கவாஸாகி பிராண்டில் பைக்கை வாங்கும் நேரம் வந்தாச்சு!! இந்த தேதிக்குள் வாங்கினால் இவ்ளோ காசு மிச்சம்!
கவாஸாகி இந்தியா (Kawasaki India) நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில மோட்டார்சைக்கிள்களுக்கு குறுகிய கால சலுகையை அறிவித்துள்ளது. அதனை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் பல வருடங்களாக மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துவரும் கவாஸாகி இந்தியா, சந்தைக்கு ஏற்ப சமீப காலமாக தான் செயல்பட ஆரம்பித்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டில் நிஞ்சா 300 என்ற பைக்கை கேடிஎம் 390 ட்யூக் பைக்கிற்கு மாற்றாக அறிமுகப்படுத்தியது. பின்னர் சில மாதங்களில், நிஞ்சா 300-ஐ காட்டிலும் விலை குறைவான கவாஸாகி பைக் இந்திய சந்தைக்கு வந்தது. அதுதான், கவாஸாகி டபிள்யூ175 ஆகும்.

இந்த இரு விலை குறைவான பைக்குகளுக்கு தான் தற்போது கவாஸாகி நிறுவனம் குறுகிய கால சலுகையை 'நல்ல நேர கூப்பன் சலுகை' (Good Time Voucher Benefit) என்ற பெயரில் அறிவித்துள்ளது. இதன்படி கவாஸாகி நிஞ்சா 300 பைக்கை 15,000 பணம் தள்ளுபடி உடனும், கவாஸாகி டபிள்யூ175 பைக்கை ரூ.10,000 பணம் தள்ளுபடி உடனும் வாங்கலாம். அதாவது இந்த பைக்குகளின் விலைகளில் மேற்குறிப்பிடப்பட்ட தொகை கழிக்கப்படும்.
குறுகிய காலம் என கூறுவதை விட, இன்னும் சில நாட்களுக்கான சலுகைகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் வருகிற மே 31ஆம் தேதி வரையில் மட்டுமே பணம் தள்ளுபடி அமலில் இருக்கும். இந்த பணம் தள்ளுபடி சலுகை ஆனது கடந்த மே 1ஆம் தேதியில் இருந்தே நிஞ்சா 300 மற்றும் டபிள்யூ175 பைக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாக கவாஸாகி நிறுவனம் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த சலுகை குறிப்பாக கவாஸாகி நிஞ்சா 300 பைக்கிற்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே வழங்கப்பட்டு வருவதாக கவாஸாகியின் டீலர்ஷிப் ஷோரூம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நிஞ்சா 300 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையானது தற்சமயம் ரூ.3.40 லட்சமாக உள்ளது. ஆனால் சலுகையின்படி, ரூ.3.25 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்த பைக்கை வாங்கலாம். ஆன்-ரோடு விலையில் ஆர்டிஓ கட்டணங்கள், இன்ஸ்சூரன்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
நிஞ்சா 300 பைக்கை லைம் க்ரீன், கேண்டி லைம் க்ரீன் மற்றும் எபோனி என்ற 3 விதமான பெயிண்ட் தேர்வுகளில் பெறலாம். இந்த பைக்கில் 296சிசி இணையான இரட்டை லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. மறுப்பக்கம், கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.1.49 லட்சம் வரையில் உள்ளன. சலுகை தொகை கழிய ரூ.1.37 லட்சம் - ரூ.1.39 லட்சத்தில் இந்த பைக்கை வாங்கலாம்.

கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கவாஸாகி டபிள்யூ175 பைக்கில் 177சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் ஃப்யுல்-இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 12.8 பிஎச்பி மற்றும் 13.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த பைக்கின் எடை வெறும் 135 கிலோ மட்டுமே.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டுமென்றால், இவ்வாறான சலுகைகள் அவசியமாகும். அதிலிலும் கவாஸாகி சந்தைக்கேற்ப சரியாக விலை குறைவான பைக்குகளுக்கு பணம் தள்ளுபடியை அறிவித்து இருப்பது அருமையான விஷயமாகும். இதன் பிறகாவது மேற்கூறப்பட்ட கவாஸாகி பைக்குகளின் விற்பனை அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









