ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும், 89கிமீ தொலைவிற்கு ஓடும்!! சந்திரயான்-3 வெற்றியின் நினைவாக ஸ்பெஷல் இ-ஸ்கூட்டர்!
லெக்ட்ரிக்ஸ் இவி (Lectrix EV) நிறுவனம் புதிய எல்.எக்ஸ்.எஸ் மூன்ஷைன் லிமிடெட் எடிசன் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் பயணத்தில் அனைத்தும் திட்டமிட்டப்படி சரியாக நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணியளவில் சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்து விக்ரம் லூனார் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் சாஃப்ட் லேண்டிங் ஆனது. நிலவு பயணத்திலேயே கடினமான விஷயமாக கருதப்படும் இந்த லேண்டிங் வெற்றிக்கரமாக நடந்துவிட்டதால் இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதிலுமே தற்போது இதை பற்றிய பேச்சாகவே உள்ளது.

இந்தியாவில் பல்வேறு நிகழ்ச்சிகள் சந்திரயான் 3 விண்கல பயணத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்டு வருகின்றன. ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், அல்ட்ராவயலட் நிறுவனம் அதன் எஃப்77 சூப்பர் எலக்ட்ரிக் பைக்கில் புதிய ஸ்பேஸ் எடிசனை சமீபத்தில் அறிமுகம் செய்தது உங்களில் சிலர் அறிந்திருக்கலாம். இந்த வகையில், மற்றொரு எலக்ட்ரிக் 2-வீலர் ஸ்டார்ட்-அப் நிறுவனமான லெக்ட்ரிக்ஸ் இவி அதன் எல்.எக்ஸ்.எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய மூன்ஷைன் லிமிடெட் எடிசனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.97,999 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. புதிய எல்.எக்ஸ்.எஸ் மூன்ஷைன் லிமிடெட எடிசன் ஸ்கூட்டர் நீண்ட காலத்திற்கு விற்பனையில் இருக்காது. வெறும் 384 ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. இதனால்தான் ஸ்கூட்டரின் பெயரில் லிமிடெட் எடிசன் என சேர்க்கப்பட்டு உள்ளது.
வழக்கமான லெக்ட்ரிக்ஸ் எல்.எக்ஸ்.எஸ் 2.0 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் ஸ்கூட்டர் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ஹேண்டில்பாருக்கு கீழே இருந்து முன்பக்க மட்கார்ட்டின் முனை வரையில் வெள்ளை & கோல்டு நிறங்களில் இரு கோடுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கோடுகளை ஸ்கூட்டரின் சைடு பேனல்களிலும் பார்க்க முடிகிறது.
இந்த கோடுகள் இருள் நிறைந்த விண்வெளி பகுதியில் இஸ்ரோவின் சந்திரயான் 3 விண்கலம் செல்வதுப் போல் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. இவற்றுடன், கோல்டு நிறங்களை ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் வேறு சில பாகங்களிலும் பார்க்க முடிகிறது. இன்னும் சொல்லப்போனால், லெக்ட்ரிக்ஸ் இவி நிறுவனத்தின் லோகோ கோல்டு நிறத்திற்கு மாற்றப்பட்டு உள்ளது. 'மூன்ஷைன்' ஸ்டிக்கரை ஆங்கிலத்தில் ஸ்கூட்டரின் முன்பக்கத்திலும், இருக்கைக்கு அடியில் சைடு பேனலிலும் பார்க்க முடிகிறது.
மற்றப்படி, எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரியில் எந்த மாற்றமும் இல்லை. லெக்ட்ரிக்ஸ் எல்.எக்ஸ்.எஸ் மூன்ஷைன் லிமிடெட் எடிசன் ஸ்கூட்டரில் 48 வோல்ட் லித்தியம்-இரும்பு பேட்டரி மற்றும் 1200 வாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதே மோட்டார் & பேட்டரி தான் ஸ்டாண்டர்ட் எல்.எக்ஸ்.எஸ் 2.0 எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் பொருத்தப்படுகிறது.
இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 89கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். இதற்கு நீங்கள் ஸ்கூட்டரை 3- 4 மணிநேரம் சார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். 0-இல் இருந்து 25kmph வேகத்தை எட்ட 5 வினாடிகளை எடுத்துக் கொள்ளும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 50kmph ஆகும். சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் காயில் சுருள்களும் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியை இவ்வாறு பல்வேறு கார்ப்பிரேட் நிறுவனங்களும் கொண்டாடுவது மகிழ்ச்சியை தருகிறது. இதற்காக, ஸ்கூட்டரின் தோற்றத்தை மாற்றியது மட்டுமின்றி, வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகளும் வழங்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்பது எங்களது கருத்து. புதிய லெக்ட்ரிக்ஸ் எல்.எக்ஸ்.எஸ் மூன்ஷைன் லிமிடெட் எடிசனை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications








