மாசத்துக்கு அசால்ட்டா 2.5 லட்சம் பைக் விற்பனையாகுது!! ஸ்பிளெண்டர் பைக்கை வாங்க மக்கள் எப்பவுமே ரெடி போல!
புதியது, புதியதாக ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு வந்தாலும், பைக்குகளுக்கு இருக்கும் கிரேஸ் எப்போதும் குறையாது. அதிலிலும், நம் இந்தியர்கள் கியர்களை மாற்றிக்கொண்டு, 2-வீலரை ஓட்டவே மிகவும் விரும்புகின்றனர். இப்படிப்பட்ட நம் நாட்டில் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 மோட்டார்சைக்கிள்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
வழக்கம்போல் கடந்த நவம்பர் மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளாக ஹீரோ ஸ்பிளெண்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்பிளெண்டர் பைக்குகளின் எண்ணிக்கை 2,50,786 ஆகும். இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருப்பினும், இந்த எண்ணிக்கை உண்மையில் 2022 நவம்பர் மாதத்தை காட்டிலும் கணிசமாக குறைவாகும்.

ஏனெனில், அந்த மாதத்தில் 14,802 யூனிட்கள் அதிகமாக 2,65,588 ஸ்பிளெண்டர் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதேபோல், 2023 அக்டோபர் மாதத்திலும் சுமார் 3,11,031 ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, அக்டோபர் மாதத்தை காட்டிலும் கடந்த நவம்பர் மாதத்தில் சுமார் 60,245 ஸ்பிளெண்டர் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஹீரோ ஸ்பிளெண்டருக்கு அடுத்து 2வது இடத்தில் ஹோண்டா ஷைன் உள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டருக்கு அடுத்து, இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் நம்பிக்கைக்குரிய 2-வீலராக ஷைன் பைக் விளங்குகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தம் 1,55,943 ஷைன் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் 1,14,965 ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், ஷைன் பைக்குகளின் விற்பனை ஆனது 35.64%, அதாவது கிட்டத்தட்ட 41 ஆயிரம் ஷைன் பைக்குகள் அதிகமாக கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், முந்தைய அக்டோபர் மாதத்தை விட கடந்த நவம்பரில் 7,644 ஷைன் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
பஜாஜ் பல்சர் இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 1,30,403 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு நவம்பரில் 72,735 பல்சர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி, இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சுமார் 57,668 பல்சர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

4வது இடத்தில், மற்றொரு பிரபலமான ஹீரோ பைக்கான எச்.எஃப் டீலக்ஸ் உள்ளது. 1,16,421 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2022 நவம்பர் மாதத்தில் வெறும் 65,074 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளை மட்டுமே ஹீரோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இவை நான்கு தான், இந்தியாவில் பலரால் வாங்கப்படும் ஃபெண்டாஸ்டிக்-4 பைக்குகளாக உள்ளன.
ஏனெனில், இவற்றிற்கு அடுத்து உள்ள பஜாஜ் பிளாட்டினாவின் விற்பனை எண்ணிக்கை ஆனது பெரிய இடைவெளி உடன் உள்ளது. பிளாட்டினா பைக்குகளின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 60,607 ஆகும். 6வது மற்றும் 7வது இடங்களில் டிவிஎஸ் பைக்குகளான அப்பாச்சி மற்றும் ரைடர் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 41,025 மற்றும் 39,829 ஆகும். கடைசி 3 இடங்களில் ஹீரோ பேஷன் (34,750), ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (30,264) மற்றும் ஹீரோ கிளாமர் (20,926) பைக்குகள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டாப்-10 லிஸ்ட்டில் 4 ஹீரோ பைக்குகள் உள்ளன. அப்படியென்றால், இந்திய பைக் சந்தையில் ஹீரோ மோட்டோகார்பின் ஆதிக்கம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை அறியலாம். இந்த 10 பைக்குகளில் முதலிடத்தில் உள்ள ஸ்பிளெண்டரை தவிர்த்து மற்றவை அனைத்தின் விற்பனையும் 2022 நவம்பரை விட கடந்த நவம்பரில் அதிகரித்துள்ளன. ஆனால், 2023 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளை தவிர்த்து மற்றவை அனைத்தின் விற்பனையும் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications









