இந்த எலக்ட்ரிக் பைக்கை வாங்குறதற்கு சரியான டைம் வந்தாச்சு!! யாருகிட்டயும் இல்லாத கலரில் வாங்கலாம்!
ரிவோல்ட் ஆர்வி400 (Revolt RV400) எலக்ட்ரிக் பைக்கிற்கு புதியதாக ஒரு பெயிண்ட் ஆப்ஷன் வழங்கப்பட்டு உள்ளது. இதனால், வழக்கமான பெயிண்ட் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, புதிய பெயிண்ட் ஆப்ஷனிலும் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கை வாங்கலாம். இதுகுறித்தும், இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மிகவும் சில எலக்ட்ரிக் பைக்குகளுள் ஒன்று, ரிவோல்ட் ஆர்வி400 ஆகும். ரத்தன் இந்தியா எண்டர்பிரைஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் பைக்கை உருவாக்குகிறது. இந்த எலக்ட்ரிக் பைக்கிற்குதான் புதியதாக ஒரு பெயிண்ட் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கிற்கு புதியதாக வழங்கப்பட்டிருக்கும் பெயிண்ட் ஆப்ஷன் எக்ளிப்ஸ் சிவப்பு ஆகும். பெயருக்கேற்ப, இந்த பெயிண்ட் ஆப்ஷனில் வாங்கினால் ஆர்வி400 பைக் பளபளப்பான சிவப்பு நிறத்தில் கிடைக்கும். அதேநேரம், கருப்பு நிற கிராஃபிக்ஸும் இந்த எக்ளிப்ஸ் ரெட் பெயிண்ட்டில் இடம்பெற்றுள்ளன.
இருக்கை மற்றும் பைக்கின் அடிப்பகுதி முழுவதுமாக கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இதனால், சிவப்பு- கருப்பு நிறங்கள் கலந்த ட்யூயல்-டோனில் இந்த பெயிண்ட் ஆப்ஷனில் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கை வாங்கலாம். இந்த புதிய பெயிண்ட் ஆப்ஷனிலும் பைக்கின் ஸ்விங்கார்ம் வழக்கம்போல் அலுமினியம் ஃபினிஷிங்கில் கிடைக்கும்.

அதேபோல், பைக்கின் முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் பிரஷ்டு சில்வர் ஃபினிஷிங்கில் வழங்கப்படும். இந்த புதிய எக்ளிப்ஸ் சிவப்பு பெயிண்ட் ஆப்ஷன் ஆனது ஆர்வி400 பைக்கில் ரிவோல்ட் நிறுவனம் இந்த 2023ஆம் வருடத்தில் அறிமுகப்படுத்தப்படும் 3வது பெயிண்ட் ஆப்ஷன் ஆகும். ஏற்கனவே இதற்கு முன்னர், ஸ்டீல்த் பிளாக் எடிசனையும், உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு இந்தியா ப்ளூ கிரிக்கெட் ஸ்பெஷல் எடிசனையும் ஆர்வி400 பைக்கில் ரிவோல்ட் அறிமுகப்படுத்தி இருந்தது.
ஆனால், இவை இரண்டும் லிமிடெட் எடிசன்கள் ஆகும். அதாவது, ஆர்வி400 பைக்கை மேற்கூறப்பட்ட எடிசன்களில் குறுகிய காலத்திற்கு மட்டுமே பெற முடியும். ஆனால், தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய எக்ளிப்ஸ் ரெட் பெயிண்ட் ஆப்ஷன் இனி தொடர்ந்து ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கூறியதுபோல், இந்த புதிய எக்ளிப்ஸ் ரெட் பெயிண்ட் ஆப்ஷனில் மட்டுமின்றி, ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கை காஸ்மிக் பிளாக் மற்றும் மிஸ்ட் க்ரே என்ற வழக்கமான பெயிண்ட் ஆப்ஷன்களிலும் வாங்கலாம். இந்த எலக்ட்ரிக் பைக்கின் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.1.19 இலட்சமாக உள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் 3 கிலோவாட்ஸ் (4 பிஎச்பி) மிட்-டிரைவ் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படுகிறது.
இந்த எலக்ட்ரிக் மோட்டார் ஆனது 170 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது. மோட்டார் உமிழும் இயக்க ஆற்றல்கள் பெல்ட் டிரைவ் மூலமாக இந்த பைக்கில் பின் சக்கரங்களுக்கு செல்கின்றன. இந்த மோட்டாரில் பொருத்தப்படும் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் என்கிறது ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளுக்கான மார்க்கெட் சிறிய அளவிலேயே உள்ளது. இருப்பினும், சந்தையில் ஓரளவிற்கு சிறப்பாக விற்பனையாகும் எலக்ட்ரிக் பைக் ரிவோல்ட் ஆர்வி400 ஆகும். வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த எலக்ட்ரிக் பைக்கை தொடர்ந்து புத்துணர்ச்சியாக வைத்திருக்கவே இவ்வாறான புதிய புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications








