Keeway பைக்கை வாங்குறதுக்கு இதைவிட ஒரு சிறந்த நேரம் கிடைக்காது... ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் காசை சேமிக்கலாம்!!
யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் இரு 300சிசி பைக்குகளின் விலைகள் இந்தியாவில் அதிரடியாக ரூ.54,000 வரையில் குறைக்கப்பட்டுள்ளன. எந்த 300சிசி பைக்குகள் அவை? எதற்காக இந்த திடீர் விலை குறைப்பு என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.
சீனாவை சேர்ந்த ஓர் குழுமத்தின் கீழ் செயல்படும் ஹங்கேரியன் மோட்டார்சைக்கிள் பிராண்டான கீவே (Keeway) பலத்த யோசனைகளுக்கு பிறகு ஒருவழியாக கடந்த ஆண்டில் இந்தியாவில் பைக் விற்பனையில் இறங்கியது. இந்தியாவில் பெனெல்லி நிறுவனத்துடன் இணைந்து கீவே நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சந்தையில் நுழைந்த பிறகு பல மோட்டார்சைக்கிள்கள் கீவே பிராண்டில் இருந்து இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுள், கீவே நிறுவனம் இந்தியாவில் களமிறக்கிய 300சிசி பைக்குகள் கே300 என் மற்றும் கே300 ஆர் ஆகும். இதில் கே300 என் என்பது பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் கேடிஎம்250 ட்யூக் பைக்குகளை போன்று ஸ்ட்ரீட் நாக்டு மோட்டார்சைக்கிளாகும். அதுவே, கே300 ஆர் என்பது டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 மற்றும் பிஎம்டபிள்யூ ஜி310 ஆர்ஆர் பைக்குகளை போன்று பேனல்கள் நிறைந்த ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள் ஆகும்.
இவை இரண்டின் விலைகளையும் கீவே நிறுவனம் குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது. இதன்படி, கீவே கே300 என் பைக்கை இனி ரூ.2.55 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்தே வாடிக்கையாளர்கள் வாங்கலாம். முன்பு, கே300 என் நாக்டு பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2.65 லட்சமாக இருந்தது. இந்த வகையில், கீவே கே300 என் பைக்கின் ஆரம்ப விலை ரூ.10,000 வரையில் குறைந்துள்ளது.
இந்த பைக்கின் மற்ற வேரியண்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.30,000 வரையில் குறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, கே300 என் பைக்கின் அதிகப்பட்ச எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.2.85 லட்சமாக குறைந்துள்ளது. மறுப்பக்கம், கீவே கே300 ஆர் பைக்கை இனி ரூ.2.65 லட்சத்தில் இருந்து வாங்கலாம். இந்த விலையில் கிடைக்கும் கே300 ஆர் பைக் வேரியண்ட்டின் முந்தைய எக்ஸ்-ஷோரூம் விலை இதனை காட்டிலும் சுமார் ரூ.54,000 அதிகமாக ரூ.3.19 லட்சமாக இருந்தது.
கீவே கே300 என் மற்றும் கே300 ஆர் பைக்குகள் இரண்டும் ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தின் அடிப்படையிலேயே உருவாக்கப்படுகின்றன. இதனால் இவை இரண்டிலும் ஒரே மாதிரியான என்ஜினே பொருத்தப்படுகிறது. இந்த இரு 300சிசி பைக்குகளின் 292.4சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 8,750 ஆர்பிஎம்-இல் 27.5 எச்பி மற்றும் 7,000 ஆர்பிஎம்-இல் 25 என்எம் டார்க் திறன் வரையிலாக இயக்க ஆற்றலை பெறலாம்.
இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அத்துடன் ஸ்லிப்பர்-க்ளட்ச்சும் இந்த பைக்குகளில் வழங்கப்படுகிறது. பிரேக்கிங் பணியை இந்த இரு பைக்குகளில் முன் & பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் கவனித்து கொள்கின்றன. அத்துடன் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ்-ஸும் கூடுதல் பாதுகாப்பிற்கு இந்த பைக்குகளில் வழங்கப்படுகிறது. இதில் நாக்டு மாடலான கே300என்-இல் 12.5 லிட்டரிலும், கே300ஆர்-இல் 12 லிட்டரிலும் பெட்ரோல் டேங்க் இடம்பெறுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
கீவே பல நாடுகளில் மோட்டார்சைக்கிள்கள் விற்பனையில் கோலோச்சி வருகிறது. அந்த வரிசையில் இந்தியாவையும் இணைக்கும் முனைப்பில் உள்ள இந்த ஹங்கேரியன் நிறுவனம் அதன் ஒரு நடவடிக்கையாகவே தற்போது தனது 300சிசி பைக்குகளின் விலைகளை அதிரடியாக குறைத்துள்ளது. ரூ.54,000 விலை குறைப்பு என்பது உண்மையில் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கக்கூடிய விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








