போலீஸ்காரர்களே வாங்கும்போது நாமும் தைரியமா வாங்கலாம்!! பிரச்சனை எதுவும் வராது என்று நம்புவோம்...
அடேங்கப்பா... போலீஸார் கூட எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குகின்றனரா! என ஆச்சிரியப்பட வைக்கும் வகையில் கேரள மாநில போலீஸார் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை தங்களது ரோந்து பணிகளுக்காக வாங்கியுள்ளனர். எந்த பிராண்டின் எலக்ட்ரிக் பைக்குகள் அவை? அவற்றின் சிறப்பம்சங்கள் என்ன? என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலக சுற்றுச்சூழல் தினமாக கடந்த ஜூன் 5ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அத்துடன், பசுமையான, சுகாதாரமான சுற்றுச்சூழலை எவ்வாறு பேணுவது என்பது பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்கும் விதமாக உலக சுற்றுச்சூழல் வாரமாக ஜுன் 5ஆம் தேதியில் இருந்து பல்வேறு புதிய திட்டங்கள் பல்வேறு அமைப்புகளால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த வகையில், கேரள மாநிலத்தின் கொச்சி நகர போலீஸார் தங்களது ரோந்து பணிகளுக்காக ரெவோல்ட் ஆர்வி400 (Revolt RV400) என்ற எலக்ட்ரிக் பைக்குகளை டெலிவிரி பெற்றுள்ளனர். மேலும் இதுகுறித்த படங்களையும் இணையத்தில் வெளியிட்டுள்ளனர். கொச்சி போலீஸார் தங்களது ரோந்து வாகனங்கள் படையில் 50 எலக்ட்ரிக் பைக்குகளை இணைக்கும் முனைப்பில் உள்ளனர்.
அதன் ஒரு பகுதியாகவே தற்போது ரெவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்குகளை பெற்றுள்ளனர். மேலும், கூடுதலாக இதேபோன்ற 30 எலக்ட்ரிக் பைக்குகளுக்கு ஆர்டர் செய்துள்ளனர். இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் டெலிவிரியை கொடியசைத்து துவங்கி வைத்த எர்ணாக்குளம் முதன்மை மாவட்ட போலீஸ் அதிகாரி கே. சேது ராமன், எங்களது பசுமை முயற்சியின் ஒரு பகுதியாக உலக சுற்றுச்சூழல் தினத்தில் இந்த எலக்ட்ரிக் பைக்குகள் டெலிவிரி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கொச்சி போலீஸாரிடம் ஏற்கனவே உள்ள மோட்டார்சைக்கிள்கள் பழையதாகி விட்டதாகவும், ஆதலால் புதிய ரோந்து வாகனங்கள் அவசியம் எனவும் கூறியுள்ள சேது ராமன், கொச்சி போன்ற பெரிய நகரங்களில் போலீஸாரின் ரோந்து வாகனங்களாக மோட்டார்சைக்கிள்கள் இருப்பது முக்கியம் என தெரிவித்துள்ளார். போலீஸாரின் ரோந்து பணிகளுக்கு ஏற்ப இந்த ரெவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகளில் சில பல கஸ்டமைஸ்ட் வேலைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ரெவோல்ட் எலக்ட்ரிக் பைக்குகள் அவற்றின் கட்டிங்-எட்ஜ் தொழிற்நுட்பம், இரட்டை பேட்டரி அமைப்புகள் மற்றும் மாசு இல்லா செயல்திறன் உள்ளிட்டவற்றினால் மக்கள் மத்தியில் தனித்து கவனத்தை பெற்று வருகின்றன. ரெவோல்ட்டின் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கில் 3kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரியின் மூலமாக எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 6.7 பிஎச்பி மற்றும் 54 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

ஈக்கோ, ஸ்போர்ட் மற்றும் பவர் என்ற 3 ரைடிங் மோட்கள் இந்த எலக்ட்ரிக் பைக்கில் வழங்கப்படுகின்றன. ஆர்வி400 பைக்கின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்ப 4.5 மணிநேரங்கள் வரையில் தேவைப்படும். பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். தொழிற்நுட்ப அம்சங்களாக எல்இடி ஹெட்லேம்ப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், சாவியில்லா ஸ்டார்ட் உள்ளிட்ட வசதிகள் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கில் கிடைக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்கள் தான் நமது எதிர்காலம், இவி விற்பனை அதிகரித்து வருகிறது என ஆஹா... ஓஹோ என கூறினாலும், எலக்ட்ரிக் வாகனங்களை வாங்கவும், அவற்றை பயன்படுத்தவும் சிலர் தயக்கம் காட்டுவதை மறுக்க முடியாது. ஏனெனில் அதற்கேற்ப சில பல சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் போலீஸாரே இவ்வாறு தைரியமாக முன்வந்து எலக்ட்ரிக் பைக்குகள் வாங்குவதால் அவர்களை பின்பற்றி நாமும் ரெவோல்ட் பைக்குகளை வாங்கலாம்.


Click it and Unblock the Notifications









