இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கினால் தாய்லாந்து சுற்றுலா பயணம் இலவசம்!! எந்த பிராண்ட் வழங்கிறது தெரியுமா?
ஒகாயா (Okaya) இவி நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்த மார்ச் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் ஒரு அசத்தலான சலுகையும் அடங்குகிறது. அது என்ன என்பதை பற்றியும், ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
2022-23 நிதியாண்டு இந்த மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ளது. இதற்கடுத்து, வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய 2023-24ஆம் நிதியாண்டு துவங்க உள்ளது. நடப்பு நிதியாண்டை நல்லப்படியாக நிறைவு செய்யும் பொருட்டு, ஒகாயா நிறுவனம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு 'ஒகாயா கார்னிவல்' என்ற பெயரில் இந்த மார்ச் மாதத்திற்கான சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்த சலுகையின்படி, ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000இல் இருந்து ரூ.5,000 வரையில் நிச்சய பணம் தள்ளுபடி கிடைக்கும். அத்துடன், தாய்லாந்து பயணத்தை பெறுவதற்கும் ஒகாயா கார்னிவலின்படி வாய்ப்புள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கினால் வெளிநாட்டு சுற்றுலா பயணம் என்பது உண்மையில் அசத்தலான சலுகை ஆகும். தனது பிராண்டின் தயாரிப்புகளை வாங்குவோரை 4 பகல்/ 3 இரவுக்கு தாய்லாந்து அழைத்து செல்ல ஒகாயா திட்டமிட்டுள்ளது.
இந்த தாய்லாந்து சுற்றுலா பயணம் ஆனது வாடிக்கையாளர்களின் அதிர்ஷ்டத்தை பொறுத்தது ஆகும். அதாவது, ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கிய உடன் ஷோரூமில் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஒரு லிங்க் வரும். அதில் வாடிக்கையாளர்கள் தங்களது சுய விபரங்களை தெரிவிக்க வேண்டும். அதன்பின் வாடிக்கையாளர்கள் ஒரு ஸ்க்ராட்ச் கார்டை சுரண்ட வேண்டியிருக்கும். இந்த ஸ்க்ராட்ச் கார்ட் தான் உங்களுக்கான பரிசை அறிவிக்கும்.

அல்லது பரிசு உங்களுக்கு கிடையாதா என்பதும்... ஆம் இது ஒரு விதமான குலுக்கல் முறையில் நடத்தப்படும் பரிசு போட்டி ஆகும். தாய்லாந்து பயணம் கிடைக்காமல் போகுவதற்கும் வாய்ப்புள்ளது. இந்தியாவில் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, இயக்க லைசன்ஸ் கூட தேவையில்லாத லோ-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களையும் ஒகாயா சந்தையில் விற்பனை செய்கிறது. ஒகாயா கிளாசிக், ஃப்ரீடம், ஃபாஸ்ட் எஃப்2எஃப், ஒகாயா ஃபாஸ்ட் எஃப்2டி, ஒகாயா எஃப்2பி மற்றும் ஃபாஸ்ட் என்பவை இந்த பிராண்டின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும்.
இவை ஆறும் மெட்டாலிக் கருப்பு, மெட்டாலிக் சியான், மெட்டாலிக் பச்சை, மெட்டாலிக் கிரே, மெட்டாலிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் வெள்ளை என்ற 7 விதமான பெயிண்ட் தேர்வுகளில் கிடைக்கின்றன. ஒகாயா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே விலைமிக்கது, ஃபாஸ்ட் எஃப்4 ஆகும். இதன் ஆரம்ப விலை ஆக ரூ.1,13,999 உள்ளது. இந்த அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2 பேட்டரிகள் வழங்கப்படுகின்றன. இவை அதிகப்பட்சமாக 4.3 kWh திறனை வெளிப்படுத்தக்கூடியவை.

அதிகப்பட்சமாக மணிக்கு 70கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுவதுமாக சார்ஜ் நிரப்பி கொண்டு அதிகப்பட்சமாக 140-160 கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும். ஃபாஸ்ட் எஃப்3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இதனை காட்டிலும் சற்று குறைவாக ரூ.99,999 ஆக உள்ளது. இதற்கேற்ப இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.53kWh பேட்டரி தொகுப்பு தான் பொருத்தப்படுகிறது. ஆனால் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் 70kmph வேகத்தை எட்டிவிட முடியும்.
ஒகாயாவின் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களிலேயே விலை குறைவானது என்று பார்த்தால், அது எஃப்2எஃப் ஆகும். ஏனெனில் இதில் அளவில் சிறிய 2.2 kWh லித்தியம்-இரும்பு பேட்டரியே பொருத்தப்படுகிறது. மீதி உள்ள கிளாசிக், ஃப்ரீடம் மற்றும் எஃப்2பி உள்ளிட்டவை ஒகாயாவின் குறை வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு சலுகைகளை இந்த மார்ச் மாதத்தை முன்னிட்டு ஒகாயா அறிவித்துள்ளது. அதாவது சலுகைகள் மார்ச் 31ஆம் தேதி வரையில் மட்டுமே கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









