ஒரே மாசத்துல இவ்வளவு பேர் புக் பண்ணீட்டாங்களா? இனி ரோடு ஃபுல்லா இந்த பைக் தான் ஓடப்போகுது!
புக்கிங் துவங்கிய ஒரே மாதத்தில் சுமார் 25,000 பேர் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கை புக் செய்துள்ளதாக ஹீரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைந்த விலை ஹார்லி பைக் இந்தியாவில் அறிமுகமாக போவதால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் இந்த புக்கிங் நடந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹார்லி டேவிட்சன் நிறுவனம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பைக் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் பைக்கை வாங்குவது என்பது பலருக்கு பெரும் கனவாக இருக்கிறது. இந்நிலையில் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து முற்றிலுமாக வெளியேறியது.

தற்போது ஹார்லி டேவிட்சன் நிறுவனம் இந்தியாவிற்குள் மீண்டும் தனது காலடித்தடத்தை புதிய வடிவில் பதிக்க தயாராகி வருகிறது. அதன்படி ஹார்லி டேவிட்சன் நிறுவனம் மற்றும் ஹீரோ மோட்டோ கார்ப் ஆகிய இரண்டு நிறுவனங்களும் கூட்டு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளனர். அவர்கள் இருவரும் இணைந்து செய்படவுள்ளனர்.
அதன்படி இந்தியாவில் ஹீரோ நிறுவனம் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் பைக்குகளை தயாரித்து இந்தியாவில் விற்பனைக்கு வழங்கும் ஹார்லி டேவிட்சன் நிறுவனம் அந்த பைக்கின் விற்பனையை செய்யும். இந்த இரு நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் முதல் தயாரிப்பாக ஹார்லி டேவிட்சன் நிறுவனம் எக்ஸ் 440 என்ற தனது புதிய பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

கடந்த மாதம் அறிமுகமான இந்த பைக் இந்தியாவில் குறைந்த விலை ஹார்லி டேவிட்சன் பைக்காக ரூபாய் 2.39 லட்சம் என்ற விலையில் தற்போது புக்கிங் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஜூலை மாதம் 4 ம்தேதி இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்டு அதற்கான புக்கிங் துவங்கியது.
இந்நிலையில் புக்கிங் துவங்கி ஒரு மாதம் ஆன நிலையில் ஹீரோ நிறுவனம் இந்த ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கிற்கு இதுவரை 25 ஆயிரம் பேர் புக் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்த ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கை ஹீரோ நிறுவனம் ராஜஸ்தானில் உள்ள தனது கார்டன் ஃபேக்டரியில் வைத்து தயாரிக்கிறது.
இந்த ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கை பொறுத்தவரை 440 சிசி ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6000 ஆர்பிஎம்மில் 27 பிஎச்பி பவரையும் 4000 ஆர்பிஎம்மில் 38 என்எம் டார்க் திறனையும் அதிகபட்சமாக வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கை பொறுத்தவரை எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டுள்ளது. இதில் யுஎஸ்பி போர்ட் மொபைல் சார்ஜர்களும் வழங்கப்பட்டுள்ளன. இதன் முன் பக்கம் 3.5 இன்ச் டிஎப்டி ஸ்க்ரீன் வழங்கப்பட்டுள்ளது. இது ஸ்பீடோமீட்டர், டேக்கோ மீட்டர், ட்ரிப் மீட்டர்,ஓடோ மீட்டர், சர்வீஸ் இண்டிகேட்டர் மற்றும் சைடு ஸ்டாண்ட் அலாட் ஆகிய அம்சங்கள் உள்ளன. மேலும் இதில் ப்ளூடூத் ஆக்டிவிட்டி சப்போர்ட்டும் இருக்கிறது.
இந்த பைக்கை தயாரிக்கும் ஹீரோ மோட்டோ பார்க் நிறுவனத்தின் சிஇஓ நிரஞ்சன் குப்தா கூறும்போது: "ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிற்கான வாடிக்கையாளர் சப்போர்ட்டை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹீரோ மோட்டார் கார்ப் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. பெரும்பாலான புக்கிங் டாப் மாடலுக்கே வருகிறது. இதன்மூலம் வாடிக்கையாளர்கள் நல்ல பிராண்டிங்கிற்கும் சரியான மாடலுக்கும் அதிக விலை கொடுக்க தயங்குவதில்லை என புரிகிறது.
பிரீமியம் செக்மெண்டில் எங்கள் பயணத்தை இப்பொழுதுதான் தொடங்கி உள்ளோம். மேலும் பல தயாரிப்புகளை வெளியிட உள்ளோம். எங்கள் போர்ட் போலியோவில் தரமான தயாரிப்புகள் வரிசையாக களமிறங்க போகிறது" என தெரிவித்தார். இந்த பைக்கின் டெலிவரி வரும் அக்டோபர் மாதம் துவங்குகிறது. இந்த பைக் விற்பனைக்கு வந்த பிறகு இதை வாங்குபவர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹார்லி டேவிட்சன் பைக்கை வாங்க மக்கள் பலர் ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் இந்த பைக்கின் வருகைக்காக காத்திருந்த பலர் ஆரம்பத்திலேயே புக்கிங் செய்து விட்டனர். இந்த பைக்கை சுமார் 25,000 பேர் புக் செய்துள்ள நிலையில் இந்த பைக் விற்பனைக்கு வரும்போது மேலும் இதை வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications








