ஆகஸ்டு 30ல் அறிமுகமாகிறது ராயல் என்பீல்டின் புதிய பைக்... இதோட சத்தம் எப்படி இருக்கும் தெரியுமா?
இந்திய இருசக்கர வாகன உலகின் முன்னணி நிறுவனமான ராயல் என்பீல்டு வெகுவிரைவில் நாட்டில் புதிய மோட்டார்சைக்கிளை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களையே இந்தப் பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ராயல் என்பீல்டு நிறுவனம் வெகுவிரைவில் புதிய இருசக்கர வாகனத்தை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய தயாரிப்பு என்றால் புதுமுக தயாரிப்பு அல்ல, ஏற்கனவே இந்தியர்களுக்குப் பரீட்சையமான ஓர் இருசக்கர வாகன மாடலையே நிறுவனம் புதிய தலைமுறையாக விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

புல்லட் 350இன் புதிய தலைமுறையையே நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதற்காக நிறுவனம் வரும் ஆகஸ்டு 30ம் தேதியைக் குறித்திருக்கின்றது. இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. இந்தியர்களின் எதிர்பார்ப்பில் பெரிதும் இடம் பிடித்திருக்கும் இருசக்கர வாகன மாடல்களில் புதிய தலைமுறை புல்லட் 350-ம் ஒன்றாகும்.
இதன் வருகையே தற்போது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. வெகுநாட்களாகத் தீவிர பலபரீட்சையில் இந்தப் பைக் ஈடுபடுத்தப்பட்டு வந்தநிலையில், அது இப்போதே விற்பனைக்குத் தயாராகி இருக்கின்றது. இந்த நிலையிலேயே இதன் வருகை நாள்பற்றிய விபரம் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. தனது புகழ்பெற்ற ஜே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை புல்லட் 350-யை உருவாக்கி இருக்கின்றது.

ஆகையால், நவீன கால அம்சங்கள் பலவற்றை இந்தப் பைக்கில் எதிர்பார்க்கலாம். இதேபோல், தற்போது விற்பனையில் இருக்கும் புல்லட் 350 இன் தோற்றத்திலிருந்து கணிசமான அளவு மாறுபட்டுக் காட்சியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதையேக் கடந்த காலங்களில் வெளியாகிய ஸ்பை படங்களும் உறுதி செய்கின்றன.
இதேபோல், எஞ்ஜினிலும் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், அதன் சத்தம் முன்பைக் காட்டிலும் தற்போது சற்று மெல்லியதாகவும், அதேவேளையில், கூடுதல் ரம்மியமானதாகவும் இருக்கும் எனத் தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் வீடியோவே தற்போது டுவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

ராயல் என்பீல்டு நிறுவனம் ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கையையும், ஸ்போக்குகள் கொண்ட ரிம்மையுமே புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கில் பயன்படுத்தி இருக்கின்றது. இத்துடன், கிளாசிக் 350 பைக்கில் வழங்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான அம்சமான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அனலாக் ஸ்பீடோ மீட்டர் மற்றும் சிறிய டிஜிட்டல் ரீட்-அவுட்டும் புதிய தலைமுறை புல்லட் 350-இல் எதிர்பார்க்கப்படுகின்றது.
கிளாசிக் 350-இன் சேஸிஸே புல்லட் 350-யிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், சிறந்த சஸ்பென்ஷனுக்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ட்வின் கேஸ் சார்ஜட் ஷாக் அப்சார்களும் வழங்கப்பட்டிருக்கும் எனக் கூறப்படுகின்றது. இது அலாதியான ரைடு அனுபவத்தைப் பெற மிக உதவியாக இருக்கும்.
தொடர்ந்து, மிகச் சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்குவதற்காக இந்தப் பைக்கில் ராயல் என்பீல்டு டிரம் பிரேக்குடன் டிஸ்க் பிரேக் வசதியையும் வழங்க இருக்கின்றது. இதுமாதிரியான இன்னும் பல சிறப்பு வசதிகள் இந்த மோட்டார்சைக்கிளில் எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய தலைமுறை என்பதால் இன்னும் பல எதிர்பார்க்காத அம்சங்களையும் இந்தப் பைக்கில் எதிர்பார்க்கலாம். இதன் விலை விபரம் இப்போது வரை அறிவிக்கப்படவில்லை. ஆகஸ்டு 30 அறிமுகத்தின்போது அதுபற்றிய விபரங்களை நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கை மட்டுமில்லைங்க. இன்னும் சில புதிய மற்றும் புதுமுக தயாரிப்புகளையும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றன. இவையும் அடுத்தடுத்து எனப் புல்லட் 350-ஐத் தொடர்ந்து விற்பனைக்கு வர இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









