ராயல் என்பீல்டின் அடுத்த நம்பிக்கைக்குரிய பைக்!! பெரிய முதலீட்டில் களமிறக்குகிறது - எல்லாம் கஸ்டமர்ஸ் கையில்!!
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் புதியதொரு மோட்டார்சைக்கிளை இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தியுள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடர்பாக வெளியாகியுள்ள ஸ்பை படங்களையும், இந்த சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டு உள்ள புதிய ராயல் என்பீல்டு பைக்கை பற்றியும் முழுமையாக இனி பார்க்கலாம்.
2027ஆம் ஆண்டு வரையில் ஒவ்வொரு 3 மாதத்திற்கும் ஓர் புதிய மோட்டார்சைக்கிளை அறிமுகப்படுத்த உள்ளதாக சில வருடங்களுக்கு முன்னர் ராயல் என்பீல்டு தெரிவித்தது. தற்போது வரையில், அதன்படி நடந்துக் கொண்டும் வருகிறது. இந்த வகையில், விரைவில் ராயல் என்பீல்டில் இருந்து அப்டேட் செய்யப்பட்ட புல்லட் 350 பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில், புதிய தோற்றத்திலான ராயல் என்பீல்டு பைக் ஒன்று எந்தவொரு மறைப்பும் இன்றி, சிவப்பு நிற நம்பர் பிளேட் உடன் பொது சாலையில் சோதனை செய்யப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு, விற்பனையில் உள்ள ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் போன்று இருக்கும் இது 'பாப்பர் 350' என அழைக்கப்படுகிறது. மேலும், இந்த புதிய ராயல் என்பீல்டு பாப்பர் 350 மோட்டார்சைக்கிளின் அறிமுகம் அடுத்த 2024ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சோதனை ஓட்டம் குறித்து நமக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஸ்பை படங்களில், பைக்கில் எந்தவொரு லோகோவும், டிசைனும் இல்லாமல் இருப்பதை காணலாம். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் லோகோ கூட இந்த சோதனை ஓட்ட பைக்கில் இல்லை. பைக் குறித்த விபரங்கள் வெளியாகிவிட கூடாது என்பதற்காக, அவை எதுவும் இல்லை. புதிய பாப்பர் 350 பைக் தற்போதைய கிளாசிக் 350 பைக்கை விடவும் அதிக விலையில் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்பை படங்களில் உள்ள தோற்றத்தில் அறிமுகத்தின்போது புதிய பாப்பர் 350 பைக் இருக்காது. நிச்சயமாக, அதற்குள் பைக்கின் தோற்றம் அப்டேட் செய்யப்பட்டு விடும். புதிய பாப்பர் 350 பைக்கின் இந்த ஸ்பை படங்களில், வெள்ளை-சுவர் டயர்கள், உயரமான ஹேண்டில்பார்கள் மற்றும் புதிய எல்இடி ஹெட்லைட் உள்ளிட்டவை நம்மை வசீகரிக்கின்றன. இதில் எல்இடி ஹெட்லைட் ஆனது சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் உள்ளதை போன்று காட்சியளிக்கிறது.
தோற்றத்தில் தற்போதைய கிளாசிக் 350 பைக்கை போன்று உள்ளது என சொன்னாலும், புதிய பாப்பர் 350 ஆனது சில பாகங்களில் கிளாசிக் 350 உடன் வேறுப்படுகிறது. குறிப்பாக, வித்தியாசமான வடிவிலான எக்ஸாஸ்ட் குழாயையும், பெரிய அளவிலான பின்பக்க டிஸ்க் பிரேக்கையும் சொல்லலாம். இதில், பின் சக்கரத்தில் உள்ள டிஸ்க் பிரேக் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் உள்ள 300மிமீ டிஸ்க் பிரேக்கை ஞாபகப்படுத்துகிறது.

எங்களுக்கு தெரிந்தவரையில், கிளாசிக் 350 பைக்கில் தற்சமயம் வழங்கப்படும் அதே 349சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் தான் புதிய பாப்பர் 350 பைக்கிலும் வழங்கப்படும். இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6,100 ஆர்பிஎம்-இல் 20.2 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-இல் 27 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
தற்போதைய கிளாசிக் 350 பைக்கை விட அதிகமான விலைக்காக, புதிய பாப்பர் 350 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன் பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் செட்அப் வழங்கப்படலாம். இவை மட்டுமின்றி, பைக்கை விலைமிக்கதாக காட்ட வேறு சில தொழிற்நுட்ப அம்சங்களையும் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய ராயல் என்பீல்டு பைக்காக கிளாசிக் 350 விளங்குகிறது. இத்தகைய பைக்கை அடிப்படையாக கொண்டு மற்றொரு பைக் வெளிவருவது ராயல் என்பீல்டின் விற்பனையை மேம்படுத்தும் என்பது உறுதி. ஆனால், புதிய பாப்பர் 350 பைக்கின் அறிமுகத்தை அடுத்த 2024ஆம் ஆண்டில் தான் எதிர்பார்க்க முடியும் என்பதில் மாற்றம் இருக்காது.


Click it and Unblock the Notifications









