யோ ஓலா நீ வேற லெவல்யா... ஒரே நேரத்துல 4 எலெக்ட்ரிக் பைக்குகள் வெளியீடு.. எல்லாத்தையுமே லப் பண்ணலாம்போல!
சாதாரணமான கால் டாக்சி நிறுவனமாக இந்தியாவில் கால் தடம் பதித்து தற்போது நாட்டின் மிகப் பெரிய மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக உருவெடுத்து உள்ளது ஓலா (Ola). இந்த நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ (S1 Pro) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கு மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே நான்கு புத்தம் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை பொதுப் பார்வைக்குக் கொண்டு வந்திருக்கின்றது ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம். இவை அனைத்தும் கான்செப்ட் மாடல்களாகும். முன் மாதிரி (Prototype) மாடலாக மட்டுமே அவை உருவாக்கப்பட்டு இருக்கின்றன. அதேவேளையில், வெகு விரைவில் அவை விற்பனைக்குக் கொண்டு வரப்படவும் இருக்கின்றன.

நாட்டின் 77-வது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் விதமாக இன்றையை (ஆகஸ்டு 15) தினத்தில் இந்த நான்கு பைக்குகளும் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றன. க்ரூஸர் (Cruiser), அட்வென்சர் (Adventure), ரோட்ஸ்டர் (Roadster) மற்றும் டைமண்ட் ஹெட் (Diamond Head) எனும் நான்கு இ-பைக் மாடல்களையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.
இதுவே இந்த எலெக்ட்ரிக் பைக்குகள் காட்சிப்படுத்தப்படுவது முதல் முறையாகும். இந்த முதல் பார்வையிலேயே இந்தியாவின் ஒட்டுமொத்த இருசக்கர வாகன பிரியர்களின் மனதையும் ஓலாவின் எலெக்ட்ரிக் பைக்குகள் கவர்ந்துவிட்டன என்று கூறலாம். இந்த பைக்குகள் பெயர்களுக்கு ஏற்ப அந்தந்த சிறப்பு வசதிகளுடன் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.

அதாவது, ஓலாவின் க்ரூஸர் மாடலானது க்ரூஸர் பைக்குகளுக்கான அனைத்து சிறப்பு வசதிகளையும் பெற்ற இ-பைக்காக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. உருவம், அணிகலன்கள், ஸ்டைல், சஸ்பென்ஷன் செட்-அப் என அனைத்து அம்சங்களையும் அது ஓர் க்ரூஸர் பைக் என்பதை வெளிக்காட்டும் வகையிலேயே கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இதேபோல், அட்வென்சர் மாடலில் அட்வென்சர் பைக்குகளுக்கான அம்சங்களையும், ரோட்ஸ்டர் மாடலில் ரோட்ஸ்டர் பைக்குகளுக்கான அம்சங்களையும் ஓலா வழங்கி இருக்கின்றது. இதில் டைமண்ட் ஹெட் என்பது ஸ்போர்ட்ஸ் வகை பைக் மாடல் ஆகும். ஓலா தற்போது வெளியீடு செய்த அனைத்து எலெக்ட்ரிக் பைக்குகளுக்கும் மிகவும் கவர்ச்சிகரமானவையாக இருந்தாலும், இந்த டைமண்ட் ஹெட் ஸ்போர்ட்ஸ் வகை பைக்கே பலரின் மனதைக் கவரக் கூடியதாக இருந்தது.

