புதிய மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக் vs டார்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்... இரண்டில் சிறந்தது எது தெரியுமா?
இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகள் தயாரிக்கப்படுகின்றனவா என சில வருடங்களுக்கு முன்னர் வேண்டுமாயின் ஆச்சிரியமாக நாம் கேட்டிருக்கலாம். ஆனால் இன்று முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் பைக்குகளும் உள்ளன. அவற்றுள் ஒன்றாக சமீபத்தில் சந்தைக்கு வந்த மேட்டர் ஏரா 5000 எலக்ட்ரிக் பைக்கிற்கும், டார்க் க்ராடோஸ் எலக்ட்ரிக் பைக்கிற்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஆற்றல் வழங்கி
எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் பேட்டரி விஷயத்தில் இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளுள் மேட்டர் ஏரா எளிதாக வெற்றி பெற்றுவிடும். ஏனெனில் இதன் 10.5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரில் லிக்யுடு-கூல்டு தொழிற்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே இத்தகைய தொழிற்நுட்பத்தை கொண்ட முதல் எலக்ட்ரிக் பைக் இதுதான் என கூறப்படுகிறது. இந்த தொழிற்நுட்பத்தின் மூலமாக ஏரா இ-பைக்கில் அதிகப்பட்சமாக 150கிமீ வரையிலான ரேஞ்சை பெற முடியும்.

மறுப்பக்கம், டார்க் க்ராடோஸில் அதிகப்பட்சமாக ஈக்கோ மோடில் 120கிமீ வரையிலான மைலேஜ் கிடைக்கிறது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் தொடர்ச்சியாக 4 கிலோவாட்ஸ் ஆற்றலையும், அதிகப்பட்சமாக 7.5 கிலோவாட்ஸ் ஆற்றலையும் வெளிப்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த மோட்டாருக்கு ஆற்றலை வழங்க 4kWh பேட்டரி க்ராடோஸில் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு போட்டியாக களமிறக்கப்பட்டுள்ள மேட்டர் ஏராவில் 5kWh லிக்யுடு-கூல்டு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், புதிய மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக்கின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதில் 4-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, எலக்ட்ரிக் பைக் & ஸ்கூட்டர்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தான் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தியாவிலேயே முதல் எலக்ட்ரிக் பைக்காக மேனுவல் கியர்பாக்ஸ் ஏரா பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. டார்க் க்ராடோஸில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்படுகிறது.
இயந்திர பாகங்கள்
எலக்ட்ரிக் மோட்டார் விஷயத்தில் மட்டுமின்றி, பிரேக்கிங்கிலும் புதிய மேட்டர் ஏரா எலக்ட்ரிக் பைக் ஆனது டார்க் க்ராடோஸை காட்டிலும் முன்னிலை வகிக்கிறது. ஏனெனில் க்ராடோஸில் ஏபிஎஸ் எதுவும் வழங்கப்படுவதில்லை. ஆனால் ஏராவில் ட்யூவல்-சேனல் ஏபிஎஸ் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்காக கொடுக்கப்பட்டுள்ளது. மற்றப்படி இந்த இரு எலக்ட்ரிக் பைக்கிலும் பிரேக்கிற்கு இரு சக்கரங்களிலும் டிஸ்க் தான் வழங்கப்படுகிறது.
சஸ்பென்ஷனை பொறுத்தவரையில் இந்த இரு இ-பைக்கிலும் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க் உள்ள நிலையில், பின்பக்க சஸ்பென்ஷனில் இரண்டும் வேறுப்படுகின்றன. ஏனெனில் புதிய மேட்டர் ஏராவில் வாயு மூலமாக செயல்படக்கூடிய ட்யூவல் ஷாக்கர்கள் பின்பக்க சஸ்பென்ஷனுக்கு பொருத்தப்படுகின்றன. மறுப்பக்கம் டார்க் க்ராடோஸில் மோனோஷாக் பின்பக்கத்தில் சஸ்பென்ஷன் பணியை கவனித்து கொள்கிறது.
தொழிற்நுட்ப வசதிகள்
இன்றைய கால பைக்குகள் அனைத்தும் ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்கக்கூடிய இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரையினை டிஜிட்டல் தரத்திலேயே பெற்று வருகின்றன. அப்படி இருக்கையில், இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளில் டிஜிட்டல் கன்சோல் வழங்கப்படுவது ஒன்றும் ஆச்சிரியமானது இல்லை. அதேபோல் ரைட் மோட்கள் மற்றும் ரிவர்ஸில் இயக்கமும் இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளிலும் உள்ளன. ஆனால் கீலெஸ் எண்ட்ரீ ஆனது மேட்டர் ஏரா மாடலில் மட்டுமே கிடைக்கிறது.
விலை
புதிய ஏரா எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.1,43,999 ஆக மேட்டர் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. அதுவே இதனை காட்டிலும் ரூ.11,500 குறைவாக டார்க் க்ராடோஸின் எக்ஸ்-ஷோரூம் விலையானது ரூ.1,32,499 ஆகும். இந்த ரூ.11,500 கூடுதல் விலைக்கு ஏற்ப லிக்யுடு-கூல்டு பேட்டரி & மோட்டார், ஸ்போர்டியரான பயணத்திற்கு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை புதிய மேட்டர் ஏராவில் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








