120 கிமீ ரேஞ்ஜை அசால்டாக தொட கூடிய இ-ஸ்கூட்டருக்கு ப்ரீ புக்கிங் ஸ்டார்ட்! பேரழகு இல்லைனாலும், அழகா தெரிதுங்க!
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒகாயா இவி (Okaya EV)-யும் ஒன்றாகும். இந்த நிறுவனம் வெகு விரைவில் இந்தியாவில் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வாகனத்திற்கே தற்போது நிறுவனம் ப்ரீ புக்கிங் பணிகளை தொடங்கி இருக்கின்றது.
மோட்டோ ஃபாஸ்ட் (MotoFaast) எனும் பெயரிலேயே அந்த வாகனம் விற்பனைக்குக் களமிறக்கப்பட இருக்கின்றது. இதன் வருகையை டீசர் வாயிலாக ஒகாயா இவி உறுதிப்படுத்தி இருக்கின்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ தூரம் வரை நம்மால் டிராவல் செய்ய முடியும் என நிறுவனம் தெரிவிக்கின்றன.

ஆனால், இதன் விலைகள் பற்றிய விபரத்தை இன்னும் அதிகாரப்பூர்வமாக அது அறிவிக்கவில்லை. இருப்பினும், இதற்கு ரூ. 1.50 லட்சத்திற்கும் குறைவான விலையையே நிறுவனம் நிர்ணயிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விலை சற்று அதிகமாக உங்களுக்கு தென்படலாம், ஆனால், அதற்கேற்ப பன்முக தொழில்நுட்ப வசதிகளை மோட்டோ ஃபாஸ்ட் தனக்குள் தாங்கி இருக்கும் என கூறப்படுகின்றது.
அதேவேளையில், இந்த விலையில்தான் மோட்டோ ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும் என உறுதியாக கூறிவிட முடியாது. இதைவிட சற்று குறைவான விலையில் அது விற்பனைக்கு வருவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் போட்டி மிகக் கடுமையாக அதிகரித்துக் காணப்படுகின்றது.

இந்த போட்டியைச் சமாளிக்க மலிவு விலை ஒன்றே தீர்வாகும். ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) மற்றும் பஜாஜ் (Bajaj) உள்ளிட்ட நிறுவனங்களும்கூட மலிவு விலையில் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைக் களமிறக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஒகாயா இவி மோட்டோஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிலோ மீட்டர் என கூறப்படுகின்றது. இத தினசரி பயன்பாட்டிற்கு உகந்த டூ-வீலராக இருக்கும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்எஃப்பி (lithium ferrophosphate) வகை பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதுவே ஓர் முழு சார்ஜில் 120 கிமீ ரேஞ்ஜை வழங்கும். இநத் ரேஞ்ஜ் திறனைக் கொண்டு சற்று லாங் டிராவலைக் கூட மேற்கொள்ள முடியும். ஒட்டுமொத்த ஐந்து விதமான நிற தேர்வுகள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட இருக்கின்றது. சையன், கருப்பு, பச்சை, சிவப்பு மற்றும் சாம்பல் உள்ளிட்ட நிற தேர்வுகளே மோட்டோஃபாஸ்டில் வழங்கப்பட இருக்கின்றது.
மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹப் மவுண்டட் வகை மின்சார மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுவே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மலிவு விலையில் விற்பனைக்கு வர இருப்பதற்கு சான்றாக இருக்கின்றது. அதேவேளையில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பிரீமியம் அம்சங்களான அலாய் வீல்கள், ட்யூப்லெஸ் டயர்கள் போன்ற அம்சங்களும் இடம் பெற இருக்கின்றன.
இது தவிர, 7 அங்குல தொடு திரை வசதிக் கொண்ட டிஸ்பிளே, எல்இடி லைட்டுகள், டிஸ்க் பிரேக்குகள், இந்தியாவின் கரடு, முரடான சாலைகளுக்கு ஏற்ற சஸ்பென்ஷன் செட்-அப் உள்ளிட்டவையும் மோட்டோ ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுபோன்ற ஏகப்பட்ட அம்சங்களை அந்த வாகனத்தில் எதிர்பார்க்கலாம் என கூறப்படுகின்றது. இதன் துள்ளியமான அறிமுக நாள் பற்றிய விபரத்தை ஒகாயா இவி வெளியிடவில்லை. இருப்பினும், ஒரு சில நாட்கள் அல்லது வாரங்களுக்குள் அது விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அப்போதே அதன் விலை, பேட்டரி பேக் விபரம் உள்ளிட்டவை பற்றிய தகவல் அதிகாரப்பூர்வமாக தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒகாயா இவி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன் பக்கம் வாடிக்கையாளர்களைக் கூடுதலாக கவரும் பொருட்டு புதிய மாடலை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர அது திட்டமிட்டுள்ளது. வரும் பண்டிகை நாட்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் இது உதவியாக இருக்கும் என நிறுவனம் நம்புகின்றது.


Click it and Unblock the Notifications









