பிரீமியம் அவதாரத்தில் புதிய ஜாவா 42-யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்குகள் அறிமுகம்! விலைய தெரிஞ்சிக்காம எதையும் பேசாதீங்க
வாகன உற்பத்தி நிறுவனங்கள் கொஞ்சம் அதிகம் சிறப்பு வசதிகளைக் கொண்டதாக தங்களின் தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டு வரும் எனில், அந்த வாகனம் கட்டாயம் மிக அதிக விலையில் விற்கப்படும் என்கிற வதந்தியும் கூடவே சேர்ந்துக் கிளிம்பிடும். ஆனால், அனைத்து வாகனங்களுக்கும் அது பொருந்தாது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இரு புதிய பைக்குகள் இந்தியாவில் விற்பனைக்கு வந்திருக்கின்றன. அதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் பிரபலமான இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ்-ம் அடங்கும். இந்த இரு நிறுவனங்களும் மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான கிளாசிக் லெஜன்ட்ஸ்-க்கு சொந்தமானவை ஆகும். இந்த பிராண்டின்கீழே இரு நிறுவனங்களும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையிலேயே ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம், இரு புதிய மோட்டார்சைக்கிள்களை புதிய அவதாரத்தில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றன.

ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் பைக் மாடல்களே அவை ஆகும். இந்தியாவில் விஜயதசமி, தீபாவளி ஆகிய பண்டிகைகள் அடுத்தடுத்து வரவிருக்கின்றன. இந்த பண்டிகை தினங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலேயே ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ், புதிய அவதாரத்தில் ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் ஆகியவை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன.
இந்த இரண்டும் புதிய தேர்வுகளாகவே அந்தந்த மாடல்களில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றன. அதாவது, ஏற்கனவே விற்பனையில் இருக்கும் ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர் உடன் இப்போது களமிறக்கப்பட்டு இருக்கும் இரு புதிய பிரீமியம் அவதாரம் கொண்டவையும் விற்பனைக்குக் கிடைக்கும். டூயல் டோனிலேயே புதிய ஜாவா 42 விற்பனைக்கு வந்திருக்கின்றது.
இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.98 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. யெஸ்டி ரோஸ்ட்ர் மாடலுக்கு ரூ. 2.08 லட்சம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், ஜாவா 42-வின் வழக்கமான மாடலை ரூ. 1.89 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்தும், யெஸ்டி ரோட்ஸ்டர் 2.06 லட்ச ரூபாய் விலையிலும் விற்பனைக்குக் கிடைக்கும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
ஜாவா 42 டூயல் டோன் (New Jawa 42 Dual Tone): வழக்கமான ஜாவா 42-வும், இந்த புதிய டூயல் டோன் ஜாவா 42-வும் தோற்றத்தில் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆனால், அலங்கரிப்பு மற்றும் பிரீமியம் லுக்கில் மட்டுமே இரண்டும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன.
அந்தவகையில், கிளியர் லென்ஸ் இன்டிகேட்டர், ஷார்ட்-ஹேங் ஃபென்டர்கள், புதிய குழி விழுந்த ஃப்யூவல் டேங்க், டைமண்ட் கட் அலாய் வீல்கள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் எஞ்ஜின் விஷயத்தில் இரண்டும் ஒரே மாதிரியானதாகவே இருக்கின்றன. அந்தவகையில், 294.7 சிசி லிக்யூடு கூல்டு சிங்கில் சிலிண்டர் எஞ்ஜினே இந்த பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 27.3 பிஎஸ் பவரையும், 26.8 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாரில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
யெஸ்டி ரோட்ஸ்டர் (Yezdi Roadster): ஜாவா 42 டூயல் டோன் தேர்வைப் போலவே இந்த பைக்கும் மிக சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது. அநத்வகையில், 155 மிமீ அளவுள்ள ஃபூட் பெக்குகள், உயரமான ஹேண்டில்-பார் ஆகியவை புதிதாக இந்த பைக்கில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர இன்னும் சில தனித்துவமான அம்சங்களையும் இந்த பைக்கில் யெஸ்டி சேர்த்திருக்கின்றது. இந்த புதிய மாடல் ஏற்கனவே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்த மூன்று நிற தேர்வுகளுடன் சேர்த்து நான்கு நிற தேர்வுகளாக அது விற்பனைக்குக் கிடைக்கும். ரஷ் ஹவர் ரெட் (Rush Hour Red), ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green), லூனார் ஒயிட் (Lunar White) மற்றும் ஷேடோ கிரே (Shadow Grey) ஆகியவையே அவை ஆகும்.
எஞ்ஜினை பொருத்த வரை இந்த பைக்கில் 334 சிசி லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரே வழக்கமான யெஸ்டி ரோட்ஸ்டர் பைக்கிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 29.5 பிஎஸ் மற்றும் 28.9 என்எம் டார்க்கை வெளியேற்றும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பண்டிகை தினங்களில் மிக அதிகளவில் புதிய வாகனங்கள் விற்பனையாகும். இதனால்தான் இந்த கால கட்டத்தில் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு புதிய வாகனங்கள் அல்லது சிறப்பு பதிப்புகளை வாகன உற்பத்தியாளர்கள் விற்பனைக்குக் களமிறக்குகின்றனர். இந்த யுக்தியையே தற்போது ஜாவா நிறுவனம் கையாண்டுக் கொண்டிருக்கின்றது. இவற்றிற்கு புதிய அவதாரத்தைக் காரணம் காட்டி மிக மிக உயரிய அளவில் இல்லாமல் கணிசமான அளவிலேயே விலை அதிகப்படுத்தப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








