மேட்-இன்-இந்தியா பைக்குக்கு எங்கே போனாலும் மவுசு இருக்கு!! மலேசியாவுக்கே நாம தான் தயாரிச்சு அனுப்ப போறோம்!
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் டிரையம்ப் 400 பைக்குகள் மலேசியா நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இந்தியாவில் உள்ள விலையை காட்டிலும் டபுள் மடங்கு விலையில் இந்த டிரையம்ப் பைக்குகள் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது இந்த பைக்கை வாங்க நினைத்த வாடிக்கையாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் விலை குறைவான வாகனங்களுக்கே மார்க்கெட் எப்போதும் சிறப்பாக இருக்கும் என்பதை நான் கூற வேண்டியது இல்லை. ஏனெனில், நம் நாட்டில் பெரும்பாலான மக்களின் பொருளாதார நிலை அவ்வாறானதாக உள்ளது. இதனை புரிந்துக் கொண்டு டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விலை குறைவான மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டது.

அதன்படி, சில மாதங்களுக்கு முன்பு ஸ்க்ராம்ப்ளர் 400 மற்றும் ஸ்பீடு 400 என்ற இரு 400சிசி பைக்குகள் களமிறக்கப்பட்டன. இவை இரண்டும்தான் இந்தியாவில் தற்போதைக்கு டிரையம்ப் மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்யும் விலை குறைவான மோட்டார்சைக்கிள்கள் ஆகும். இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் இவற்றின் விலைகளை ரூ.2 இலட்சம் - ரூ.3 இலட்சத்திற்கு உள்ளாக டிரையம்ப் நிறுவனத்தால் நிர்ணயிக்க முடிந்தது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இந்த பைக்குகளை பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய டிரையம்ப் திட்டமிட்டுள்ளது. அதில் ஒரு வெளிநாடாக, மலேசியாவில் டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. 2024 டிரையம்ப் ஸ்பீடு 400 பைக்கின் ஆரம்ப விலை மலேசியாவில் 26,900 மலேசியன் ரிங்கிட் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.4.78 லட்சம் ஆகும். மறுப்பக்கம், ஸ்க்ராம்ப்ளர் 400 பைக்கின் விலை அங்கு 29,900 மலேசியன் ரிங்கிட் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதன் இந்திய ரூபாய் மதிப்பு ரூ.5.31 லட்சம் ஆகும். ஆனால், இந்த இரு பைக்குகளும் இந்தியாவில் இதனை காட்டிலும் பாதி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக, ஸ்பீடு 400 பைக் இந்தியாவில் வெறும் ரூ.2.33 லட்சத்தில் இருந்து கிடைக்கிறது.
ஸ்க்ராம்ப்ளர் 400 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் இந்தியாவில் ரூ.2.63 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன. இந்த சிங்கிள்-சிலிண்டர் டிரையம்ப் பைக்குகள் மலேசியாவுக்கு முன்னதாக, ஏற்கனவே பிலிப்பைன்ஸ் மற்றும் யுனிடெட் கிங்டெமில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன. இவற்றை தொடர்ந்து, வருகிற 2024ஆம் ஆண்டில் இன்னும் பல நாடுகளில் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டிரையம்ப் திட்டமிட்டுள்ளது.

டிரையம்ப் ஸ்பீடு 400 மற்றும் ஸ்க்ராம்ப்ளர் 400 இவை இரண்டும் ஒரே மாதிரியான சேசிஸில் உருவாக்கப்படுகின்றன. இதன் காரணமாக, நீளம், அகலம் உள்ளிட்ட பரிணாம அளவுகளிலும், என்ஜினிலும் இவை இரண்டும் ஒரு மாதிரியானவை ஆகவே உள்ளன. இருப்பினும், தோற்றத்தில் இரண்டிற்கும் இடையே சில வித்தியாசங்களை டிரையம்ப் கொண்டுவந்துள்ளது.
அதாவது, ஸ்பீடு 400 பைக்கில் சிங்கிள்-பீஸ் இருக்கை வழங்கப்படுகிறது. அதுவே, ஸ்க்ராம்ப்ளர் 400 பைக்கில் இரண்டாக பிளவுப்பட்ட இருக்கை செட்-அப் கொடுக்கப்படுகிறது. இவை இரண்டிலும் 398.15சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், DOHC என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 40 பிஎஸ் மற்றும் 39.5 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவை காட்டிலும் டபுள் மடங்கு விலையில் அதே டிரையம்ப் பைக்குகள் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம், பைக்குகள் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படுவதே ஆகும். ஏனெனில், வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனத்தை தங்களது நாட்டில் இறக்குமதி செய்வதற்கு மலேசிய அரசாங்கம் கூடுதல் வரியை விதித்து இருக்கும்.


Click it and Unblock the Notifications









