இந்தியாவே இந்த போட்டிக்காகதான் காத்து கெடந்துச்சு.. மின்னல் போல சீறி பாய தொடங்கிய மோட்டார்சைக்கிள்கள்!
மிகப் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மோட்டோஜிபி பாரத் 2023 (MotoGP Bharat 2023) நாட்டில் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் இதுவரை பல்வேறு மோட்டார் வாகன பந்தயங்கள் நடைபெற்று இருக்கின்றன. ஆனால், மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
இதனால்தான் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களுடன் இணைந்து பொதுமக்கள் பலரும் போட்டி நடைபெறும் இந்த நாளை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையிலேயே மோட்டோஜிபி பந்தயம் இந்தியாவில் தொடங்கி உள்ளது. இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த நிகழ்வு இந்தியாவில் நடைபெற இருக்கின்றது.

அதாவது, 24ஆம் தேதி வரை மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் இந்தியாவில் நடைபெறும். பாஜக ஆளும் மாநிலங்களில் ஒன்றான உபி-யிலேயே இந்த போட்டிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. கிரேட்டர் நொய்டாவின் யமுனா விரைவுச்சாலைக்கு அருகே அமைந்துள்ள புத் சர்வதேச பந்தய களத்திலேயே இந்த அனல் பறக்கும் போட்டிகள் இன்று தொடங்கி அடுத்து இரண்டு நாட்களுக்கும் நடைபெற உள்ளன.
இது ஓர் சர்வதேச போட்டி என்பதால் பார்வையாளர்கள் லட்சக் கணக்கில் இங்கு குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே டிக்கெட்டுகள் பல விற்று தீர்ந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. போட்டியை முன்னிட்டு முன் ஏற்பாடுகள் அனைத்தும் புத் சர்வதேச விளையாட்டு அரங்கத்தில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
குறிப்பாக, போட்டியைக் காண வருபவர்களுக்கான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டு இருக்கின்றன. உணவு, கழிவறை, பார்க்கிங் வசதி என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்தியாவில் நடைபெறும் முதல் மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் என்பதால் வெளிநாட்டவர்களுடன் சேர்ந்து உள் நாட்டு இருசக்கர வாகன ஆர்வலர்கள் பலரும் கலந்துக் கொண்டு வருகின்றனர்.
மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் ஓர் உலக புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் பந்தயங்களில் ஒன்றாகும். பொதுவாக இந்த போட்டி பல்வேறு நாடுகளில் பல மாதங்களாக தொடர்ச்சியாக நடைபெறும். அந்தவகையில், கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கிய இந்த போட்டி கடந்த ஆறு மாதங்களாக வெற்றிகரமாக பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே இந்தியாவிலும் இந்த போட்டிகள் தொடங்கி இருக்கின்றன. இந்த போட்டிகள் நடைபெறும் 13ஆவது நாடே நமது இந்தியா ஆகும். முதல் நாளான இன்று வீரர்கள் அனைவரும் பயிற்சியில் மட்டுமே ஈடுபட இருக்கின்றனர். இதன் வாயிலாக புத் பந்தய களத்தை பற்றி அவர்களால் வெகுவாக அறிந்துக் கொள்ள முடியும்.
இதுதவிர இரண்டாம் நாளான நாளைய தினத்திலும் வீரர்களுக்கு முதல் மூன்று சுற்றுகள் பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, அன்றைய தினத்திலேயே தகுதிச் சுற்றுகளும் தொடங்க இருக்கின்றன. சுமார் 11.20 மணிக்குள் நாளைய தினத்தில் தகுதி சுற்றுகள் தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது.
இதைத்தொடர்ந்து, போட்டியின் மூன்றாம் நாளான செப்டம்பர் 24லேயே மோட்டோ ஜிபி பாரத் 2023இன் இறுதி போட்டி நடைபெற இருக்கின்றது. முதலில் வார்ம் அப், அடுத்தது ரைடர் ஃபேன்களின் பரேட் என இவற்றைத் தொடர்ந்தே, விருவிருப்பான பந்தயம் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் 11 அணிகளை சேர்ந்த மொத்தம் 22 ரைடர்கள் கலந்துக் கொள்ள இருக்கின்றனர்.
மான்ஸ்டர் எனெர்ஜி யமஹா மோட்டோஜிபி டீமைச் சேர்ந்த ஃபாபியோ குவார்டாராரோ, அப்ரில்லா ரேசிங் டீமைச் சேர்ந்த அல்விக்ஸ் எஸ்பார்காரோ மற்றும் டுகாட்டி லெனோவோ டீமைச் சேர்ந்த ஃப்ரான்செஸ்கோ பகானையா உள்ளிட்ட உலகின் முன்னணி பைக் ரேஸர்கள் மோட்டோஜிபி பாரத் 2023 பந்தயங்களில் கலந்துக் கொள்ள உள்ளனர்.
போட்டி நடைபெறும் புத் சர்வதேச பந்தய களத்தில் ஒரே நேரத்தில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் பேரால் கலந்துக் கொண்டு போட்டியைக் காண முடியும். டிக்கெட் விலை ரூ. 800 தொடங்கி 40 ஆயிரம் ரூபாய் வரையில் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
800 ரூபாய் டிக்கெட்டுகள் ஏற்கனவே முழுமையாக விற்று தீர்ந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளையில், 2500லும் 40 ஆயிரத்திலும் சில டிக்கெட்டுகள் இன்னும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இந்த டிக்கெட்டுகளை புக் மை ஷோ செயலி அல்லது மோட்டோ ஜிபியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் சென்று புக் செய்துக் கொள்ள முடியும். நேரில் காண முடியாதவர்கள் மோட்டோஜிபி ஷோவை ஸ்போர்ட்ஸ் 18 டிவி மற்றும் ஜியோ சினிமா செயலியில் கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயம் தொடங்கி இருப்பது, வரும் காலங்களில் கிரிக்கெட்டைப் போலவே மோட்டார் ஸ்போர்ட்ஸ்களும் வெகு விமரிசையாக நடைபெறும் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்தியாவில் சந்து, பொந்துகளில் எல்லாம் குட்டி குட்டி ரேசர்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அவர்களின் தனித்திறமையைக் காண்பிக்க இந்த நிலை பேருதவியாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








