பழுசு பழசுதாங்க... லிட்டருக்கு 60-70 கிமீ மைலேஜ் தரும் டீசல் ராயல் என்பீல்டு பைக்... வீடியோ!
ராயல் என்பீல்டு (Royal Enfield) மோட்டார்சைக்கிள் ஒன்று ஒரு முறை பெட்ரோல் டேங்கை முழுமையாக நிரப்பினால் 1,000 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருவதாக ஆச்சரியம் அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஒட்டுமொத்த ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் பயன்பாட்டாளர்களையும் இப்போது நாம் பார்க்க இருக்கின்ற இந்த தகவல் மிகப் பெரிய பொறாமைக்கு ஆளாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ராயல் என்பீல்டூ மோட்டார்சைக்கிள் பயன்பாட்டாளர்களை மட்டுமில்லைங்க வேறு பிராண்ட் டூ-வீலர் பயன்பாட்டாளர்களையும் இந்த பதிவு நிச்சயம் பொறாமையின் உச்சத்திற்கே கொண்டு செல்ல இருக்கின்றது.

மிக மிக பழைய ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் ஒன்று ஒரு முறை டேங்க் ஃபில் பண்ணினால் 1,000 கிமீ வரை மைலேஜ் தருவதாக ஆச்சரியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த அரிய வகை மோட்டார்சைக்கிள் பற்றிய தகவலை பைக் வித் கர்ல் எனும் யுட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது. வீடியோ பதிவாகவே யுட்யூப் சேனல் வெளியிட்டு இருக்கின்றது.
ராயல் என்பீல்டு நிறுவனம் ஒரு காலத்தில் டீசலில் இயங்கும் இருசக்கர வாகனத்தை உருவாக்கி வந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இப்போதும், நிறுவனத்தின் டீசலில் இயங்கும் மோட்டார்சைக்கிளை குறிப்பிட்ட சில இருசக்கர வாகன லவ்வர்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அந்தவகையில், இப்போதும் பயன்பாட்டிற்கு உகந்த, தரமான நிலையில் இருக்கும் அரிய வகை டீசல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளே நம் அனைரையும் வியக்க வைக்கும் மைலேஜை வழங்கிக் கொண்டிருக்கின்றது.

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 80 வயதுமிக்க ஓர் முதியவருக்கு சொந்தமானதே இந்த டீசல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் ஆகும். நிறுவனத்தின் டீசல் மோட்டார்சைக்கிள்கள் டாரஸ் என அழைக்கப்பட்டன. முதல் டீசல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள் 1993 ஆம் ஆண்டிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.
புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக கடந்த 2000மாவது ஆண்டில், டீசல் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் இருந்து முழுமையாக அகற்றப்பட்டன. அந்த காலகட்டத்தில் டீசல் வாகனங்களுக்கு மிக மிக அமோகமான வரவேற்புக் கிடைத்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக இந்த வாகனம் கட்டாயம் வெளியேற்றப்பட வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டது.

டீசல் மோட்டார்சைக்கிள் வெளியேற்றம் செய்யப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த டீசல் ராயல் என்பீல்டு பைக் வாங்கப்பட்டு இருக்கின்றது. 1997 மாடல் இது ஆகும். இப்போதும் இதனை நல்ல இயக்க நிலையில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த முதியவர் பராமரித்து வருகின்றார். மிக சிறந்த பராமரிப்பின் காரணமாக நல்ல மைலேஜைக் கொடுக்கும் வாகனமாகவும் அது இருக்கின்றது.
இந்த வாகனத்தை ஸ்டார்ட் செய்ய சாவி தேவைப்படாது. மேலும், கிக் ஸ்டார்ட் செய்து மட்டுமே ஸ்டார்ட் செய்ய முடியும். இப்போது விற்பனையில் இருக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளையே பலர் அதிக அதிர்வைக் கொண்டிருப்பதாக கருதுகின்றனர். ஆனால், அதைக் காட்டிலும் மிக மிக அதிக அதிர்வைக் கொண்டதாக இந்த பைக் இருக்கின்றது.

325 சிசி மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் கிரீவ்ஸ் லம்பார்டினி 4 ஸ்ட்ரோக் டீசல் மோட்டார் ஆகும். இது ஒரு லிட்டர் டீசலுக்கு 60 கிமீ முதல் 70 கிமீ வரையில் மைலேஜ் தரும். ஆகையால், ஒரு முறை முழுமையாக ஃப்யூவல் டேங்கை நிரப்பினால் தாராளமாக 900 கிமீ முதல் 1,000 கிமீ தூரம் வரை நம்மால் பயணிக்க முடியும்.
இந்த 325 சிசி எஞ்ஜின் 6.9 பிஎச்பி பவரை வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது அதீ திறன் அல்ல. இருப்பினும் அந்த காலகட்டத்து இளைஞர்கள் மத்தியில் இதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. இப்போதுதான் இந்த வாகனத்திற்கு மிக சூப்பரான கிராக்கி நிலவிக் கொண்டிருக்கின்றது.
இப்போதும் ஒரு சிலர் இந்த டீசல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளை 70 ஆயிரம் ரூபாய் முதல் லட்ச ரூபாய் கொடுத்து வாங்க தயாராக இருக்கின்றனர். இப்போதைய நிலவரப்படி ராயல் நிறுவனம் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களை மட்டுமே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. வெகு விரைவில் மின்சார வாகனங்களின் உற்பத்தியையும் அது கையில் எடுக்க இருக்கின்றது. மின்சார வாகனங்களே எதிர்காலத்தில் நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாக மாறஉள்ளது.
உலகில் உள்ள அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் எரிபொருளில் இயங்கும் வாகனத்தின் உற்பத்தியை நிறுத்திவிட்டு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை மட்டுமே தயாரிக்க இருக்கின்றன. ராயல்என்பீல்டு நிறுவனமும் இதேமாதிரியான ஓர் நடவடிக்கை எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு, நிறுவனம் முழு மின்வாகன உற்பத்திக்கு மாறும் எனில், நிறுவனத்தின் டீசல் வாகனங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையே பெட்ரோல் டூ-வீலர்களுக்கும் ஏற்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications









