மேக்ஸிமம் ரூ.2 லட்சம் தான் செலவாகும்... இந்தியாவின் பிரபலமான இந்த ஸ்போர்ட்ஸ் பைக்குகளுள் ஒன்றை வாங்கிவிடலாம்!!
நாக்டு பைக்குகள் எத்தனை தான் விற்பனையில் இருந்தாலும், உடல் முழுவதும் பேனல்களால் சூழப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகளை வாங்குவதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளதை மறுப்பதற்கில்லை. இத்தகைய ஸ்போர்ட்ஸ் பைக்குகள் பல லட்சங்களில் கூட கிடைக்கின்றன. ஆனால் நாம் இந்த செய்தியில் பலத்தரப்பட்ட மக்களால் வாங்கக்கூடிய வகையில் ரூ.2 லட்சத்திற்குள் எக்ஸ்-ஷோரூம் விலையை கொண்ட பிரபலமான 4 ஸ்போர்ட்ஸ் பைக்குகளை பற்றி தான் பார்க்க போகிறோம்.
சுஸுகி ஜிக்ஸெர் எஸ்.எஃப்
ஸ்போர்ட்ஸ் ரக மோட்டார்சைக்கிள் என்றதும் பலரது நினைப்பு யமஹா, கேடிஎம் பைக்குகளின் மீதே செல்லும். ஏனெனில் இந்தியாவில் சுஸுகி ஜிக்ஸெர் பைக்குகளுக்கு போதிய அளவு வரவேற்பு கிடைப்பதில்லை என்பது உண்மையே. இருப்பினும் தரத்திலும், செயல்படுதிறனிலும் இந்த ஜப்பானிய பைக்குகள் எந்த விதத்திலும் குறைந்தவை கிடையாது. அதுமட்டுமின்றி இவற்றின் விலையும் குறைவாகவே உள்ளன.

இந்தியாவில் ஜிக்ஸெர் பைக்குகளை 150சிசி மற்றும் 250சிசி என இரு விதமான என்ஜின்களுடன் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் விற்பனை செய்கிறது. இதில் 150சிசி வெர்சனின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.1.35 லட்சம் என்ற அளவில் உள்ள நிலையில், 250சிசி வெர்சனின் விலை அதனை காட்டிலும் ரூ.50,000 அளவில் அதிகமாக ஏறக்குறைய ரூ.1.88 லட்சம் என உள்ளது. ஜிக்ஸெர் பைக்குகள் ஓர் முழுமையான ஜப்பானிய ஸ்டைல் பைக்குகள் என சொல்லலாம்.
பஜாஜ் பல்சர் ஆர்.எஸ்200
பஜாஜ் ஆட்டோவின் பல்சர் பைக்குகளுக்கு அறிமுகமே தேவையில்லை என நினைக்கிறேன். பல்சர் பைக்குகளின் பிரீமியம் வெர்சன்களாக பார்க்கப்படும் என்.எஸ்200 மற்றும் ஆர்.எஸ்200 பைக்குகளில், நாக்டு என்.எஸ்200 பைக்குகளையே அதிகளவில் சாலையில் பார்ப்பீர்கள். ஏனெனில் ஆர்.எஸ்200 பைக்குகளுக்கு இளைஞர்கள் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

ஆர்.எஸ்200 பைக்கை முதன்முதலாக 2015இல் பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்தது. அறிமுகம் ஆன சமயத்தில், இருப்பதிலேயே வேகமான பல்சர் பைக்காக இந்த மாடல் அறியப்பட்டது. தற்போது இந்த இடத்தை பல்சர் 250சிசி பைக்குகள் பிடித்துவிட்டன என்றாலும், இப்போதும் அதிக விலையில் விற்கப்படும் பல்சர் பைக், ஆர்.எஸ்200 தான். அந்த அளவிற்கு செயல்படுதிறனிலும், ஹேண்ட்லிங்கிலும் எந்த குறையும் இந்த பைக்கில் இல்லை.
யமஹா ஆர்15 வி4
யமஹா ஆர்15, இந்த பைக்கை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். அந்த அளவிற்கு தெருவுக்கு ஒருத்தர் ஆவது யமஹா ஆர்15 பைக்கை வைத்திருப்பதை பார்க்க முடியும். இந்த வகையில் ரூ.2 லட்சத்தில் முதல்முறையாக ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்க திட்டமிட்டு வருபவர்களுக்கு ஏற்ற பைக் இது. யமஹா நிறுவனம் ஆர்15 பைக்கின் 4ஆம் தலைமுறை மாடலை கடந்த ஆண்டில்தான் வி4 என்ற பெயரில் யமஹா அறிமுகப்படுத்தியது.

யமஹா ஆர்15 வி4-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.80 லட்சமாகும். இதனுடன் ஆர்15 எம் பைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. வழக்கமான ஆர்15 வி4 பைக்கை காட்டிலும் செயல்திறன்மிக்கதாக விளங்கும் இதன் விலை சரியாக ரூ.2 லட்சம் என்ற அளவில் உள்ளது. இவற்றுடன் முந்தைய 3ஆம் தலைமுறை ஆர்15 பைக்கும் ஆர்15 எஸ் என்கிற பெயரில் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது தற்சமயம் ரூ.1.64 லட்சமாக உள்ளது.
கேடிஎம் ஆர்சி125
பஜாஜ் ஆட்டோவின் புனே தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கேடிஎம் பைக்குகள் எந்த அளவிற்கு பிரபலமானவையோ, அதே அளவிற்கு விலைமிக்கவை. இதற்கு ஆர்சி125 மாடல் மிக சிறந்த உதாரணம். இந்தியாவில் கேடிஎம் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்படும் எண்ட்ரீ-லெவல் ஸ்போர்ட்ஸ் பைக் ஆர்சி125 தான். ஆனால் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.89 லட்சம் அளவில் உள்ளது.

இத்தனைக்கும் இந்த பைக்கில் 150சிசி என்ஜின் கூட கிடையாது, 125சிசி என்ஜின் தான் பொருத்தப்படுகிறது. அப்படியென்றால், விலை மட்டும் ஏன் இவ்வளவு என கேட்டீர்கள் என்றால், கேடிஎம் பைக்குகளில் அந்த அளவிற்கு பிரீமியம் தரத்திலான இயந்திர பாகங்களும், அட்டகாசமான டிசைனும் வழங்கப்படுகின்றன. யமஹா ஆர்15 பைக்குகளுக்கு இணையாக எடையை கொண்டிருப்பினும், ஆர்சி125 பைக்கை ஹேண்டில் செய்வது எளியது & சவுகரியமானதும் கூட...


Click it and Unblock the Notifications









