தனியா பில் போட்டது தப்புதான்! பணத்தை திருப்பி குடுக்கும் பிரபல நிறுவனம்! மனசார வாழ்த்தும் வாடிக்கையாளர்கள்!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு (Electric Scooters) ஆஃப் போர்டு சார்ஜர்கள்/சார்ஜிங் ஆக்ஸஸெரீஸ்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு 130 கோடி ரூபாயை திருப்பி வழங்கவுள்ளதாக (Ola Electric) நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஃபேம் விதிமுறைகளை மீறியது கண்டறியப்பட்டுள்ளதால், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
Faster Adoption and Manufacturing of Electric Vehicles திட்டம்தான் சுருக்கமாக FAME என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஃபேம் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் விதிமுறைகளை மீறி ஆஃப் போர்டு சார்ஜர்கள்/சார்ஜிங் ஆக்ஸஸெரீஸ்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சமீபத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் இது கண்டறியப்பட்டுள்ளது. எனவேதான் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பணத்தை வாடிக்கையாளர்களுக்கு திருப்பி வழங்க முடிவு செய்துள்ளது. ஃபேம் திட்ட விதிமுறைகளின்படி, ஆஃப் போர்டு சார்ஜர்கள்/சார்ஜிங் ஆக்ஸஸெரீஸ்கள் ஆகியவற்றை, வாகனத்தின் விலைக்கு மேல் தனியாக விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய கூடாது.
இந்த விதிமுறைக்கு பின்னால் மிகவும் முக்கியமான காரணம் ஒன்று உள்ளது. இந்த விதிமுறை பின்பற்றப்பட்டால்தான், எலெக்ட்ரிக் வாகனத்தின் விலை கட்டுக்குள் இருக்கும். அப்போதுதான் மக்கள் அதிகளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முன்வருவார்கள். ஆனால் இந்த விதிமுறையை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மீறியுள்ளது.

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது எஸ்1 ப்ரோ (Ola S1 Pro) ஸ்கூட்டருக்கு, ஆஃப் போர்டு சார்ஜர்களை ஆக்ஸஸெரீஸ்கள் என்ற பெயரில் விற்பனை செய்துள்ளது. இதற்கு 9 ஆயிரம் ரூபாய் முதல் 19 ஆயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு, வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில் பல்வேறு வாடிக்கையாளர்களிடம் இருந்து ஒட்டுமொத்தமாக 130 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை மீறலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது. அத்துடன் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வசூல் செய்யப்பட்ட பணத்தை, அவர்களிடமே திருப்பி வழங்குவதற்கும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது.
எனவே 2019-20 நிதியாண்டில் இருந்து நடப்பு 2023ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி வரை 'பில்' செய்யப்பட்ட ஸ்கூட்டர்களுக்கு, கூடுதலாக வசூல் செய்யப்பட்ட பணம் திரும்ப கிடைக்கவுள்ளது. இது உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும். இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பக்கம் மக்கள் திரும்புவதற்கும் இந்த நடவடிக்கை வழிவகுக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.
இதுதவிர விதிமுறை மீறலில் ஈடுபட்ட மற்ற நிறுவனங்களுக்கு இது முன்மாதிரியாகவும் அமையும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், வரும் காலங்களில், விதிமுறை மீறல்களில் ஈடுபடுவதை இந்த நடவடிக்கை தடுப்பதற்கான வாய்ப்புகளும் மிகவும் பிரகாசமாக இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விதிமுறை மீறலை ஒப்புக்கொண்டு, வாடிக்கையாளர்களின் பணத்தை அவர்களிடமே திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் நடவடிக்கையும் உண்மையிலேயே பாராட்டுக்குரியது ஒன்றுதான். இது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்க செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








