ராயல் என்பீல்டை ஒரு கை பார்க்க திட்டவட்டம்! டபிள்யூ175 மாடலின் விலையை மிக கடுமையாக குறைத்த கவாஸாகி..
கவாஸாகி (Kawasaki) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி இருசக்கர வாகன மாடல்களில் டபிள்யூ 175 (W175)-ம் ஒன்று. இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக இந்தியாவில் அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த பைக் மாடலின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டே கவாஸாகி தற்போது சிறப்பு தள்ளுபடி விலையை அறிவித்து இருக்கின்றது. நிறுவனத்தின் மலிவு விலை பைக் மாடலாக டபிள்யூ 175 இருக்கின்றது. இந்த நிலையிலேயே அதன் விலையில் மேலும் தள்ளுபடி வழங்கப்பட்டு இருக்கின்றது.

நிறுவனத்தின் இந்த செயல் டபிள்யூ 175 பைக்கை இன்னும் மலிவு விலைக் கொண்டதாக மாற்றி இருக்கின்றது. ரூ. 10 ஆயிரத்திற்கான வவுச்சரையே நிறுவனம் இந்த பைக்கிற்கு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. இந்த வவுச்சர் வாயிலாக டபிள்யூ 175 மாடலின் எக்ஸ்-ஷோரூம் விலையில் 10 ஆயிரம் ரூபாயைக் குறைத்துக் கொள்ள முடியும்.
இது ஓர் குறுகிய கால சலுகை ஆகும். ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மட்டுமே இது கிடைக்கும். இதற்கு பின்னர் இந்த சலுகை வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலாவும், இதேமாதிரியான ஓர் விலை தள்ளுபடியையே தற்போது அறிவித்து இருக்கின்றது.

தனது எஸ்1 ப்ரோ மாடலுக்கே விலை தள்ளுபடியை அறிவித்து இருக்கின்றது. 8 ஆயிரம் ரூபாயை அது டிஸ்கவுண்ட் செய்திருக்கின்றது. இந்த விலை தள்ளுபடியும் இன்னும் ஒரு சில தினங்களுக்கு மட்டுமே வழங்கப்பட இருக்கின்றது. ஏப்ரல் 16ஆம் தேதி வரை மட்டுமே சலுகை விலையில் எஸ்1 ப்ரோவை வாங்கிக் கொள்ள முடியும்.
இந்த நிலையிலேயே ஓலாவைத் தொடர்ந்து கவாஸாகியும் சிறப்பு பண தள்ளுபடி திட்டத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. வாடிக்கையாளர்களைக் கூடுதலாக ஈர்க்கும் விதமாக இந்த சலுகையை அது அறிவித்து இருக்கின்றது. கவாஸாகி டபிள்யூ 175 இரு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்பெஷல் எடிசன் ஆகியவையே அவை ஆகும்.

ஸ்டாண்டர்டு வெர்ஷனின் விலை ரூ. 1.47 லட்சம் ஆகும். அதுவே ஸ்பெஷல் எடிசனுக்கு ரூ. 1.49 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஸ்பெஷல் எடிசனில் லேசாக அலங்கரிப்பு அம்சங்கள் கூடுதலாக வழங்கப்பட்டு இருக்கும். இதன் விளைவாகவே அது சற்று காஸ்ட்லியானதாக காட்சியளிக்கின்றது.
ரெட்ரோ ஸ்டைல் இருசக்கர வாகனமே கவாஸாகி டபிள்யூ 175. டபிள்யூ 800 மாடலை தழுவியே இந்த பைக்கை நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. வட்ட வடிவ ஹெட்லைட், டியர் ட்ராப் வடிவ ஃப்யூவல் டேங்க், ஒற்றை துண்டு இருக்கை, பில்லியன் ரைடருக்கான கைப் பிடி, ஒயர் ஸ்போக் அலாய் வீல் என எக்கசக்க அம்சங்கள் டபிள்யூ 175இல் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இவையே ரெட்ரோ தோற்றத்தை டபிள்யூ 175க்கு வழங்குகின்றது. இந்த பைக்கில் 177 சிசி சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாருடன் சேர்த்து 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இது 7,500 ஆர்பிஎம்மில் 12.8 பிஎச்பி பவரையும், 6 ஆர்பிஎம்மில் 13.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
இத்தகைய சூப்பரான திறனை வெளியேற்றக் கூடிய டபிள்யூ 175 பைக்கின் பக்கமே வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு கவாஸாகி சிறப்பு விலை தள்ளுபடியை அறிவித்து இருக்கின்றது. இந்த பைக்கை கவாஸாகி நிறுவனம் முதல் முறையாக இந்திய சந்தையில் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரிலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
ஆனால், இதன் டெலிவரி பணிகள் டிசம்பர் 2022லேயே தொடங்கப்பட்டன. ராயல் என்பீல்டுக்கு போட்டியாக மலிவு விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டும், இதன் விற்பனை சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய அளவில் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இந்த பைக்கைப் போலவே ராயல் என்பீல்டுக்கு டஃப் கொடுக்கும் விதமாக கவாஸாகி நிறுவனம் டபிள்யூ800 (W800) பைக் மாடலை விற்பனைக்குக் களமிறக்கியது.
ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு இதற்கு வரவேற்புக் கிடைக்கவில்லை. இதன் விளைவாக அண்மையில் இந்த பைக் மாடலை இந்தியாவில் இருந்தே அகற்றியது. அதாவது, டபிள்யூ800 பைக் விற்பனையில் இருந்து முழுமையாக வெளியேற்றிவிட்டது. ஆகையால், டபிள்யூ 800 இப்போது விற்பனைக்குக் கிடைக்காத சூழல் உருவாகி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
கவாஸாகி போல இன்னும் பல நிறுவனங்கள் ராயல் என்பீல்டு போட்டியாக சில மாடல்களை விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றன. அவை அனைத்திற்கும் ராயல் என்பீல்டுக்கு கிடைப்பதைபோல நல்ல வரவேற்புக் கிடைத்ததில்லை. இதன் விளைவாகவே அவை வந்த வேகத்திலேயே சந்தையை விட்டு வெளியேறி இருக்கின்றன. அந்தவகையிலேயே சமீபத்தில் டபிள்யூ 800ம் நாட்டைவிட்டு வெளியேறியது.


Click it and Unblock the Notifications









