒரு காரையே வாங்கிடலாம்!! ஜஸ்டீன் பைபரின் கை வண்ணத்தில் உருவானதால் இந்த விலையா?
வெஸ்பா ஜஸ்டீன் பைபர் லிமிடெட் எடிசன் (Vespa Justin Bieber Limited Edition) ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய வெஸ்பா ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரை பற்றிய முழுமையான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஜஸ்டீன் பைபரை பற்றி அறியாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். கனடாவில் பிறந்த பிரபல ஆங்கில பாடகர், கவிஞர் மற்றும் நடிகரும் ஆவார். இத்தனை திறமைகளையும் வெறும் 29 வயதிற்கு உள்ளாகவே உலகிற்கு ஜஸ்டீன் பைபர் நிரூபித்து உள்ளார். குறிப்பாக, வட அமெரிக்க கண்டத்தில் மிகுந்த பிரபலமானவராக விளங்கும் ஜஸ்டீன் பைபரின் பெயரில் ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய வெஸ்பா திட்டமிட்டு வந்தது.

அதன்படி, வெஸ்பா ஜஸ்டீன் பைபர் என்ற பெயரில் ஓர் புதிய ஸ்கூட்டர் உலகளவில் கடந்த 2022ஆம் ஆண்டில் வெளியீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், சர்வதேச சந்தையில் வெளியீடு செய்யப்பட்டு கிட்டத்தட்ட 1 வருடம் கழித்து, வெஸ்பா ஜஸ்டீன் பைபர் எடிசன் ஸ்கூட்டர் தற்போது நம் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், இந்த ஸ்கூட்டரை ஜஸ்டீன் பைபர் தான் வடிவமைத்துள்ளார்.
பொதுவாகவே, வெஸ்பா ஸ்கூட்டர்கள் விலைமிக்கவை. அப்படியிருக்கையில், ஜஸ்டீன் பைபரால் டிசைன் செய்யப்பட்ட ஸ்கூட்டருக்கு எந்த அளவிற்கு அதிகமான விலை நிர்ணயிக்கப்படும் என்பதை நான் கூற வேண்டியதில்லை. வெஸ்பா மற்றும் ஜஸ்டீன் பைபரின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையாக சுமார் ரூ.6.46 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் வெளியீடு செய்யப்பட்ட இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே உலகளவில் விற்பனை செய்ய வெஸ்பா திட்டமிட்டது. இதனால் நம் இந்திய சந்தைக்காகவும் மிகவும் குறைவான எண்ணிக்கையிலான வெஸ்பா ஜஸ்டீன் பைபர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனைக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. எந்த அளவிற்கு என்றால், இந்த ஸ்கூட்டர் 10க்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
ஜஸ்டீன் பைபர் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் உள்ள அனைத்து வெஸ்பா டீலர்ஷிப் மையங்களிலும் துவங்கப்பட்டு உள்ளன. வெஸ்பாவின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்திலும் புக் செய்யலாம். இந்த ஸ்கூட்டர் சிபியூ முறையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது. அதாவது, ஸ்கூட்டர் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

வெஸ்பா 150 ஸ்கூட்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஜஸ்டீன் பைபர் ஸ்கூட்டர் முற்றிலுமாக வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. ஸ்கூட்டரின் இருக்கை, ஹேண்டில்பார் க்ரிப்புகள் மற்றும் 12-இன்ச் அலாய் சக்கரங்களின் ரிம்கள் கூட பளிச்சிடும் வெள்ளை நிறத்தில் உள்ளன. இவ்வளவு ஏன், வெஸ்பா பிராண்ட் லோகோ கூட வெள்ளை நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்க மட்கார்ட், டயர்கள் மற்றும் என்ஜின் மட்டுமே கருப்பு நிறத்தில் உள்ளன.
மற்றப்படி, ஸ்டைலில் எந்த மாற்றமும் இல்லை. வெஸ்பா 150 ஸ்கூட்டரின் தோற்றம் அப்படியே தொடரப்பட்டுள்ளது. அதேபோல், எல்இடி விளக்குகள் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியை கொண்ட முழு-வண்ண டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் கூட வெஸ்பா 150 ஸ்கூட்டரில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளன. சர்வதேச சந்தைகளில், 50சிசி, 125சிசி மற்றும் 150சிசி-களில் வெஸ்பா ஜஸ்டீன் பைபர் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நம் இந்தியாவில் 150சிசி-இல் மட்டுமே இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஜஸ்டீன் பைபருக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு மத்தியில் இந்த லிமிடெட் எடிசன் வெஸ்பா ஸ்கூட்டர் கவனத்தை பெறலாம். ஆனால் அவர்களில் எத்தனை பேர் சுமார் ரூ.6.46 லட்சத்தில் இந்த ஸ்கூட்டரை வாங்க தயாராக இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ரூ.6.46 லட்சம் என்பதும் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலையே. ஆன்-ரோடு விலை ரூ.7 லட்சத்தை கடந்துவிடும். ரூ.7 லட்சத்தில் ஒரு ஸ்கூட்டரை வாங்க எத்தனை ஆசைப்படுகிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவியுங்கள்.


Click it and Unblock the Notifications









