ராயல் என்ஃபீல்டின் ரேஞ்சே மாறிடுச்சு!! ஒரே மாதத்தில் அசால்ட்டா 80 ஆயிரம் பைக்குகளை விற்குது... எது டாப்-சேல்?
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகள் விற்பனை கடந்த 2023 நவம்பர் மாதத்தில் இதுவரையில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான பைக்குகளை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனை செய்து அசத்தியுள்ளது. இது 2022 நவம்பர் மாதத்தை காட்டிலும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்கள் அதிகமாகும்.
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் நிறுவனமாக விளங்கும் ராயல் என்பீல்டு அதன் மோட்டார்சைக்கிள்களை 350சிசி, 350சிசி+ என இரு விதமான பிரிவுகளில் விற்பனை செய்கிறது. ஒட்டு மொத்தமாக கடந்த மாதத்தில் 80,251 பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் 70,766 பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது.

கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்த 80,251 பைக்குகளில் 75,137 பைக்குகள் உள்நாட்டு சந்தையில், அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். 2022 நவம்பர் மாதத்தில் 65,760 பைக்குகளை மட்டுமே உள்நாட்டில் ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது. ஆனால், முந்தைய 2023 அக்டோபர் மாதத்தில் 80 ஆயிரத்திற்கு அதிகமான ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
கடந்த நவம்பர் மாதத்தில் ராயல் என்ஃபீல்டு ஒட்டுமொத்தமாக விற்பனை செய்த 80,251 பைக்குகளில் மீதி 5,114 பைக்குகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். 2022 நவம்பர் மாதத்திலும் 5 ஆயிரத்திற்கும் அதிகமான பைக்குகளை ராயல் என்ஃபீல்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது என்றாலும், 2023 அக்டோபர் மாதத்தில் 3,477 பைக்குகள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தன.

கடந்த நவம்பரில் ராயல் என்ஃபீல்டு ஒட்டுமொத்தமாக விற்பனை செய்துள்ள 80,251 பைக்குகளில் சுமார் 74,275 பைக்குகள் 350சிசி பைக்குகள் ஆகும். மீதி 5,976 மட்டுமே 350சிசி-க்கு மேற்பட்ட சிசி என்ஜின் கொண்ட பைக்குகள் ஆகும். அதாவது, ஹிமாலயன், ஸ்க்ராம் 411 மற்றும் 650சிசி ட்வின் பைக்குகள் மட்டுமே மீதி 5,976 ஆகும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் 8,319 பைக்குகள் குறைவாக 65,956 350சிசி பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
ஆனால், 2023 அக்டோபர் மாதத்தில் 76 ஆயிரத்திற்கும் அதிகமான 350சிசி பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது. அதேபோல், 350சிசி-க்கு மேற்பட்ட சிசி பைக்குகள் 2023 அக்டோபரில் 8,360 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் 4,810 350சிசி+ பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ஒட்டுமொத்தமாக இந்த 2023-24ஆம் நிதியாண்டில் (2023 ஏப்ரலில் இருந்து துவங்கியது) மொத்தம் 6,21,672 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் உள்நாட்டிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2022-23 நிதியாண்டில் இதே 8 மாதங்களில் 5,47,970 பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது.
உள்நாட்டில் விற்கப்பட்டவை என்று மட்டும் எடுத்து பார்த்தால், இந்த 2023-24 நிதியாண்டில் தற்போது வரையில் மட்டும் 5,72,982 பைக்குகள் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2022-23 நிதியாண்டில் இந்த விற்பனை எண்ணிக்கை ஆனது 4,82,997 ஆக மட்டுமே பதிவாகி இருந்தது. ஆனால், வெளிநாட்டு ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் 16,283 பைக்குகள் அதிகமாக இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில வருடங்களுக்கு முன்பு வரையில் இந்தியாவில் மாதத்திற்கு 50 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலேயே பைக்குகளை ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்து வந்தது. ஆனால், இப்போது மாதத்திற்கு அசால்ட்டாக 75 ஆயிரம் பைக்குகளை உள்நாட்டில் மட்டும் விற்பனை செய்கிறது. இதில் இருந்து கடந்த சில வருடங்களில் ராயல் என்ஃபீல்டு அடைந்திருக்கும் உயரத்தை அறியலாம்.


Click it and Unblock the Notifications