விண்வெளியில் இருந்து பூமிக்கு இறங்கி வந்த வாகனத்தைப் போல் முற்றிலும் புதிய தோற்றத்தில் இந்த மாடலை ஓலா வடிவமைத்து இருக்கின்றது. இந்த அனைத்து வாகனங்களும் எண்ட் ஐஸ் ஏஜ், பார்ட் 1 நிகழ்ச்சி வாயிலாக வெளியிடப்பட்டு இருக்கின்றன. 'எண்ட் ஐஸ் ஏஜ்' என்பது ஐசிஇ எஞ்ஜின் கொண்ட வாகனங்களுக்கான முற்றுப் புள்ளி என்பதைக் குறிக்கின்றது.
பெட்ரோல், டீசல் வாகனங்களே இல்லாத உலகை உருவாக்கும் என்பதே ஓலாவின் இலக்காக இருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தன்னுடைய மின் வாகன உற்பத்தியை நிறுவனம் தீவிரப்படுத்தி இருக்கின்றது. வெகு விரைவில் இந்த நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகளைத் தொடர்ந்து மின்சார கார்களையும் வெளியீடு செய்ய இருக்கின்றது.

தற்போது வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் நான்கு எலெக்ட்ரிக் பைக்குகளிலும் நவீன வசதிகளுக்கும், பாதுகாப்பு அம்சங்களுக்கும் பஞ்சம் இருக்காது என கூறப்படுகின்றது. ஆனால், இந்த வாகனங்கள்குறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் பகிர்ந்துக் கொள்ளவில்லை. தற்போது முன்மாதிரி மாடலாக மட்டுமே அவை தயாரிக்கப்பட்டு இருப்பதால் அவைகுறித்த முக்கிய தகவல்களை ஓலா எலெக்ட்ரிக் பகிர்ந்துக் கொள்ளவில்லை.
இந்த நிலை எலெக்ட்ரிக் பைக்குகளைப் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தை இன்னும் அதிகரிக்கச் செய்திருக்கின்றது. ஆகையால், இன்னும் ஒரு சில நாட்களிலோ அல்லது மாதங்களிலோ இந்த வாகனங்கள் பற்றிய தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக அவற்றை ஓலா விற்பனைக்கும் கொண்டு வர இருக்கின்றது.
எப்படியும் இவற்றின் உற்பத்தி பணிகள் தொடங்க இன்னும் ஒன்று முதல் மூன்று ஆண்டுகள் வரை ஆகலாம் என இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இவற்றின் வருகை குறித்த எந்த ஒரு தகவலையும் ஓலா அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த நான்கு புதிய மோட்டார்சைக்கிள்களுடன் சேர்த்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ஜென்-2 எஸ்1 ப்ரோ மற்றும் எஸ்1எக்ஸ் சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களையும் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. ஜென்2 எஸ்1 ப்ரோ ஓர் முழு சார்ஜில் 195 கிமீ ரேஞ்ஜையும், 120 கிமீ வேகத்திலும் பயணிக்கும் திறன் கொண்டது.
இதற்கு அறிமுக விலையாக ரூ. 1,47,499 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் எஸ்1எக்ஸ் மாடல் இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எஸ்1எக்ஸ் பிளஸ் மற்றும் எஸ்1எக்ஸ் ஆகியவையே அவை ஆகும். இதிலேயே எஸ்1எக்ஸில் இரு விதமான ஆப்ஷன்களை ஓலா வழங்க இருக்கின்றது.
அதாவது, 3 kWh மற்றும் 2 kWh பேட்டரி பேக் தேர்வுகளே அதில் வழங்கப்பட இருக்கின்றன. ஆனால், எஸ்1எக்ஸ் பிளஸ் தேர்வில் 3 kWh பேட்டரி பேக் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகின்றது. இருப்பதிலேயே மலிவு விலை மாடலாக எஸ்1எக்ஸ் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் ஆரம்ப விலை ரூ. 80 ஆயிரம் ஆகும். இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல் டூ-வீலர்களின் விலைக்கே டஃப் கொடுக்கும் வகையில் மலிவு விலையில் ஓலாவின் புதிய மாடல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது பெருத்த ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓலா எஸ்1எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் பெட்ரோல் ஸ்கூட்டர்களின் விற்பனையில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் டாப் செல்லிங் ஸ்கூட்டர் மாடலான ஹோண்டா ஆக்டிவாவிற்கு பெருத்த அடியை இது வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









