கேடிஎம் பைக்கிற்கே டஃப் கொடுக்கும் ஸ்டைலில் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்! 120கிமீ தூரம் வரை டிராவல் பண்ண முடியுமா
ஓர் புதுமுக மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் அதன் முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. எம்எக்ஸ் மோட்டோ (mXmoto) எனும் நிறுவனம் அதன் எம்எக்ஸ்9 (mX9) எனும் எலெக்ட்ரிக் பைக்கையே விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
தினசரி பயன்பாட்டிற்கு உகந்த ஓர் டூ-வீரலாக இதனை அந்நிறுவனம் தயார் செய்து இருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 1.46 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் பைக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கிமீ முதல் 140 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும்.

மேலும், இந்த பைக்கை பூஜ்ஜியத்தில் இருந்து 90 சதவீதம் வரை சார்ஜ் செய்ய வெறும் மூன்று மணி நேரங்களே போதுமானதாக இருக்கின்றது. இந்த வாகனத்தை முழுமையாக சார்ஜ் செய்யவே வெறும் 1.5 யூனிட் மட்டுமே மின்சாரம் செலவாகும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
அப்படி என்றால் ஒரு கிமீ டிராவல் செய்ய ஒரு சில பைசாக்கள் மட்டுமே நமக்கு செலவாகும் என்பது தெளிவாகத் தெரிகின்றது. இந்த வாகனம் அதிகபட்சமாக மணிக்கு 80 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது என்பது கூடுதல் சிறப்பு தகவல் ஆகும்.

இந்த சூப்பரான திறனுக்காக 4000 வாட் பிஎல்டிசி ஹப் மோட்டார் (4000 watt BLDC hub motor) பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 580 ஆர்பிஎம்மில் 140 என்எம் டார்க் வரை வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வசதிகளுடன் சேர்த்து இந்த இ-பைக்கில் பிரேக் ரீஜெனரேஷன் அம்சமும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த அம்சம் இழக்கப்படும் மின்சாரத்தை லேசாக மீட்டெடுத்து கூடுதல் ரேஞ்ஜை பெற்றுக் கொள்ள உதவியாக இருக்கும். இதைத்தொடர்ந்து, மிக சிறந்த சஸ்பென்ஷன் செட்-அப்பிற்காக அப்-சைடு டவுன் ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் மோனோஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்தியாவின் கரடு, முரடான சாலைகளைச் சமாளிக்க இந்த சஸ்பென்ஷன் ஏற்றவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த மோனோஷாக் அட்ஜெஸ்டபிள் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் மற்றும் பின் பக்க வீல்களில் டிஸ்க்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதேபோல் சிறப்பம்சங்கள் விஷயத்திலும் இந்த பைக் நம்மை வேற லெவலில் மிரட்டும் வகையில் இருக்கின்றது.
செல்போனை சா்ஜ் செய்து கொள்ள யுஎஸ்பி போர்ட், எல்இடி டர்ன் இன்டிகேட்டர்கள், நேவிகேஷன் வசதிக் கொண்ட டிஎஃப்டி திரை, ப்ளூடூத் இணைப்பு அம்சம், க்ரூஸ் கன்ட்ரோல், பார்க் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் ஆகிய வசதிகள் இந்த எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக்கின் தோற்றம் கேடிஎம் ட்யூக் பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் இருக்கின்றது. அந்த அளவிற்கு மிகவும் நேர்த்தியான ஸ்போர்ட்டி தோற்றத்தில் இந்த எலெக்ட்ரிக் பைக்கை எம்எக்ஸ் மோட்டோ உருவாக்கி இருக்கின்றது. ஆகையால், சிறப்பம்சம், தொழில்நுட்பம் மற்றும் ரேஞ்ஜ் திறன் என அனைத்திலும் இந்த மின்சார பைக் மிக சிறந்ததாக இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்க நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த நிலையிலேயே மலிவு விலையில் தன்னுடைய எலெக்ட்ரிக் பைக்கை எம்எக்ஸ் மோட்டோ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. மிகவும் ஸ்டைலான பைக்கை விரும்புவோர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









