வெறும் ரூ.1.22 லட்சம் இருந்தால் போதும்!! கவாஸாகியில் ஒரு பைக் வாங்கும் கனவை நிஜமாக்கிடலாம்!
கவாஸாகி டபிள்யூ175 (Kawasaki W175) மோட்டார்சைக்கிளின் விலை அதிரடியாக ரூ.25,000 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக, கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் விலை ரூ.1.22 இலட்சத்திற்கு குறைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களையும், இந்த கவாஸாகி பைக்கை பற்றியும் முழுமையாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு போட்டியாக, கவாஸாகி நிறுவனம் கடந்த 2022ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்திய மோட்டார்சைக்கிள் டபிள்யூ175. இந்தியாவில் விலை குறைவான கவாஸாகி பைக்காக டபிள்யூ175 விளங்குகிறது. இதற்கிடையில், இந்த பைக்கில் புதிய வேரியண்ட் 'டபிள்யூ175 ஸ்ட்ரீட்' என்ற பெயரில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியன் பைக் வாரம் 2023 கண்காட்சியின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட கவாஸாகி டபிள்யூ175 ஸ்ட்ரீட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.35 இலட்சமாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம், இந்தியாவின் விலை குறைவான கவாஸாகி பைக்காக டபிள்யூ175 ஸ்ட்ரீட் விளங்கியது. இந்த நிலையில், ஸ்டாண்டர்ட் கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.25,000 குறைக்கப்பட்டுள்ளது.
அறிமுகம் செய்யப்பட்ட புதியதில் கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.47 லட்சத்தில் இருந்து ரூ.1.49 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டன. இந்த நிலையில், கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை அதிரடியாக சுமார் ரூ.25,000 குறைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.22 லட்சத்தில் இருந்து ரூ.1.31 லட்சம் வரையில் குறைந்துள்ளது.

அத்துடன், டபிள்யூ175 பைக்கிற்கு மெட்டாலிக் ஓசன் நீலம் மற்றும் மெட்டாலிக் கிராபைட் கிரே என 2 புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மெட்டாலிக் ஓசன் நீல பெயிண்ட் ஆப்ஷனில் பைக்கின் விலை ரூ.1.31 லட்சம் மற்றும் மெட்டாலிக் கிராபைட் கிரே பெயிண்ட் ஆப்ஷனில் ரூ.1.29 லட்சம் ஆகும். ஏற்கனவே, எபோனி மற்றும் கேண்டி பெர்சிம்மன் சிவப்பு என இரு பெயிண்ட் ஆப்ஷன்களில் டபிள்யூ175 பைக் கிடைத்துவந்தது.
இதன் மூலமாக, கவாஸாகி டபிள்யூ175 பைக்கின் பெயிண்ட் ஆப்ஷன்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இந்த அப்டேட்களை தவிர்த்து, இந்த கவாஸாகி பைக்கில் வேறெந்த அப்டேட்டும் இல்லை. டபிள்யூ175 பைக்கில் 177சிசி ஏர்-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 13 எச்பி மற்றும் 13.2 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த பைக்கில் வயர்-ஸ்போக் சக்கரங்கள் மற்றும் ட்யூப்டு டயர்கள் பொருத்தப்படுகின்றன. இவை மட்டுமின்றி, விலை குறைவான கவாஸாகி பைக் என்பதால், ஹலோஜன் ஹெட்லைட், சிறிய எல்சிடி உடன் அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் என இந்த பைக்கில் வழங்கப்படும் மற்ற அம்சங்களும் விலை குறைவானவைகளாகவே உள்ளன.
இந்த பைக்கில் முன்பக்கத்தில் 80/100-17 அளவிலும், பின்பக்கத்தில் 100/90-17 அளவிலும் டயர்கள் பொருத்தப்படுகின்றன. கவாஸாகி டபிள்யூ175 பைக்கிற்கு விற்பனையில் ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350, டிவிஎஸ் ரோனின் மற்றும் யமஹா எஃப்.இசட்-எக்ஸ் பைக்குகள் போட்டியாக விளங்குகின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் விட குறைவான விலையில் கிடைக்கக்கூடிய பைக்காக கவாஸாகி மாடல் விளங்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கவாஸாகி பைக் என்றாலே பல இலட்சங்கள் கொடுத்துதான் வாங்க வேண்டும் என்கிற நிலை மாறி, தற்சமயம் சில இலட்சங்களிலேயே கிடைக்க ஆரம்பித்துள்ளன. இருப்பினும், ஹலோஜன் ஹெட்லேம்ப், ஸ்போக்டு சக்கரங்கள் என விலை குறைவான பாகங்கள் வழங்கப்படுவது சற்று குறையாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications









