பெட்ரோல் வண்டிகள் இருந்த தடமே தெரியாம போக போகுது! இவ்ளோ குறைவான விலையில் இப்படி ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா!
இந்திய சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து எலெக்ட்ரிக் டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக ஒகாயா (Okaya) திகழ்கிறது. ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 (Okaya Faast F3) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) தற்போது அந்நிறுவனத்தால் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் டீசர்கள் தொடர்ச்சியாக வெளியாகி வந்த நிலையில் தற்போது ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மொத்தம் 6 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு கிடைக்கும். அவை பின்வருமாறு:
- மெட்டாலிக் பிளாக்
- மெட்டாலிக் சியான்
- மெட்டாலிக் க்ரே
- மெட்டாலிக் சில்வர்
- மெட்டாலிக் ஒயிட்
- மேட் க்ரீன்
இதில் தங்களுக்கு விருப்பமான நிறத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

இவ்ளோ அவுட்லெட்கள் இருக்கா!
இந்தியாவில் ஒகாயா நிறுவனத்திற்கு 550க்கும் மேற்பட்ட அவுட்லெட்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஃபாஸ்ட் எஃப்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்படும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ட்யூயல் லித்தியம் அயான் எல்எஃப்பி பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் திறன் 3.53 kWh ஆகும். இதன் ரேஞ்ச் 125 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 125 கிலோ மீட்டர்கள் பயணிக்கும்.
சார்ஜ் ஆக எவ்ளோ நேரம் ஆகும்?
இந்த பேட்டரியை முழுமையாக நிரப்புவதற்கு 4-5 மணி நேரம் வரை ஆகும். ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருப்பது வாட்டர் ப்ரூஃப் பேட்டரி என்பதும் குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஒகாயா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி மற்றும் மோட்டாருக்கு 3 வருடங்கள் வாரண்டி வழங்குகிறது. அதே நேரத்தில் ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிலோ மீட்டர்கள் ஆகும்.

வசதிகள் அசத்துதே!
ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வசதிகளுக்கும் பஞ்சமில்லை. ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங், ரிவர்ஸ் மோட் மற்றும் பார்க்கிங் மோட் ஆகியவை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் குறிப்பிடத்தக்க வசதிகள் ஆகும். சஸ்பென்ஸனை பொறுத்தவரையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ஹைட்ராலிக் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டுள்ளன. இப்படி பல்வேறு சிறப்பம்சங்களுடன் வந்துள்ள ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை 99,999 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
கேம் சேஞ்சர்!
இதுகுறித்து ஒகாயா எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அன்சுல் குப்தா கூறுகையில், ''இந்தியாவில் தரமான மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருகிறது. அதை பூர்த்தி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு புரட்சிகரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்தான் ஃபாஸ்ட் எஃப்3. பயணிகளுக்கு சௌகரியமான மற்றும் பாதுகாப்பான பயணத்தை வழங்கும் வகையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் அதிநவீன தொழில்நுட்பங்கள் மற்றும் வசதிகள் இடம்பெற்றுள்ளன. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது நல்ல சாய்ஸ் ஆக இருக்கும். இந்தியாவின் எலெக்ட்ரிக் டூவீலர் சந்தையில், ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 'கேம் சேஞ்சர்' ஆக இருக்கும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அத்துடன் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் எங்கள் இருப்பை இன்னும் வலிமையாக்கி கொள்வதற்கும் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உதவி செய்யும்'' என்றார்.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் மக்களின் கவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் திரும்பியுள்ளது. இதன் காரணமாக அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றன. இந்த வரிசையில் களமிறங்கியுள்ள ஒகாயா ஃபாஸ்ட் எஃப்3 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








