ராயல் என்பீல்டில் இந்த பைக் விற்பனைக்கு வந்தால், எல்லாரும் இதைதான் வாங்க போறாங்க!! அறிமுகம் எப்போது தெரியுமா?
ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) மோட்டார்சைக்கிள் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அட்வென்ச்சர் பைக்கின் படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் மூலம் நமக்கு தெரியவந்துள்ள விபரங்களை இனி பார்க்கலாம்.
ராயல் என்பீல்டின் வெற்றிக்கரமான தயாரிப்புகளுள் ஒன்று ஹிமாலயன் ஆகும். இந்தியாவில் அதிக பேர் வாங்கும் அட்வென்ச்சர் ரக மோட்டார்சைக்கிள். ராயல் என்பீல்டு பிராண்டில் அட்வென்ச்சர் பைக்கா? என பலரும் ஆச்சிரியப்பட்டு இந்த பைக்கை வாங்கி வருகின்றனர். ஹிமாலயன் தற்சமயம் 411சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், விரைவில் ஹிமாலயனை 450சிசி என்ஜின் உடன் களமிறக்கும் முடிவில் ராயல் என்பீல்டு நிறுவனம் உள்ளது. புதிய ஹிமாலயன் 450 பைக்கின் அறிமுகம் வருகிற நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த புதிய ராயல் என்பீல்டு பைக்கின் படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை வைத்து பார்க்கும்போது, ஹிமாலயன் 450 ஆனது தோற்றத்தில் ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்ற பைக்காக காட்சியளிக்கிறது.
அத்துடன், அதிவேக பயணங்களையும் இந்த பைக்கில் தைரியமாக மேற்கொள்ளலாம். நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, கிட்டத்தட்ட மணிக்கு 140கிமீ வேகத்திற்கு ஹிமாலயன் 450-ஐ ஓட்ட முடியும். ஹிமாலயன் 450 பைக்கின் நீளம் 2,245மிமீ, அகலம் 852மிமீ மற்றும் உயரம் 1,316மிமீ ஆகும். ஹேண்ட் கார்ட்ஸை பொருத்தினால் பைக்கின் அகலம் 900மிமீ ஆக அதிகரிக்கும். அதேபோல், பெரிய விண்ட்ஸ்க்ரீனை பொருத்தும் பட்சத்தில் பைக்கின் உயரத்தை 1,415மிமீ வரையில் கூட அதிகரிக்க முடியும்.
இந்த ஹேண்ட் கார்ட்ஸ் & விண்ட்ஸ்க்ரீனை கூடுதல் ஆக்ஸஸரீயாக ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கிறோம். புதிய ஹிமாலயன் 450 பைக்கில் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு 1,510மிமீ மற்றும் பைக்கின் எடை 394 கிலோ ஆகும். கெர்ப் எடை, அதாவது பெட்ரோல் இல்லாமல் பைக்கின் எடை 199 கிலோ ஆகும். ஆஃப்-ரோடு பைக்காக இருப்பினும், சவுகரியமான இருக்கை அமைப்பை ஹிமாலயன் 450 கொண்டிருப்பதை தற்போது வெளியாகியுள்ள படத்தில் காண முடிகிறது.
மேலும், ஹிமாலயன் 450 என தற்போதைக்கு நாம் இந்த பைக்கை அழைத்தாலும், ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கை ஹிமாலயன் 452 என்ற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளதாக நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் கூறுகின்றன. ஏனெனில் இந்த பைக்கில் 451.65சிசி என்ஜின் பொருத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் முற்றிலும் புதியதாக உருவாக்கியுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 40 பிஎச்பி & 35 என்எம் டார்க் திறன் வரையில் இயக்க ஆற்றலை வழங்கலாம்.
இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றல்மிக்கதாக இருப்பது மட்டுமின்றி, அட்வான்ஸானதாகவும் எதிர்பார்க்கப்படும் இந்த என்ஜின் DOHC செட்அப் மற்றும் 4 வால்வு ஹெட் பாகங்களை கொண்டதாக இருக்கும். சூடாகும் என்ஜினை குளிர்விப்பதற்காக லிக்யுடு-கூலிங் ஜாக்கெட் இணைக்கப்பட்டிருக்கும்.
அத்துடன், என்ஜினின் வெப்பத்தை தளர்த்த பெரிய அளவிலான ரேடியேட்டர் வழங்கப்பட்டுள்ளதை படத்தில் பைக்கை பார்க்கும்போது தெரிகிறது. தற்போதைய ஹிமாலயன் 411 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.16 லட்சமாக உள்ளது. புதிய ஹிமாலயன் 450 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.2.50 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே ஹிமாலயன் 411 பைக் ஒன்று விற்பனையில் இருக்கும்போது கிட்டத்தட்ட அதே விலையில், என்ஜின் உடன் மற்றொரு அட்வென்ச்சர் பைக்கை ராயல் என்பீல்டு கொண்டுவருவது எந்த மாதிரியான யுக்தி என தெரியவில்லை. ஆதலால், ஹிமாலயன் 450 அறிமுகம் செய்யப்பட்ட பிறகு ஹிமாலயன் 411 பைக்கின் விற்பனை நிறுத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எங்களை கேட்டால், புதிய ஹிமாலயன் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் கொண்டுவர யோசிக்கலாம்.


Click it and Unblock the Notifications








