ஸ்கூட்டர் பார்க்க தான் சைஸில் சின்னது!! ஆனால் மாடர்ன் டெக்னாலஜிக்கு பஞ்சமே இல்லை - மொபைல் போன் கனெக்ஷனும் இனி
ஒகினவா ஒகி90 (Okinawa Okhi90) எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அட்வான்ஸான வசதிகள் மற்றும் கனெக்ட் தொழிற்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் அப்படி என்ன தொழிற்நுட்ப அம்சங்கள் புதியதாக வழங்கப்பட்டுள்ளன? அவற்றின் பயன்பாடுகள் என்னென்ன? என்பதை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஒகினவா ஆட்டோடெக் இத்தாலியை சேர்ந்த ஜே.வி பார்ட்னர் டசிடா என்ற எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை தயாரிக்கும் நிறுவனத்துடன் கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதத்தில் கூட்டணி சேர்ந்தது. இந்த கூட்டணியில் புதியதாக கண்டுப்பிடிக்கப்பட்ட தொழிற்நுட்பங்கள் ஒகினவாவின் எலக்ட்ரிக் வாகனங்களில் ஒன்றன்பின் ஒன்றாக வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வரிசையில், இன்று (ஜூலை 17) ஒகினவா நிறுவனம் ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய மற்றும் அட்வான்ஸான வெர்சனை சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக முக்கிய அப்டேட்டாக ஏ.ஐ.எஸ்-156 திருத்தம்-3க்கு இணக்கமான பேட்டரி தொகுப்பு புதிய எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மேம்படுத்தப்பட்ட தொழிற்நுட்ப வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 2022ஆம் ஆண்டில் முதன்முதலாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏகோபித்த வரவேற்பு பலத்தரப்பட்ட மக்களிடம் இருந்து கிடைத்து வருகிறது. குறிப்பாக, 2022இல் அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்தில் 10,000க்கும் அதிகமான ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் புக் ஆகின. இத்தகைய எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் தான் தற்போது எலக்ட்ரிக் மோட்டார் மற்றும் அதில் பொருத்தப்படும் பேட்டரி தொகுப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.
புதிய தொழிற்நுட்ப அம்சங்களாக வண்ண நிறத்திலான டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் மற்றும் மொபைல் செயலி இணைப்பு வசதியை ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றுள்ளது. புதிய வண்ண ஸ்பீடோ மீட்டரின் மூலமாக இன்-பில்டு நாவிகேஷன் சிஸ்டம், ப்ளூடூத் இணைப்பு வசதி, மொபைல் அழைப்பு & குறுஞ்செய்தி எச்சரிக்கைகள், டைம் டிஸ்பிளே மற்றும் இசை நோட்டிஃபிகேஷன்களை பெறலாம்.

மொபைல் செயலி மூலம் ஸ்கூட்டரை மொபைல் போன் உடன் இணைப்பதன் மூலமாக ரியல்-டைம் பேட்டரி SOC மானிடரிங், ரியல்-டைம் ஸ்பீடு மானிடரிங் மற்றும் ஆன்/ஆஃப் நோட்டிஃபிகேஷன் உள்ளிட்ட விபரங்களை உரிமையாளர் தனது மொபைல் போன் மூலமாகவே பெற்று கொள்ளலாம். இந்த அப்டேட்களுடனான ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வருகிற செப்டம்பர் மாதத்தில் இருந்து டெலிவிரி செய்ய ஒகினவா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த அப்டேட்களினால் ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இயக்குவது எளிமையாகும் என்பது மட்டுமின்றி, தற்கால மாடர்ன் வசதிகளையும் உரிமையாளர்கள் பெற முடியும் என்கிற நம்பிக்கையில் ஒகினவா உள்ளது. அத்துடன், எலக்ட்ரிக் மோட்டாரின் ஆயுட்காலம் அதிகரிக்கும் என்பது மட்டுமில்லாமல், சர்வீஸ் செய்வதும் எளியதாக மாறியுள்ளது.
ஒகினவா ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பேட்டரியை சார்ஜ் செய்ய ஆட்டோ-கட் செயல்பாட்டு வசதி உடன் மைக்ரோ-சார்ஜர் வழங்கப்படுகிறது. அத்துடன், ரீஜெனரேட்டிவ் எனர்ஜி உடன் எலக்ட்ரானிக்-அசிஸ்ட் பிரேக் சிஸ்டமும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெறுகிறது. அதிகப்பட்சமாக மணிக்கு 80-90kmph வேகத்தில் இயங்கக்கூடிய ஒகி90 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் 160கிமீ தொலைவிற்கு இயங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை நன்கு பயன்படுத்தி கொள்ள, ஒகினவாவை போன்று மற்ற இவி நிறுவனங்களும் தங்களது எலக்ட்ரிக் 2-வீலர்களில் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்களை புதியது புதியதாக வழங்க முயற்சிக்க வேண்டும். ஏனெனில் எலக்ட்ரிக் வாகனங்களில் இவ்வாறான இணைப்பு வசதிகளை வழங்குவது இன்னும் எளிது.


Click it and Unblock the Notifications








