இந்தியாவின் பைக் என்றால் சும்மாவா... ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளை வாங்கி குவித்துள்ள இந்தியர்கள்!!
கடந்த மார்ச் 31ஆம் தேதியோடு முடிவுற்ற 2022-23 நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மோட்டார்சைக்கிள்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஒவ்வொரு நிதியாண்டு முடிந்த பின்பும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது கணக்கு வழக்குகளை பார்க்கும். கடந்த நிதியாண்டில் எவ்வளவு இலாபத்தை ஈட்டியுள்ளோம், முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் அது எவ்வளவு அதிகம் என்பவற்றையும் ஆராய்ந்து பார்க்கும். இலாபம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என்றால், அது குறித்த விபரங்களையும் சம்பந்தப்பட்ட நிறுவனம் வெளியிடுவது வழக்கம்.

மறுப்பக்கம் நமது டிரைவ்ஸ்பார்க் போன்ற ஊடக நிறுவனங்கள், ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் கடந்த நிதியாண்டில் எத்தனை வாகனங்களை விற்பனை செய்துள்ளது என்ற கணக்கீட்டையும் அதுவரையில் ஒவ்வொரு மாதமும் கிடைக்கப்பெற்ற விபரங்கள் மூலம் கணக்கிட்டு பார்ப்போம். அந்த வகையில் கடந்த 2022-23 நிதியாண்டில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட முதல் 10 பைக்குகளை இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம்.
இந்தியாவில் 2-வீலர் விற்பனை என்றாலே அதில் எப்போதும் முதலிடத்தில் கோலோச்சும் பைக் ஹீரோ ஸ்பிளெண்டர் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்படும் இந்த பைக் கடந்த 2022-23 நிதியாண்டில் மொத்தம் சுமார் 32,55,744 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதுவே இதற்கு முந்தைய 2021-22 நிதியாண்டில் 26,65,386 ஸ்பிளெண்டர் பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில் பார்த்தோமேயானால், முந்தைய நிதியாண்டை காட்டிலும் கடந்த நிதியாண்டில் ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை சுமார் 22.15%, அதாவது 5,90,358 யூனிட்கள் அதிகரித்துள்ளது. 2021-22 நிதியாண்டில் கொரோனா வைரஸ் பரவலின் 2ஆம் அலையின் தாக்கம் இருந்ததால், ஸ்பிளெண்டர் மட்டுமின்றி பல்வேறு பைக்குகளின் விற்பனை 2021-22 நிதியாண்டை காட்டிலும் கடந்த நிதியாண்டில் அதிகமாக உள்ளது. கடந்த நிதியாண்டில் விற்பனை செய்யப்பட்ட மொத்த பைக்குகளில் 38.64% ஸ்பிளெண்டர் ஆகும்.
அதாவது, கடந்த நிதியாண்டில் விற்பனையான 100 பைக்குகளில் ஏறக்குறைய 39 பைக்குகள் ஹீரோ ஸ்பிளெண்டர் ஆகும். இந்த வரிசையில் ஸ்பிளெண்டருக்கு அடுத்து 2வது இடத்தில் ஹோண்டா சிபி ஷைன் 12,09,025 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது. சிபி ஷைனின் இந்த விற்பனையை அதன் 2021-22 நிதியாண்டின் விற்பனை எண்ணிக்கை உடன் ஒப்பிடுகையில் 1,07,341 அதிகம் ஆகும். ஏனெனில் அந்த நிதியாண்டில் 11,01,684 சிபி ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதற்கடுத்து 3வது, 4வது மற்றும் 5வது இடங்களில் மற்றொரு ஹீரோ தயாரிப்பாக ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ், பஜாஜ் பல்சர் மற்றும் பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் இடம்பெற்றுள்ளன. இவற்றின் கடந்த 2022-23 நிதியாண்டின் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 10,52,043, 10,29,057 மற்றும் 5,34,017 ஆகும். இவைதான் தற்போதைக்கு இந்தியாவின் டாப்-5 மோட்டார்சைக்கிள்கள். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 5 இடங்களில் முறையே டிவிஎஸ் அப்பாச்சி, ராயல் என்பீல்டு கிளாசிக் 350, ஹீரோ கிளாமர், டிவிஎஸ் ரைடர் மற்றும் யமஹா எஃப்.இசட் பைக்குகள் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவின் பைக் என அழைக்கப்படும் ஹீரோ ஸ்பிளெண்டர் மறுபடியும் 2-வீலரில் தனது ஆதிக்கத்தை கடந்த நிதியாண்டில் வெளிக்காட்டி உள்ளது. முதலிடத்தில் ஸ்பிளெண்டர் தான் வரும் என்பது நாம் எதிர்பார்த்ததுதான். ஆனால் 2வது இடத்தில் எச்.எஃப் டீலக்ஸை முந்திக்கொண்டு ஹோண்டாவின் தயாரிப்பான சிபி ஷைன் இந்த முறை வந்துள்ளது. அதேபோன்று, 9வது இடத்தில் உள்ள டிவிஎஸ் ரைடர் பைக்கின் விற்பனையும் கவனிக்கத்தக்க அளவில் அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications









