இந்த பிராண்டின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டும் மக்கள் தேடிப்போய் வாங்குறாங்க போல!! விற்பனையில் புதிய சாதனை...
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் பிரபலமான இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று 2.5 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது. எந்த நிறுவனம் அது? என்பது குறித்த விபரங்களை முழுமையான இனி தொடர்ந்து பார்க்கலாம்.
ஒகினவா ஆட்டோடெக் நிறுவனத்தை பற்றி பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ஒகினவா கடந்த பல வருடங்களாக எலக்ட்ரிக் வாகனங்கள் உற்பத்தி & விற்பனையில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தான் தற்போது வாகனங்கள் உற்பத்தியில் 2.5 லட்சம் என்ற மைல்கல்லை கடந்துள்ளது.

ஒகினவா ஆட்டோடெக்கின் 2.5 லட்சமாவது வாகனமாக தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பது பிரைஸ் பிரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். ஒகினவா நிறுவனத்திற்கு ராஜஸ்தானில் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. 2.5 லட்ச எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை என்பது உண்மையில் பாராட்டத்தக்க விஷயமாகும். இத்தகைய மைல்கல்லை இந்தியாவில் முதலாவதாக கடந்துள்ள எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமாக ஒகினவா ஆட்டோடெக் விளங்குகிறது.
மேலும் இந்த எண்ணிக்கையை 2025ஆம் ஆண்டிற்கு உள்ளாக 10 இலட்சமாக உயர்த்தும் கொள்கையில் ஒகினவா உள்ளது. ஒகினவா பிராண்ட் பெயரை சிலர் இப்போதுதான் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் இந்த இவி நிறுவனம் 2015ஆம் ஆண்டில் இருந்தே கடந்த 8 வருடங்களாக செயல்பட்டு வருகிறது. ஒகினவா பிராண்டில் இருந்து முதல் தயாரிப்பாக ரிட்ஜ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 2017இல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

தற்போது ஒகினவா ஆட்டோடெக் அடைந்து இருக்கும் உயரம் பெரியது ஆகும். தற்சமயம் ஒகினவாவிற்கு 540க்கும் அதிகமான வாடிக்கையாளர் தொடு மையங்கள், நிகரற்ற சேவை மையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கஸ்டமர் இணைப்பை கொண்டுள்ளது. இதனால் 2.5 லட்ச வாகனங்கள் விற்பனை எண்ணிக்கை ஆனது ஒகினவா எதிர்காலத்தில் அடையுள்ள வளர்ச்சிக்கு ஒரு சிறிய டிரைலர் போன்றதே ஆகும்.
தங்களது 2.5 லட்ச எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் ஏறக்குறைய ரூ.1250 கோடி மதிப்பிலான பெட்ரோலுக்கான செலவை மிச்சப்படுத்தி உள்ளது மற்றும் 3003 லட்ச கிலோகிராம் கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வை தடுத்துள்ளது என ஒகினவா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஒகினவா ஆட்டோடெக் நிறுவனம் சமீபத்தில்தான் தனது முதல் ஆராய்ச்சி & கண்டுப்பிடிப்பு மையத்தை இத்தாலியில் திறக்கவுள்ளதை அறிவித்து இருந்தது.

இத்தாலியை சேர்ந்த எலக்ட்ரிக் பைக்குகள் உற்பத்தி நிறுவனமான டாசிடா உடன் இணைந்து இந்த புதிய R&D மையத்தை ஒகினவா நிறுவுகிறது. ஒகினவா - டாசிடா இடையேயான கூட்டணி ஆனது சுமார் 2.5 கோடி யூரோக்கள் முதலீட்டை கொண்டது. இந்த கூட்டணி அடுத்த 3 வருடங்களுக்கு நீடிக்கும். புதிய தயாரிப்புகளை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருக்கும் இந்த கூட்டணி தற்போதைய வாகனங்களை மேம்படுத்துவது மட்டுமின்றி, எதிர்கால தயாரிப்புகளுக்கு ஏற்ற புதிய இ-பவர்ட்ரெயினை உருவாக்கும் முனைப்பிலும் உள்ளது.
இதன்படி, தனது முதல் எலக்ட்ரிக் க்ரூஸர் பைக்கை அறிமுகப்படுத்தும் பணிகளில் ஒகினவா நிறுவனம் தீவிரமாக உள்ளது. இந்த புதிய ஒகினவா எலக்ட்ரிக் பைக் இந்த 2023ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், 2025ஆம் ஆண்டிற்கு உள்ளாக வாடிக்கையாளர் தொடு மையங்களின் எண்ணிக்கையை 1000க்கும் அதிகமான எண்ணிக்கைக்கு உயர்த்து முனைப்பிலும் ஒகினவா உள்ளது. தற்சமயம் ஒகினவா நிறுவனத்திற்கு 542 வாடிக்கையாளர் தொடு மையங்கள் உள்ளதை ஏற்கனவே கூறிவிட்டோம்.


Click it and Unblock the Notifications








