கிருஷ்ணகிரியில் இந்தியாவின் மிகப்பெரிய பேட்டரி தொழிற்சாலை கட்டுமான பணிகளை தொடங்கியது ஓலா.. உலகமே பேச போகுது!
இந்தியாவின் மிகப் பெரிய பேட்டரி உற்பத்தி ஆலை அமைக்கும் பணியை பிரபல ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தொடங்கி இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமான படங்கள் மற்றும் அறிவிப்புகள் தற்போது வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஓலா எலெக்ட்ரிக், அதன் மிகப் பெரிய பேட்டரி உற்பத்தி ஆலையை இந்தியாவில் அமைக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் தற்போது பேட்டரி தொழிற்சாலையின் கட்டுமான பணிகள் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதை உறுதிப்படுத்தும் விதமாக கட்டுமான பணிகள் தொடங்கி இருப்பதுகுறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. ஓலா எலெக்ட்ரிக் அமைத்துக் கொண்டிருக்கும் இந்த ஆலை இந்தியாவிலேயே மிகப் பெரிய பேட்டரி உற்பத்தி ஆலையாக இருக்கும். இது நம்முடைய தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே அமைக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த ஆலைக்கு நிறுவனம் 'ஜிகாஃபேக்டரி' என பெயர் வைத்திருக்கின்றது. இதன் கட்டுமான பணிகள் தற்போது தொடங்கப்பட்டு இருப்பதை ஓலா நிறுவனமும் உறுதி செய்திருக்கின்றது. இதுகுறித்து வெளியிடப்பட்டு இருக்கும் அறிக்கையில், நிறுவனம் தன்னுடைய செல் தொழிற்சாலையை நிறுவுவதற்கான முதல் தூண் ஏற்கனவே நிறுவப்பட்டு விட்டதாக தெரிவித்து இருக்கின்றது.

இதன் வாயிலாகவே இந்தியாவின் மிகப் பெரிய பேட்டரி தொழிற்சாலையை அமைக்கும் பணியில் ஓலா நிறுவனம் மிக தீவிரமாகக் களமிறங்கி இருப்பது தெரிய வந்திருக்கின்றது. சுமார் 115 ஏக்கர் பரப்பளவில் ஓலா எலெக்ட்ரிக்-இன் பேட்டரி தொழிற்சாலையானது அமைக்கப்பட்டு வருகின்றது. இது அடுத்த ஆண்டு முழுமையாக செயல்பட தொடங்கிவிடும் என கூறப்படுகின்றது.
முன்னதாக நிறுவனம் 5 GWh எனும் உற்பத்தி திறனிலேயே இயங்க இருக்கின்றது. இதைத்தொடர்ந்து படிப்படியாக உற்பத்தி திறன் அதிகரிக்கப்பட்டு அது 100 GWh உயர்த்தப்படும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த திட்டமிடல் அப்படியே நடக்கும் எனில் நாட்டின் முதல் மிகப் பெரிய செல் உற்பத்தி ஆலையாக ஓலாவின் இந்த ஃபேக்டரி மாறும்.

இப்போதைய நிலவரப்படி உலக அளவில் இந்த அளவு மிகப் பெரிய செல் உற்பத்தி ஆலை பயன்பாட்டிற்கு வரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், உலகளவிலும் மிகப் பெரிய பேட்டரி உற்பத்தி ஆலையாக இது இருக்கும் என கூறப்படுகின்றது. இந்த பேட்டரி உற்பத்தி ஆலை குறித்து ஓலா நிறுவனத்தின் சிஇஓ-ஆன பவிஷ் அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது, "எங்கள் ஜிகாஃபேக்டரி உற்பத்தி ஆலையின் உருவாக்க பணிகள் தொடங்கி இருப்பது எங்களுக்கு பெருமையான தருணம். இது இந்தியாவின் மின்மயமாக்கல் பயணத்தின் மிகப் பெரிய மைல் கல்லாக அமையும். உலகளாவிய மின்சார வாகன மையமாக இந்தியாவை மாற்றுவதற்கும் இது உதவும்" என்றார்.

தற்போது, இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் சில மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் பேட்டரிக்காக வெளிநாடுகளை நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையை மாற்றி இந்தியாவில் உள்ள மின்வாகனங்களை முழுக்க முழுக்க உள்ளூர் மயமாக்குவதை ஊக்குவிக்கவும் இந்த தொழிற்சாலை மிகுந்த உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஓலா நிறுவனம் வெகு விரைவில் ஓர் புதிய தயாரிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஓர் டீசர் படத்தை அண்மையில் ஓலா வெளியிட்டது. அந்த படத்தின் வாயிலாகவே வரும் ஜூலையில் நிறுவனம் புதிய மின்சார வாகனத்தை அறிமுகம் செய்ய இருப்பது உறுதியாகி உள்ளது. இது இந்தியாவின் ஐசிஇ இருசக்கர வாகன பிரிவிற்கு மிகப் பெரிய போட்டியாக அமையும் என நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சூப்பரான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இந்திய மின்சார வாகன உலகின் அறிவிக்கப்படாத தலைவனாக இது கருதப்படுகின்றது. விற்பனையில் மட்டுமல்லாது மற்ற விஷயங்களிலும் தலைவனாக மாறும் வகையிலேயே ஓலாவின் அனைத்து செயல்பாடுகளும் அமைந்துள்ளன. அதில் ஒன்றே ஜிகாஃபேக்டரி தொழிற்சாலை அமைப்பும் உள்ளது.


Click it and Unblock the Notifications









