நாடே காத்து கெடந்த பைக்கிற்கு புக்கிங்கை தொடங்கிய ராயல் என்பீல்டு! சர்ப்ரைஸா இ-பைக் வேற! கலக்குறாங்கபா!
உலக புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் ஷோ-க்களில் மிலன் மோட்டார்சைக்கிள் ஷோ-வும் ஒன்றாகும். இஐசிஎம்ஏ என்றும் இது அழைக்கப்படுகின்றது. இத்தாலியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த ஷோவில் உலகின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் கலந்துக் கொண்டு தங்களின் புதுமுக மற்றும் வருங்களா இருசக்கர வாகனங்களை வெளியீடு செய்துக் கொண்டிருக்கின்றன.
இந்த ஷோவில் நம்முடைய தமிழகத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ராயல் என்பீல்டு நிறுவனமும் கலந்துக் கொண்டு அதன் புதுமுக வாகனங்கள் சிலவற்றை அறிமுகம் செய்திருக்கின்றது. விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஹிமாலயன் 450 மற்றும் முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் திறன் கொண்ட எச்ஐஎம்-இ ஆகிய இரண்டு டூ-வீலர்களும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

எச்ஐஎம்-இ கான்செப்ட் மாடலாக மட்டுமே இப்போது உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதன் முழு விபரங்களையும் நிறுவனம் அறிவிக்கவில்லை. விரைவில் அது பற்றிய அனைத்து தகவல்களையும் ராயல் என்பீல்டு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த பைக்குடன் வெளியீடு செய்யப்பட்டு இருக்கும் ஹிமாலயன் 450க்கு இப்போதே புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன.
உலக அளவில் இந்த பணிகள் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் நவம்பர் 24 ஆம் தேதி கோவாவில் நடைபெற இருக்கும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கொண்டாட்ட நிகழ்வின்போது அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வர இருக்கின்றது. வெகுவிரைவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, அவற்றின் டெலிவரி பணிகளையும் ராயல் என்பீல்டு தொடங்க இருக்கின்றது.

தன்னுடைய தயாரிப்புகளிலேயே மிக சிறந்த தயாரிப்பாக இந்த மோட்டார்சைக்கிளை ராயல் என்பீல்டு தயார் செய்திருக்கின்றது. பன்முக சிறப்பம்சங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் இந்த பைக்கில் ராயல் என்பீல்டு வழங்கி இருக்கின்றது. வண்ண டிஎஃப்டி திரை, வட்ட வடிவில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரையில் ப்ளூடூத் இணைப்பு வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் வாயிலாக செல்போன் மற்றும் அந்த திரையை இணைத்துக் கொள்ள முடியும்.
இதுதவிர, திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டமும் இந்த திரையில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், வட்ட வடிவ ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட் மற்றும் பின் பக்கத்தில் பிரேக் லைட்டுகள் ஆகியவை இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மூன்று விதமான வேரியண்டுகளின்கீழே இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. பேஸ் (Base), பாஸ் (Pass) மற்றும் சம்மிட் (Summit) ஆகியவையே அவை ஆகும்.

ஆரம்ப நிலை ட்ரிம்மாக பேஸ் இருக்கின்றது. இந்த தேர்வு காஸா பிரவுன் (Kaza Brown) எனும் ஒற்றை நிற தேர்வில் மட்டுமே கிடைக்கும். நடு நிலை தேர்வான பாஸ்-இல் ஸ்லேட் ஹிமாலயன் சால்ட் (Slate Himalayan Salt) மற்றும் ஸ்லேட் பாப்பி ப்ளூ (Slate Poppy Blue) ஆகிய இரண்டு நிற தேர்வுகள் வழங்கப்பட உள்ளன.
உயர் நிலை ட்ரிம்மான சம்மிட்-டிலும் இரண்டு விதமான வண்ண ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன. ஹேன்லே பிளாக் (Hanle Black) மற்றும் கேமெட் ஒயிட் (Kamet White) எனும் இரு விதமான வண்ண தேர்வுகளே வழங்கப்பட இருக்கின்றது. இந்த பிரத்யேக நிறங்கள் பைக்கின் ஃப்யூவல் டேங்க், சைடு பேனல்கள் மற்றும் வீல்களில் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த பைக்கில் புத்தம் புதிய லிக்யூடு கூல்டு, டூயல் ஓவர்ஹெட், கேம்ஷாப்ட், 4 வால்வுகள் கொண்ட மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரை பெறும் முதல் ராயல் என்பீல்டு பைக் ஹிமாலயன் 450-யே ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 39.5 பிஎச்பி பவரையும், 40 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.
கியர்பாக்ஸைப் பொருத்த வரை 6 ஸ்பீடு யூனிட்டே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், சிறந்த சஸ்பென்ஷனுக்காக இந்த பைக்கில் ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் காணப்படும் 43 மிமி யுஎஸ்டி (USD) ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் மோனோஷாக்கும் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் பக்க வீலில் 320 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 270 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், பைப்ரே காலிபர்கள் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ்-ம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சங்களுடன் பைக்கர்களே ஏபிஎஸ்-ஐ ஸ்விட்ச் செய்யும் வசதியையும் கொடுத்திருக்கின்றனர்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அட்வென்சர் வகை இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய அதிக பவர்ஃபுல் பைக்காக ராயல் என்பீல்டு இந்த புதிய ஹிமாலயன் 450-யைக் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் வருகையால் தற்போது விற்பனையில் இருக்கும் ஹிமாலயன் 411 வெளியேற்றம் செய்யப்பட இருப்பதாகக் கூறப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









