ஓலா, ஏத்தர் உட்பட 4நிறுவனங்களுக்கு பிரித்து கொடுக்க 500 கோடி ரூபாயை ஒதுக்கிய மத்திய அரசு.. இவ்ளோ பெரிய தொகையா!
முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), ஏத்தர் எனெர்ஜி (Ather Energy), டிவிஎஸ் (TVS) மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்காக ரூ. 500 கோடியை மத்திய அரசு ரிலீஸ் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஃபேம் 2 திட்டத்தின்கீழ் மத்திய அரசு முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு பிரித்துக் கொடுப்பதற்காக ரூ. 500 கோடியை ரிலீஸ் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆஃப்-போர்டு சார்ஜர்களுக்கும்/சார்ஜிங் அக்ஸசரீஸ்களுக்கும் தனியாக பில் போட்டு கூடுதல் கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்திருப்பது சமீபத்திய ஆய்வுகளின் வாயிலாக தெரிய வந்தது.

கூடுதலாக வசூல் செய்யப்பட்ட அந்த தொகையையே வாடிக்கையாளர்களுக்கே திருப்பி வழங்க நிறுவனங்கள் ஒப்புக் கொண்ட ன. இதைத்தொடர்ந்தே, ஃபேம் 2 திட்டத்தின்கீழ் சப்சைடி (மானியம்) நிலுவைத் தொகையான ரூ. 500 கோடியை எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கு கொடுக்க மத்திய அரசு ரிலீஸ் செய்திருக்கின்றது.
இந்தியாவில் அதிக மானிய தொகையை பெறவிருக்கும் முன்னணி நிறுவனமாக ஓலா எலெக்ட்ரிக் இருக்கின்றது. ரூ. 370 கோடி சப்சைடி தொகை அதற்கு வழங்கப்பட இருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக தொகையை ஏத்தர் எனெர்ஜி பெற உள்ளது. ரூ. 275 கோடி வரை ஏத்தருக்கு வழங்கப்பட இருக்கின்றது.

இதேபோல், டிவிஎஸ் நிறுவனத்திற்கு ரூ. 150 கோடியும், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு ரூ. 28-30 கோடியும் மானியமாக மத்திய அரசாங்கம் வழங்க இருக்கின்றது. இந்த நிலையிலேயே ரூ. 500 கோடியை அரசு முதல் கட்டமாக ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கனரக தொழில்துறை அமைச்சகம் வாயிலாகவே இந்த பெரும் தொகை ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த 500 கோடி ரூபாயை தொடர்ந்து மீதமுள்ள தொகை அடுத்த கட்டமாக விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய அரசு ஃபேம் 2 திட்டத்தின்கீழ் ரூ. 10 ஆயிரம் கோடியை ஒதுக்கியது.
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு இந்த திட்டத்தின்கீழே மானியம் உள்ளிட்ட பிற சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மின்சார வாகனங்களுக்கு மானியம் வழங்குவது மட்டுமே இந்த திட்டத்தின் நோக்கமல்ல, மின்சார வாகனங்களுக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி கொடுப்பதும் ஃபேம் 2 திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் காரணத்தினாலேயே ரூ. 10 ஆயிரம் கோடி எனும் மாபெரும் தொகையை மத்திய அரசு ஒதுக்கியது. இதுதவிர, எலெக்ட்ரிக் வாகனம் உற்பத்தி மற்றும் மின்சார வாகனங்கள் சார்ந்த சாதனங்களின் உற்பத்தியும் ஃபேம் 2 திட்டம் வாயிலாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. இதன் விளைவாக நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலையும், அதை வாங்குவோரின் எண்ணிக்கையும் பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசின் ஃபேம்2 திட்டத்தினாலேயே நாட்டில் மின்சார இருசக்கர வாகனங்களின் விலை பலமடங்கு குறைவாக உள்ளது. இதன் காரணத்தினாலேயே ஆரம்ப கட்டத்தில் எங்கோ ஓர் மூலையில் காட்சியளித்து வந்த எலெக்ட்ரிக் வாகனங்கள் தற்போது அதிகளவில் தென்பட தொடங்கி இருக்கின்றன. இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக நிலுவையை மத்திய அரசு ஒதுக்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








