விற்பனையில் அடித்து ஆடும் ராயல் என்பீல்டு!! போட்டிக்கு ஒருத்தர் கூட இல்ல- ஆகஸ்ட்டில் எத்தனை பைக்குகள் விற்பனை?
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனங்களுள் ஒன்று ராயல் என்பீல்டு ஆகும். இந்த நிறுவனத்தில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எத்தனை மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன என்ற விபரங்கள் வெளிவந்துள்ளன. அவற்றை விரிவாக இனி பார்க்கலாம்.
கிளாசிக் தோற்றத்திலான பைக்குகளை விற்பனை செய்வதில் நிபுணத்துவம் பெற்றதாக விளங்கும் ராயல் என்பீல்டு சமீப காலமாக தன்னுடைய பாதையை மாற்றிக்கொண்டு, மாடர்ன் தோற்றத்திலான பைக்குகளையும் தயாரிக்க ஆரம்பித்துள்ளது. இதன் விளைவாக வெளிவந்ததே, ஹண்டர் 350 ஆகும். புதிய ஜே-பிளாட்ஃபாரத்தில் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஹண்டர் 350 சந்தையில் பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

இதன் காரணமாகவே, தனது அடுத்தடுத்த பைக்குகளையும் இதே ஜே-பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்க ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது. இதன்படி சமீபத்தில் விற்பனைக்கு வந்த புதிய தலைமுறை புல்லட் 350 பைக்கும் மாடர்ன் டச்களுடன் இருப்பதை பார்க்கலாம். இந்த யுக்தி ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு நல்ல வெற்றியை வழங்கி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு மாதமும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 70,112 ராயல் என்பீல்டு பைக்குகளும், கடந்த 2023 ஜூலை மாதத்தில் 73,117 ராயல் என்பீல்டு பைக்குகளும் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதுவரையில் இல்லாத புதிய உச்சமாக சுமார் 77,583 ராயல் என்பீல்டு பைக்குகள் விற்கப்பட்டு உள்ளன.

இதில் 69,393 பைக்குகள் இந்தியாவிலும், 8,190 பைக்குகள் வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதியும் ராயல் என்பீல்டு செய்தவை ஆகும். ஆனால் 2022 ஆகஸ்ட் மாதத்தில் 62,892 ராயல் என்பீல்டு பைக்குகள் மட்டுமே உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதேபோல், வெளிநாட்டு சந்தைக்கான ஏற்றுமதியும் அந்த மாதத்தில் 7,220 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது.
கடந்த 2023 ஜூலை மாதத்திலும், 66,062 பைக்குகளை ராயல் என்பீல்டு உள்நாட்டில் விற்பனை செய்தும், 7,055 பைக்குகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் இருந்தது. ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து 350சிசி பைக்குகளும், 650சிசி பைக்குகளும் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றிற்கு மத்தியில் ஹிமாயலன் பைக்குகளையும் ராயல் என்பீல்டு விற்பனை செய்கிறது.

இந்திய சந்தையை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு 350சிசி பைக்குகளுக்கு தான் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேநேரம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ராயல் என்பீல்டு பைக்குகள் அதிகளவில் 650சிசி பைக்குகளாக உள்ளன. உள்நாட்டு விற்பனை, வெளிநாட்டு ஏற்றுமதி என மொத்தமாக பார்த்தால், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 69,023 350சிசி பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
அதுவே கடந்த 2022 ஆகஸ்ட்டில் 62,236 350சிசி பைக்குகளை மட்டுமே ராயல் என்பீல்டு விற்பனை செய்து இருந்தது. 350சிசி-க்கும் அதிகமான சிசி என்ஜின் கொண்ட பைக்குகள் கடந்த ஆகஸ்ட்டில் 8,560 யூனிட்கள் விற்கப்பட்டு உள்ளன. 2022 ஆகஸ்ட்டில் இவை 7,876 யூனிட்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. ஆனால், கடந்த ஜூலை மாதத்தில் இவை 8,719 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மாதத்திற்கு 45,000 - 50,000 என்ற அளவில் மட்டுமே ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனையாகி வந்த நிலையில், தற்போது 77 ஆயிரங்கள் என்ற அளவில் விற்பனையாகுவதன் மூலம் கடந்த சில வருடங்களில் ராயல் என்பீல்டு பிராண்ட் எந்த அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதை அறியலாம். இதற்கெல்லாம் முக்கிய காரணம், குறிப்பிட்ட கால இடைவெளியில் புதிய, புதிய பைக்குகளை ராயல் என்பீல்டு தொடர்ச்சியாக அறிமுகம் செய்வதாகும்.


Click it and Unblock the Notifications









