7 அங்குல ஆண்ட்ராய்டு திரை கொண்ட இந்தியாவின் முதல் இ-பைக் விற்பனைக்கு அறிமுகம்! விலை ரூ. 1.09 லட்சம் மட்டுமே!
இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒடைசி (Odysse)-யும் ஒன்று. இந்த நிறுவனமே புதுமுக எலெக்ட்ரிக் டூ-வீலர் ஒன்றை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்று. வேடெர் (Vader) எனும் புத்தம் புதிய மாடலையே அது விற்பனைக்கு களமிறக்கி இருக்கின்றது. இது ஓர் எலெக்ட்ரிக் பைக் ஆகும்.
இந்த மின்சார பைக்கிற்கு அறிமுக விலையாக ரூ. 1,09,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது அஹமதாபாத்திற்கான எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். பிற மாநிலங்களில் ரூ. 20 ஆயிரம் அதிக விலையில் இந்த எலெக்ட்ரிக் பைக் விற்பனைக்குக் கிடைக்கும். அதாவது, அஹமதாபாத்தை தவிர இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 1,29,999 ரூபாய்க்கு எலெக்ட்ரிக் பைக் விற்கப்பட இருக்கின்றது.

இதுவும் எக்ஸ்-ஷோரூம் மட்டுமே விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த விலை உங்களுக்கு சற்று அதிகமானதாக தெரியலாம். ஆனால், எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்களைக் கேட்ட பின்னர் இந்த கருத்து கட்டாயம் மாறும். வேடெர் எலெக்ட்ரிக் பைக்கில் இந்தியாவின் வேறு எந்த எலெக்ட்ரிக் பைக்கிலும் வழங்கப்படாத ஓர் அம்சமாக 7 அங்குல ஆண்ட்ராய்டு அம்சம் கொண்ட திரை வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த திரையை நம்மால் ஸ்மார்ட் போனை பயன்படுத்திக் கொள்ள முடியும். ப்ளூடூத் இணைப்பு வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக இணைக்கும் பட்சத்தில் செல்போனைக் கொண்டே பைக்கில் உள்ள சில விஷயங்களைக் கன்ட்ரோல் செய்துக் கொள்ள முடியும். குறிப்பாக, பைக் இருக்கும் இடத்தைக் கண்டறிதல், எந்த இடத்தில் பைக் நிகழ்நேரத்தில் இருக்கின்றது என்பது போன்ற பல்வேறு முக்கிய தகவல்களை தெரிந்துக் கொள்ள முடியும்.

இந்த திரை கூகுள் மேப் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய இடங்களுக்கு பயணிக்கும்போது செல்போனுக்கு பதிலாக இந்த திரை வாயிலாக போகும் இடத்தின் வழித் தடம் பற்றிய தகவலை சுலபமாக தெரிந்துக் கொள்ள முடியும். இதுமட்டுமில்லைங்க அதிக ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் பைக்காகவும் வேடெரை ஒடைசி தயார் செய்திருக்கின்றது.
வேடெர் எலெக்ட்ரிக் பைக் ஓர் முழு சார்ஜில் 125 கிமீ தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது. இந்த திறனுக்காக 3.7 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஐபி67 தர சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆகும்.

தூசி மற்றும் தண்ணீர் ஆகியவற்றால் எந்த பாதிப்பையும் இது சந்திக்காது என்பதற்கான சான்றே இது ஆகும். பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய நான்கு மணி நேரங்கள் ஆகும். மோட்டாரை பொருத்த வரையில் 3,000 வாட்ஸ் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டாரே வேடெரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் 4.50 KW பவரையும், 170 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். இந்த மோட்டாரால் 128 கிலோ வரையிலான எடையுள்ள பொருட்களை இழுத்துச் செல்ல முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

மூன்று விதமான ரைடிங் மோட்கள் இ-பைக்கில் வழங்கப்பட்டு உள்ளன. மூன்றும் முன்னோக்கி செல்வதற்கான ரைடிங் மோட்கள் ஆகும். இதுதவிர, பார்க்கிங் மோட் மற்றும் ரிவர்ஸ் மோட் ஆகியவையும் எலெக்ட்ரிக் பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன், சிஏஎன் (CAN) கம்யூனிகேஷன் வசதிக் கொண்ட ஸ்மார்ட் கன்ட்ரோலரும் வேடெரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த பைக் ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். மிட்நைட் ப்ளூ (Midnight Blue), ஃபையரி ரெட் (Fiery Red), கிளாஸி பிளாக் (Glossy Black), வெனோம் கிரீன் (Venom Green) மற்றும் மிஸ்டி கிரே (Misty Grey) ஆகியவையே அவை ஆகும்.

சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 240 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 220 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் சிபிஎஸ் (combi braking system) சிஸ்டமும் வேடெரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவை மிக மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டவை ஆகும்.
கூடுதல் சிறப்பு வசதியாக ரீ-ஜெனரேட்டிவ் பிரேக்கிங் அம்சம், ஸ்மார்ட் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளில் ஒடைசி வழங்கி இருக்கின்றது. ஒரு வேலை பேட்டரி அதிக வெப்பமாக தொடங்கினால் அதுகுறித்த எச்சரிக்கையை தானாகவே எலெக்ட்ரிக் பைக் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
தெர்மல் பேட், சார்ஜை தானாக துண்டிக்கும் திறன் என எக்கசக்க பாதுகாப்பு வசதிகளும் இ-பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், அவ்வளவு எளிதில் இந்த வாகனம் தீ விபத்தைச் சந்திக்காது என யூகிக்க முடிகின்றது. இத்துடன், 3 ஆண்டுகள் வாரண்டி பேட்டரி மற்றும் பவர்டிரெயின்களுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து:
ஒடைசி வேடெர், பல்சர் 220 பைக்கின் உருவத்தை ஒத்துபோகும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. முகப்பு பகுதி பழைய பல்சரையும், பின் பகுதி புதிய தலைமுறை பல்சரையும் நினைவுகூறும் வகையில் இருக்கின்றது. வட்ட வடிவ லைட்டே முகப்பு பகுதியில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை தவிர மற்ற அனைத்தும் புதிய பல்சரை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது. குறிப்பாக, ஸ்பிளிட் இருக்கை மற்றும் கை பிடிகள் அப்படியாக இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









