என்ன இந்த நிறுவனத்தோட எலெக்ட்ரிக் பைக் உற்பத்தி ஆலை சென்னையில அமைய போகுதா?.. இது பைக்க இல்ல அரக்கன்!
சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ரேப்டீ (Raptee). இது ஓர் ஸ்டார்ட்-அப் மின்வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் சென்னையில் தன்னுடைய ஆலையை அமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் களமிறங்கிய பின்னர் அமைக்கப்பட இருக்கும் முதல் மின் வாகன உற்பத்தி ஆலை இதுவே ஆகும்.
இதற்காக சென்னையில் மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இங்கேயே நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பே ரேப்டீயை மின்சார இருசக்கர வாகன உற்பத்தியை நோக்கி ஈர்த்திருக்கின்றது.

எதிர்காலத்தில் ஒட்டுமொத்த உலகையும் மின்சார வாகனங்களே ஆள இருக்கின்றன. இதுவும், ரேப்டீ எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் களமிறங்குவதற்கான காரணமாக அமைந்துள்ளது. நிறுவனம் சுமார் 85 கோடி ரூபாயை மின்வாகன உற்பத்திக்காக முதலீடு செய்திருக்கின்றது. விரைவில் இந்த முதலீட்டை மேலும் ரேப்டீ அதிகரிக்கச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த உற்பத்தி ஆலையில் ஆண்டு ஒன்றிற்கு 1 லட்சம் யூனிட் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை தயாரிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஆலையில் நடப்பாண்டிலேயே மின்வாகன உற்பத்தி பணிகள் தொடங்கப்பட இருப்பதாகவும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த ஆலையில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்கள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வெளியேற்றப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரேப்டீ நிறுவனத்தின் புதிய ஆலையால் சுமார் 500-க்கும் அதிகமான புதிய வேலை வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. இந்த நிறுவனம் மின்சார இருசக்கர வாகனம் மட்டுமின்றி பேட்டரி பேக் உற்பத்தியையும் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கின்றது. விரைவில் இந்த பணிகளையும் அது தொடங்கிட இருக்கின்றது.
இந்த ஆலையும் அதே சென்னை உற்பத்தி ஆலையிலேயே தொடங்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போது கிடைத்திருக்கும் தகவலின்படி ரேப்டீ நிறுவனம் முதலில் எலெக்ட்ரிக் பைக்கையே தயாரிக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. அவ்வாறு நிறுவனம் தயாரித்து வரும் இ-பைக்கான அதி வேகத்தில் செல்லக் கூடியதாக இருக்கும்.

நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தின்படி நிறுவனம் மணிக்கு 135 கிமீ வேகத்தில் பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் பைக்கின் தயாரிப்பிலேயே ஈடுபட்டு வருகின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கால் வெறும் 3.5 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்ட முடியும்.
இதேபோல், அதிக வேகத்தில் சார்ஜாகும் திறனும் எலெக்ட்ரிக் பைக்கிற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனை வெறும் 45 நிமிடங்களிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்து கொள்ள முடியும். மேலும், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் 150 கிமீ ரேஞ்ஜை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த ரேஞ்ஜ் திறனைக் கொண்டு சென்னையில் இருந்து பாண்டிக்கே சென்றுவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர விசியூ எனும் ஏஐ டெக்னாலஜியையும் இந்த பைக்கில் ரேப்டீ நிறுவனம் வழங்க இருக்கின்றது. இந்த விசியூ பைக்கில் உள்ள ஒவ்வொரு சப்சிஸ்டத்தையும் கன்ட்ரோல் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், அது தொடர் கண்கானிப்பிலும் ஈடுபடும். ஆகையால், வாகனம் பற்றி சின்ன தகவல்கூட மிஸ்ஸாகாது. இதேபோல் பேட்டரி மேனேஜ்மென்ட் சிஸ்டம், இந்திய சாலைகளுக்கு உகந்த மின் மோட்டார், எங்கேயும் சார்ஜ் செய்து கொள்ளும் வசதி, பாதுகாப்பு கருவிகள் உள்ளிட்டவற்றையும் அதிகம் தாங்கிய வாகனமாக ரேப்டீயின் முதல் இ-பைக் தயாராகிக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க கருத்து: புதுமுக நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன சந்தையை மையமாகக் கொண்டு களமிறங்குவது வாடிக்கையாகிவிட்டது. இதுபோன்று சந்தைக்கு வந்து வெற்றியைக் கண்ட நிறுவனமே ஏத்தர் எனெர்ஜி ஆகும். இதைபோலவே நம் சென்னை நிறுவனம் இந்த பிரிவில் வெற்றி காண டிரைவ்ஸ்பார்க் தமிழின் வாழ்த்துக்கள்.
சென்னையை மையமாகக் கொண்டு சில நிறுவனங்கள் களமிறங்கதே தொடங்கி இருக்கின்றன. இதனால், சென்னை விரைவில் மின் வாகன உற்பத்திக்கான ஓர் மிக சிறந்த ஹப்-ஆக மாறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான சூழலே உருவாகி இருக்கின்றது. மேலும், உலகளவில் சென்னையின் மீதான கவனம் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









