ஷோரூமை தேடி அலைய தேவையில்லை!! இந்த எலக்ட்ரிக் பைக்கை இனி ஃப்ளிப்கார்ட்டிலேயே வாங்கலாம் - விலையில் 10% சலுகை!
ரிவோல்ட் ஆர்வி400 (Revolt RV400) எலக்ட்ரிக் பைக் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது. பிரபல ஆன்லைன் விற்பனை தளமான ஃப்ளிப்கார்ட்டில் இந்த ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கிற்கு எவ்வளவு விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது? என்பதையும், இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களையும் இனி பார்க்கலாம்.
ரத்தன் இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்படும் எலக்ட்ரிக் பைக் பிராண்ட்டாக ரிவோல்ட் மோட்டார்ஸ் உள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து முதல் எலக்ட்ரிக் பைக் கடந்த 2019இல் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டது. ரிவோல்ட் நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கம் உள்ளது. அதேபோல் ஷோரூம்களும் நாட்டின் முக்கியமான நகரங்களில் செயல்படுகின்றன.

இருப்பினும், ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கை அனைத்து விதமான வாடிக்கையாளர்களுக்கும் ரிவோல்ட் மோட்டார்ஸால் கொண்டு செல்ல முடியவில்லை. குறிப்பாக, கிராமப்புறங்களில் வசிப்போர் ரிவோல்ட் ஆர்வி400 பைக்கை டெலிவிரி எடுக்க சில மாதங்கள் வரையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இந்த நிலை இனி இருக்காது. ஏனெனில், ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்துள்ளது.
இதற்காகவே ரத்தன் எண்டர்பிரைஸுக்கும், ஃப்ளிப்கார்ட் நிறுவனத்திற்கும் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. ஃப்ளிப்கார்ட்டில் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கை மிஸ்ட் கிரே, ரெபெல் சிவப்பு மற்றும் காஸ்மிக் கருப்பு என மொத்தம் 3 விதமான பெயிண்ட் தேர்வுகளில் வாங்கலாம். ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,54,950 ஆகும். ஆனால் ஃப்ளிப்கார்ட்டில் 10% சலுகை உடன் ரூ.1,38,950 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விலையில் பைக்குடன், பைக்கின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கான சார்ஜரும் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட்டின் 10% சலுகை உடன், குறிப்பிட்ட வங்கியின் மூலம் பைக்கை வாங்குவோருக்கு மேலும் சில சலுகைகள் மற்றும் கேஷ்பேக் கூப்பனும் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட்டில் இந்த எலக்ட்ரிக் பைக்கிற்கு மாதத்தவணை ரூ.11,580இல் இருந்து ஆரம்பிக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு ஃப்ளிப்கார்ட் செயலியை அணுகவும்.

சென்னையில் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கை ஃப்ளிப்கார்ட்டில் புக் செய்பவர்களுக்கு அடுத்த 3 வாரங்களில் பைக் இலவசமாக டெலிவிரி செய்யப்படும் என தற்போதைக்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த டெலிவிரி காலம் ஆனது பைக்கை புக் செய்வோரின் இருப்பிட பகுதி மற்றும் புக் செய்யும் நேரத்தை பொறுத்து வேறுப்படலாம். அதேபோல், ஃப்ளிப்கார்ட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ரூ.1,38,950 என்பது ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையே ஆகும். ஆர்டிஓ கட்டணம் மற்றும் இன்ஸ்சூரன்ஸ் மாநிலம் & நகரத்தை வேறுப்படும்.
பைக்கிற்கான சேவை மற்றும் ஆக்ஸஸரீகள் எதையாவது கூடுதலாக வாங்கினால், இவற்றிற்கான கட்டணமும் மாநிலங்களை பொறுத்து சற்று வேறுப்படும். இவை அனைத்தையும் ஃப்ளிப்கார்ட்டில் மட்டும் மேற்கொள்ள முடியாது. இதற்காக, ஃப்ளிப்கார்ட் தளம் வாயிலாக அருகில் உள்ள ரிவோல்ட் டீலர் பைக்கை வாங்கும் வாடிக்கையாளரை தொடர்பு கொள்வார். எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒவ்வொரு மாநில அரசாங்கமும் ஒவ்வொரு விதமான மானியத்தை வழங்குவதை மறந்துவிட வேண்டாம்.
ரிவோல்ட் ஆர்வி400 எலக்ட்ரிக் பைக்கை பொறுத்தவரையில், இதில் 3 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் மத்தியில் பொருத்தப்படுகிறது. இதில் 3.24kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்படுகிறது. பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 150கிமீ தொலைவிற்கு ஈக்கோ மோடில் பயணிக்கலாம். இந்த எலக்ட்ரிக் பைக்கின் டாப்-ஸ்பீடு மணிக்கு 85கிமீ ஆகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இன்றைய காலத்தில் ஸ்மார்ட் போனை வைத்தில்லாதவர்களே இல்லை என சொல்லலாம். ஸ்மார்ட்போன் என்றால் அதில் ஃப்ளிப்கார்ட் செயலியும் இருக்கும். ஆக, ரிவோல்ட் ஆர்வி400 பைக்கை புக் செய்வது இன்னும் எளிமையானதாக மாறியுள்ளது. அத்துடன், ஃப்ளிப்கார்ட்டின் மூலம் சில பல சலுகைகள் உடனும் ஆர்வி400 பைக்கை வாங்கலாம் என்பது கவனிக்கத்தக்க விஷயமாகும்.


Click it and Unblock the Notifications








