புதிய அவதாரம் எடுத்தது புல்லட்! விலை இவ்ளோதானா! ஊருக்குள்ள இனி எல்லாரும் மைனர் மாதிரி சுத்த போறாங்க!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2023 ராயல் என்பீல்டு புல்லட் 350 (2023 Royal Enfield Bullet 350) பைக் இன்று (செப்டம்பர் 1) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் இந்த புதிய மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் தற்போது அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன.
டெலிவரி (Delivery) பணிகள் வரும் செப்டம்பர் 3ம் (September 3) தேதியில் இருந்து தொடங்கப்படவுள்ளன. டிசைனை (Design) பொறுத்தவரையில், பழைய மாடலுடன் ஒப்பிடும்போது, ஒரு சில மாற்றங்களை மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் செய்துள்ளது. இதன்படி புதிய புல்லட் 350 பைக்கின் இருக்கை டிசைன் மாற்றப்பட்டுள்ளது. ஆனால் இது சிங்கிள் பீஸ் இருக்கைதான்.

அதேபோல் எரிபொருள் டேங்க்கின் வடிவமும் சற்றே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முன் பக்க ஃபெண்டரும் சற்று நீளமாக வழங்கப்பட்டுள்ளது. இதை எல்லாம் தவிர்த்து விட்டு பார்த்தால், முந்தைய தலைமுறை மாடலை போலவேதான், புதிய தலைமுறை ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கும் காட்சியளிக்கிறது.
வட்ட வடிவ ஹெட்லைட் மற்றும் க்ரோம் மூலம் அலங்கரிக்கப்பட்ட பாகங்கள் என 'ஓல்டு ஸ்கூல்' டிசைன் அப்படியே தக்க வைக்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் உள்ள ஹண்டர் 350 (Hunter 350), கிளாசிக் 350 (Classic 350) மற்றும் மீட்டியோர் 350 (Meteor 350) ஆகிய பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள அதே இன்ஜின்தான், 2023 புல்லட் 350 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது.

இது 349 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.2 பிஹெச்பி பவர் மற்றும் 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
வசதிகளை (Features) பொறுத்தவரையில், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் போன்ற அம்சங்கள் 2023 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கில் இடம்பெற்றுள்ளன. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பல்வேறு பைக்குகளில் இடம்பெற்றுள்ள ட்ரிப்பர் நேவிகேஷன் (Tripper Navigation) வசதி, புதிய புல்லட் 350 பைக்கில் வழங்கப்படவில்லை.
சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 2023 புல்லட் 350 பைக்கின் ஆரம்ப விலையை (Price) ராயல் என்பீல்டு நிறுவனம் 1,73,562 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் மாடலின் விலை 2,15,801 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். இதன் மூலம் இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2வது விலை குறைவான பைக் என்ற பெருமையை 2023 புல்லட் 350 பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் ஹண்டர் 350 பைக்தான், இந்தியாவில் மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக் ஆகும்.
அதன் விலை 1.50 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இதற்கு அடுத்தபடியாக மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக் என்ற பெருமையை 2023 புல்லட் 350 பெறுகிறது. எனவே வாடிக்கையாளர்கள் மத்தியில், 2023 ராயல் என்பீல்டு புல்லட் 350 பைக்கிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய பைக் சந்தையில் 350 சிசி பைக்குகளுக்கு என மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனம்தான் இந்த செக்மெண்ட்டின் 'கிங்' ஆக உள்ளது. புதிய புல்லட் 350 பைக்கின் வருகை, இந்த செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கரங்களை மேலும் வலிமையாக்கலாம்.


Click it and Unblock the Notifications








