இப்போதே வாங்கினால் ரூ.10,000 குறைவு!! ஓலா நிறுவனத்துக்கு ரொம்ப தாராள மனசுங்க... ஷோரூம்களில் கூட்டம் குவியுது!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விலையை இன்னும் சில வாரங்களுக்கு தொடரவுள்ளதாக அறிவித்து உள்ளது. ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு அறிவிக்கப்பட்டுள்ள சலுகை விலை என்ன? அது இன்னும் எத்தனை நாட்களுக்கு தொடரப்பட உள்ளது என்பதை இனி பார்க்கலாம்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை சமீபத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கியது. கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பின், கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பிறகு எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை ஓலா துவங்கியுள்ளது. முன்பதிவுகள் துவங்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே ஆயிரக்கணக்கிலான புக்கிங் எஸ்1 ஏர்-க்கு கிடைத்துள்ளன.

எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்துவரும் வரவேற்புக்கு முக்கிய காரணமாக அதன் சலுகை விலையினை சொல்லலாம். ஓலா எஸ்1 ஏர் ஸ்கூட்டரின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1.09 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலை குறிப்பிட்ட காலத்தில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே எனவும், மற்றவர்களுக்கு ரூ.10,000 அதிகமாக ரூ.1.19 லட்சம் எனவும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிவித்தது.
இதனால் விலையை அதிகரிப்பதற்கு முன்னர் எஸ்1 ஏர் ஸ்கூட்டரை வாங்கிவிட வேண்டும் என பலர் திட்டமிட்டு முடியாமல் போன நிலையில், அத்தகையவர்களுக்கு ஓர் சந்தோஷமான செய்தியை ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பாவிஷ் அகர்வாலின் இந்த டுவிட்டர் பதிவில், "எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான தேவை எங்களது எதிர்பார்ப்பை கடந்துவிட்டது.

ரூ.1.1 லட்ச சலுகையை அனைவருக்கும் திறக்குமாறு பலர் எங்களிடம் கேட்கிறார்கள். இன்று (ஜூலை 30) இரவு 8 மணி முதல் ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு 12 மணி வரை அனைவருக்கும் சலுகையை நீட்டித்துள்ளோம். எங்கள் ஷோரூம் அனைத்தும் இன்று (ஜூலை 30) நள்ளிரவு வரை திறந்திருக்கும். அதிகப்படியான டிமாண்ட் உள்ளது, விரைவான டெலிவிரிக்கு சீக்கிரம் வாங்கவும்!" என குறிப்பிட்டுள்ளார்.
எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகளை துவங்கிய அதேவேளையில் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனையில் இருந்து ஓலா நிறுத்தியுள்ள செய்தியை பலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இதனால் இனி, எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே ஓலா பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட உள்ளன. இதில் எஸ்1 புரோ சற்று விலைமிக்கது ஆகும். தோற்றத்தை பொறுத்தவரையில், இவை இரண்டும் ஒன்றே.

ஆனால் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில், சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை மோனோஷாக்கும் பொருத்தப்படுகின்றன. அதேபோல், இந்த விலை குறைவான ஓலா ஸ்கூட்டரில் பிரேக்குக்கு இரு சக்கரங்களிலும் டிரம் பிரேக்குகள் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளன, டிஸ்க் பிரேக்குகள் கிடையாது. எஸ்1 ஏர் ஸ்கூட்டருக்கு புதியதாக நியான் பச்சை நிற பெயிண்ட் தேர்வை ஓலா வழங்கியுள்ளது.
அத்துடன், பிராக்டிக்கல் கிராப் ரெயிலும் ஸ்கூட்டரின் இறுதி முனையில் சேர்க்கப்பட்டு உள்ளது. ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்பட்டு உள்ளது. இந்த பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 125கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்கி செல்ல முடியும். இந்த பேட்டரி தொகுப்பு 4.5 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரில் பொருத்தப்படுகிறது.

இந்த எலக்ட்ரிக் மோட்டார் மூலம் அதிகப்பட்சமாக 6 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இதன் உதவியுடன் எஸ்1 ஏர் ஸ்கூட்டரில் 0-இல் இருந்து 40kmph வேகத்தை வெறும் 3.3 வினாடிகளில் எட்டி விடலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 90kmph ஆகும். ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு விற்பனையில் டிவிஎஸ் ஐ-க்யூப் மற்றும் ஏத்தர் 450எஸ் உள்ளிட்டவை போட்டியாக விளங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாக, ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பலரை கவர்ந்துவிட்ட ஓலா எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் இந்த சலுகை விலை ஆகஸ்ட் 15ஆம் தேதி வரையில் இருக்கும் என்பது உண்மையில் ஓர் அருமையான செய்தி ஆகும். ஒவ்வொரு ஸ்கூட்டரிலும் ரூ.10,000 வரையில் இழந்தாலும், ஸ்கூட்டரை முடிந்தவரையில் அதிகமாக விற்பனை செய்துவிட வேண்டும் என ஓலா நினைப்பதை இந்த விஷயத்தில் தெளிவாக உணர முடிகிறது.


Click it and Unblock the Notifications









