ரூ.1 லட்சத்திற்குள் ஓலா இ-ஸ்கூட்டர்!! ஒருத்தரும் பெட்ரோல் ஸ்கூட்டரை வாங்க போறதில்ல!!
ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் விரைவில் ரூ.1 லட்சத்திற்கும் குறைவான விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்தும், ஓலாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தை பற்றி உங்களில் கேள்விப்படாதவர்களே இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மூலமாக கடந்த 2021ஆம் ஆண்டில் சந்தையில் நுழைந்த ஓலா நிறுவனத்தில் இருந்து தற்சமயம் எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் உள்ளன. இதில் எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவுகள் சமீபத்தில்தான் துவங்கப்பட்டன.

ரூ.1.10 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள எஸ்1 ஏர் ஓலாவின் விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டராக விளங்குகிறது. இதன் காரணமாகவே எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மக்கள் பலர் போட்டிப் போட்டு முன்பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், பிரபல செய்தித்தளம் ஒன்றின் மூலம், எஸ்1 ஏர் மாடலை காட்டிலும் குறைந்த விலையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உருவாக்க பணிகளில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், ஓலா எலக்ட்ரிக்கின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் படம் வெளியாகியுள்ளது. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது அடுத்த திட்டங்கள் குறித்த விபரங்களை சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் வெளியிட்டது. அப்போது, எஸ்1 புரோ மற்றும் எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் 'எஸ்1 எக்ஸ்' என்ற பெயரில் புதியதொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இருந்துள்ளது. இதனை போட்டோ எடுத்து பலர் இணையத்தில் உலாவிட்டுள்ளனர்.
எஸ்1 ஏர் மற்றும் எஸ்1 புரோ இரண்டும் விலையில் வேறுப்பட்டாலும், தோற்றத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவைகளாகவே உள்ளன. ஆனால் புதிய எஸ்1 எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தோற்றத்தில் சற்று வேறுப்பட்டு உள்ளதை இணையத்தில் வெளியாகியுள்ள படங்களில் பார்க்க முடிகிறது. குறிப்பாக, ஹெட்லைட்டை சுற்றிலும் வழங்கப்படும் கௌலின் டிசைன் மாற்றப்பட்டு உள்ளது.

இவை தவிர்த்து, புதிய எஸ்1 எக்ஸ் ஸ்கூட்டர் குறித்து பெரியதாக எந்த விபரமும் கிடைக்க பெறவில்லை. வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்திய சுதந்திர தின விழாவில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்த ஓலா திட்டமிட்டு வருவதாக கடந்த சில வாரங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. 2021இல் எஸ்1 & எஸ்1 புரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் அறிமுகப்படுத்தப்பட்டன.
இதனால் இந்த 2023ஆம் ஆண்டின் தேசிய சுதந்திர தினத்திலும் ஓலாவின் சார்பில் ஓர் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் களமிறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் புதிய ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் படம் வெளியாகியுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஓலா எஸ்1 எக்ஸ் ஆனது இருப்பதிலேயே விலை குறைவான ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ரூ.1 லட்சத்திற்குள் விலையை பெற்றுவரும் என கூறப்படுகிறது.
புதிய ஓலா எஸ்1 எக்ஸ் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 100கிமீ என்ற அளவில் இருக்கலாம். அதாவது, ஸ்கூட்டரில் பொருத்தப்படும் பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 100கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்கக்கூடிய வகையில் வழங்கப்படலாம். எஸ்1 ஏர் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 125கிமீ என்ற அளவில் ரேஞ்ச் கிடைக்கிறது. அதுவே, எஸ்1 புரோ ஸ்கூட்டரில் சுமார் 181கிமீ வரையிலான மைலேஜை பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தேவை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என சொன்னாலும், இன்னமும் பெரும்பான்மையான எண்ணிக்கையில் பெட்ரோல் ஸ்கூட்டர்களே விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய நிலையை முற்றிலுமாக மாற்றியமைக்கக் கூடியதாக புதிய எஸ்1 எக்ஸ் விளங்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
Source: TOI Auto


Click it and Unblock the Notifications








