இவ்ளோ கம்மி விலைக்கு வந்திருக்கு இருந்தாலும் எதை தேர்வு செய்யுறதுனு குழப்பமா? 3 தேர்வுகளின் ஒப்பீட்டு தகவல்!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் புதிய எஸ்1எக்ஸ் (S1X) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் மூன்று வேரியண்டுகளையும் சிறப்பம்சங்கள், விலை மற்றும் ரேஞ்ஜ் வாரியாக ஒப்பீடு செய்துள்ளோம். அதுகுறித்த தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக எஸ்1எக்ஸ் (S1X) மாடலை இந்தியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்றே இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் அரங்கேறியது. ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த வாகனம் விற்பனைக்குக் கிடைக்கும்.

எஸ்1 எக்ஸ் பிளஸ் (S1 X+), எஸ்1 எக்ஸ் 2kWh (S1 X 2kWh) மற்றும் எஸ்1 எக்ஸ் 3kWh (S1 X (3kWh) ஆகிய மூன்று விதமான தேர்வுகளிலேயே புதிய எஸ்1 எக்ஸ் மாடல் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த மூன்றையே ஒப்பீடு செய்து அதுகுறித்த தகவலை இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம்.
புதிதாக மின்சார இருசக்கர வாகனத்தை வாங்கும் எண்ணத்தில் இருப்பவர்களுக்கு உதவும் விதமாக இந்த பதிவை வெளியிட்டு உள்ளோம். குறிப்பாக, ஓலாவின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் எந்த தேர்வை வாங்கலாம் என யோசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பதிவு மிகுந்த உதவியாக இருக்கும் என நம்புகின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ரேஞ்ஜ் திறன்: ஓலா நிறுவனம் புதிதாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் எஸ்1எக்ஸ் மாடலில் 2kWh மற்றும் 3 kWh ஆகிய இரு பேட்டரி பேக் தேர்வை மட்டுமே வழங்குகின்றது. எஸ்1எக்ஸ் தேர்வில் இரு (2kWh மற்றும் 3 kWh) விதமான பேட்டரி ஆப்ஷனையும்,
எஸ்1 எக்ஸ் பிளஸ் தேர்வில் 3kWh பேட்டரி பேக் ஆப்ஷனை மட்டுமே ஓலா வழங்குகின்றது. இதில், 2kWh பேட்டரி பேக்கானது ஓர் முழு சார்ஜில் 91 கிமீ ரேஞ்ஜையும், 3kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 151 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும்.

மோட்டார்: பேட்டரி பேக் விஷயத்தில் மாறுபட்டுக் காட்சியளிக்கும் இந்த தேர்வுகள் மின்சார மோட்டார் விஷயத்தில் அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. 6கிலோவாட் பவரை வெளியேற்றக் கூடிய மோட்டாரையே ஓலா தன்னுடைய புதிய எஸ்1எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தியுள்ளது. இந்த மோட்டார் எஸ்1எக்ஸ் பிளஸ் தேர்வில் மணிக்கு 90கிமீ வேகத்தில் பயணிக்கின்ற வகையிலும், எஸ்1எக்ஸ் 2kWh பேட்டரி பேக் கொண்ட தேர்வில் மணிக்கு 85கிமீ வேகத்திலும் பயணிக்கின்ற வகையில் ட்யூன்-அப் செய்யப்பட்டிருக்கின்றது.
சிறப்பம்சங்கள்: எஸ்1எக்ஸ் மற்றும் எஸ்1எக்ஸ் பிளஸ் ஆகிய இரண்டிற்கும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் மிகப் பெரிய வித்தியாசத்தைக் காண முடிகின்றது. எஸ்1எக்ஸ் மலிவு விலை தேர்வு என்பதால் அதில் சிறப்பு அம்சங்கள் சற்று குறைவாகவே இடம் பெற்றிருக்கின்றன. எஸ்1எக்ஸ் தேர்வில் 3.5 அங்குல திரை வழங்கப்பட்டிருக்கின்ற நிலையில், எஸ்1எக்ஸ் பிளஸ் தேர்விலோ 5 அங்குல அளவிலான பெரிய திரை வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுவே இந்த இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கும் இடையில் உள்ள மிகப் பெரிய வித்தியாசமாக உள்ளது. இது தவிர, சாவி இல்லாமலேயே ஸ்கூட்டரை அன்லாக் செய்யும் வசதி மற்றும் ஸ்மார்ட் இணைப்பு வசதி உள்ளிட்டவையும் எஸ்1எக்ஸ் பிளஸ் தேர்வில் வழங்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நிற தேர்வுகள்: இதைப் பொருத்த வரையில் எஸ்1எக்ஸ் மாடலே பெஸ்டானதாக இருக்கின்றது. ஏனெனில் இதிலேயே ஏழு விதமான நிற தேர்வுகளை ஓலா வழங்குகின்றது. அதேநேரத்தில் ஓலா எஸ்1எக்ஸ் பிளஸ் மாடலில் நான்கு விதமான தேர்வுகள் மட்டுமே வழங்கப்படுகின்றது. அனைத்தும் இளைஞர்களைக் கவரக் கூடிய சூப்பரான நிற தேர்வுகள் ஆகும்.
விலை மற்றும் டெலிவரி விபரம்: ஓலா எஸ்1எக்ஸ் பிளஸ் தேர்வின் விலை ரூ. 99,999 ஆகும். இது வெறும் அறிமுக விலை மட்டுமே ஆகும். ஆகஸ்டு 21 ஆம் தேதியில் இருந்து இதன் விலையில் ரூ. 10 ஆயிரம் உயர்த்தப்பட இருக்கின்றது. அதாவது, ரூ. 1,09,999-க்கு எஸ்1எக்ஸ் பிளஸ் விற்கப்படும்.
இதேபோல் எஸ்1எக்ஸ் 3kWh தேர்விற்கு அறிமுகமாக ரூ. 89,999-ம், எஸ்1எக்ஸ் 2kWh தேர்விற்கு அறிமுகமாக ரூ. 79,999-ம் நிலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இவற்றின் விலையிலும் ஆகஸ்டு 21ஆம் தேதியில் இருந்து பத்தாயிரம் உயர்த்தப்பட இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, எஸ்1எக்ஸ் பிளஸ் தேர்வின் டெலிவரி பணிகள் வரும் செப்டம்பர் மாதத்திலும், எஸ்1எக்ஸ் மாடலின் டெலிவரி பணிகள் டிசம்பர் மாதத்தில் இருந்தும் தொடங்கப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா மின்சார இருசக்கர வாகன உலகின் அறிவிக்கப்படாத தலைவனாக ஓலா எலெக்ட்ரிக் இருக்கின்றது. இந்த நிறுவனம் இந்த இடத்தை தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நோக்கிலேயே புதிய மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தேர்வுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









