ஷோரூமுக்கு போய் நேரத்தை வீணாக்க வேண்டாம்!! இந்த எலக்ட்ரிக் பைக்கை இனி ஃப்ளிப்கார்ட்டிலேயே புக் செய்யலாம்!
ஃப்ளிப்கார்ட் (Flipkart), இணையம் வழியாக பொருட்களை விற்பனை செய்யும் பிரபல வலைத்தளமான இதில் புதியதாக சில எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. எந்த பிராண்டின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனைக்கு வந்துள்ளன? அவற்றை ஃப்ளிப்கார்ட்டில் எவ்வாறு புக் செய்வது என்பதை இனி பார்க்கலாம்.
ஒடிசி பிராண்ட்டை பற்றி பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்கள் இன்று அதன் ஃப்ளிப்கார்ட் உடனான கூட்டணியை அறிவித்துள்ளது. இந்த கூட்டணியின்படி, வாடிக்கையாளர்கள் ஒடிசி நிறுவனத்தின் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை இனி ஃப்ளிப்கார்ட்டிலேயே புக் செய்து, டெலிவிரி பெறலாம்.

மும்பையை சேர்ந்த ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனத்தில் இருந்து தற்சமயம் ரேஸ் லைட் வி2 மற்றும் இ2கோ என்ற குறை-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும், ஹாவ்க் பிளஸ் என்ற அதி-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரும், வடேர் என்ற எலக்ட்ரிக் பைக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இவை அனைத்தும் இனி ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும். இதுகுறித்த தனது அதிகாரப்பூர்வ அறிக்கையை ஒடிசி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பெங்களூரை தலைமையிடமாக கொண்டு, இந்தியாவின் முன்னணி இணைய சூப்பர் மார்க்கெட்டாக விளங்கும் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்வதன் மூலம் தங்களது எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் எனவும், இதன் மூலமாக அவற்றின் விற்பனை அதிகரிக்கும் எனவும் ஒடிசி எலக்ட்ரிக் நிறுவனம் நம்பிக்கை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அட்டகாசமான சலுகைகளை வழங்கவும் ஃப்ளிப்கார்ட் திட்டமிட்டுள்ளது.

மேலும், ஃப்ளிப்கார்ட் மூலம் எளிதாக ஒடிசி எலக்ட்ரிக் 2-வீலர்களை வாடிக்கையாளர்கள் சொந்தமாக்கி கொள்ளும் வகையிலும் திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன. இதுகுறித்து பேசிய ஒடிசி எலக்ட்ரிக் வாகனங்கள் நிறுவனத்தின் சிஇஓ வோரா, "ஃப்ளிப்கார்ட் உடனான எங்கள் கூட்டணி என்பது பரந்து கிடக்கும் பார்வையாளர்கள் மத்தியில் எங்கள் வளர்ச்சியை விரிவுப்படுத்துவதற்கான ஒரு தந்திர நடவடிக்கை ஆகும்.
மேலும், வாடிக்கையாளர்கள் எலக்ட்ரிக் மொபைலிட்டி மற்றும் நிலையான தொழிற்நுட்பத்தில் சமீபத்திய முன்னேற்றங்களை எளிதாக அணுகவும், ஏற்றுக்கொள்ளவும் இது உதவும்" என்றார். ஒடிசி பிராண்டில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடந்த சில வருடங்களாக விற்பனையில் உள்ளன. ஆனால், எலக்ட்ரிக் பைக்கை இந்த நிறுவனம் கடந்த 2023 மார்ச் மாதத்தில்தான் அறிமுகப்படுத்தியது.

வடேர் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒடிசி எலக்ட்ரிக் பைக்கின் அகமதாபாத் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1,09,999 மற்றும் ரூ.1,29,999 நிர்ணயிக்கப்பட்டது. இது அப்போது நிர்ணயிக்கப்பட்ட அறிமுக விலையே ஆகும். அதன்பின் பைக்கின் விலை அதிகரிக்கப்பட்டு இருக்கலாம். அதேபோல் இவை, மத்திய அரசின் மானியங்களை கழித்த பின்பு அறிவிக்கப்பட்ட விலைகளாகும்.
ஆனால், மத்திய அரசு எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கி வந்த மானியத்தை கடந்த ஜூன் 1ஆம் தேதி கணிசமாக குறைத்து கொண்டுள்ளது. இதனால் ஒடிசி வடேர் எலக்ட்ரிக் பைக்கின் விலை கடந்த ஜூன் மாதத்தில் இருந்து இன்னும் அதிகமாகி இருக்கும். ஒடிசி வடேர் எலக்ட்ரிக் பைக்கில் 3.7kWh திறன் கொண்ட லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஃப்ளிப்கார்ட் கடந்த சில வருடங்களில் அடைந்திருக்கும் வளர்ச்சியை பற்றி நாங்கள் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்பு ஃப்ளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இணைய வலைத்தளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆதலால், எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய ஃப்ளிப்கார்ட் உடன் ஒடிசி கூட்டணி சேர்ந்திருப்பது அருமையான முடிவே.


Click it and Unblock the Notifications









