இந்தியாவில் மீண்டும் மோட்டோஜிபி!! உலகின் தவிர்க்க முடியாத நாடாக இந்தியா மாறுது!
மோட்டோஜிபி (MotoGP) மோட்டார்சைக்கிள் பந்தயம் இந்தியாவில் மீண்டும் அடுத்த 2024ஆம் ஆண்டிலும் நடைபெற உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் சமீபத்தில் தான் முதல்முறையாக மோட்டோஜிபி நடத்தப்பட்ட நிலையில், மீண்டும் அடுத்த வருடத்தில் 2வது முறையாக பாரத் மோட்டோஜிபி நடத்தப்பட உள்ளது.
இந்தியா, உலகளவில் ஓர் தவிர்க்க முடியாத நாடாக வளர்ந்து வருகிறது. விளையாட்டு துறையை பொறுத்தவரையில், கிரிக்கெட்டில் இந்தியா கடந்த பல வருடங்களாக முன்னிலையில் உள்ளதை பற்றி நான் கூற வேண்டியதில்லை. அதேபோல், பைக் & கார் பந்தயங்களிலும் நம் நாடு ஆர்வமாக ஈடுப்படுகிறது. குறிப்பாக, கடந்த 10 வருடங்களில் பல்வேறு பந்தயங்கள் இந்தியாவில் நடைபெற்றுள்ளன.

ஃபார்முலா 1 கார் பந்தயங்கள் அடுத்தடுத்ததாக இந்தியாவில் நடத்தப்பட்ட நிலையில், அதேபோன்று தற்போது மோட்டோஜிபி என்ற மோட்டார்சைக்கிள் பந்தயமும் அடுத்தடுத்து நடக்க உள்ளது. 2023ஆம் ஆண்டிற்கான மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் இந்தியாவின் மோட்டோஜிபி பார்த் பந்தயங்களும் சேர்க்கப்பட்டன.
அதன்படி, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் 3 நாட்களுக்கு 2023 மோட்டோஜிபி பாரத் பந்தயங்கள் டெல்லிக்கு அருகே உள்ள புத் சர்வதேச பந்தய களத்தில் நடைபெற்றன. இந்தியாவில் முதல்முறையாக நடைபெற்ற மோட்டோஜிபி பந்தயம் இதுதான். கிட்டத்தட்ட 1 லட்ச மக்கள் நேரில் பார்வையிட்ட மோட்டோஜிபி பாரத் பந்தயங்கள் உலகளவில் கவனத்தை பெற்றன.

இந்தியாவில் நடைபெற்ற மோட்டோஜிபி பந்தயங்கள் சுமார் 195 நாடுகளில் ஒளிப்பரப்பப்பட்டன. இந்த பந்தயத்தை சார்ந்து, கிட்டத்தட்ட ரூ.930 கோடிக்கு வணிகம் நடைபெற்றது. மோட்டோஜிபி பந்தயம் நடந்து முடிந்து 2 நாட்கள் மட்டுமே ஆன நிலையில், சர்வதேச மோட்டார்சைக்கிள் கூட்டமைப்பு இந்தியாவில் மீண்டும் மோட்டோஜிபி 2024இல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளது.
மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள் பொதுவாக ஒரு ஆண்டில் பல்வேறு நாடுகளில் நடைபெறும். இந்த வருடத்தில் கூட, மார்ச்சில் துவங்கிய இந்த பந்தயங்கள் ஒவ்வொரு நாடாக கடந்து இந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் நடைபெற்றது. அதேபோன்று, அடுத்த 2024இல் 16வது நாடாக இந்தியாவில் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள் நடைபெற உள்ளன.

கடந்த செப்.22 முதல் 24 வரையில் நடைபெற்ற மோட்டோஜிபி பாரத் பந்தயத்தை இந்திய மக்களுடன் சேர்ந்து கிட்டத்தட்ட 15,000 வெளிநாட்டு மக்களும் பார்வையிட்டனர். அப்போது, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிப்பலிக்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்தியாவை தொடர்ந்து மோட்டோஜிபி கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் அடுத்ததாக ஜப்பானில் நடைபெறவுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 2வது முறையாக மோட்டோஜிபி நடைபெறவுள்ளது சந்தோஷமான விஷயமென்றால், அது அடுத்தடுத்த ஆண்டுகளில் நடைபெற இருப்பது இன்னும் கூடுதல் மகிழ்ச்சியான விஷயம் ஆகும். அத்துடன், 2வது முறையாக இந்தியாவில் நடக்கும் மோட்டோஜிபியை இன்னும் கூடுதல் பார்வையாளர்கள் கண்டு ரசிப்பார்கள்.


Click it and Unblock the Notifications









