எத்தனை பேருக்கு கனவு பைக்கா மாற போகுதோ!! ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 அறிமுகம் - அறிமுக விலை ரூ.2.69 லட்சம்!
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தில் இருந்து பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹிமாலயன் 450 மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய ஹிமாலயன் மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவின் பிரபலமான அட்வென்ச்சர் பைக்குகளுள் ஒன்று ராயல் என்பீல்டு ஹிமாலயன் ஆகும். இதற்குமுன் வரையில் 411சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹிமாலயன் பைக், தற்போது 450சிசி என்ஜின் உடன் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டுள்ளது. மேலும், வழக்கமான ஹிமாலயன் பைக் உடன் ஒப்பிடுகையில், புதிய ஹிமாலயன் 450 பைக்கின் தோற்றமும் மெருக்கேற்றப்பட்டு உள்ளது.

கோவாவில் நடைபெற்று வரும் 2023 மோட்டோவெர்ஸ் கண்காட்சியில் இருந்து புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.2.69 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேஸ், பாஸ் மற்றும் சம்மிட் என மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் புதிய ஹிமாலயன் 450 பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில், காஸா பிரவுன் பெயிண்ட்டில் கிடைக்கும் பேஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ.2.69 இலட்சம் ஆகும். ஸ்லாட் ஹிமாலயன் சால்ட் பெயிண்ட்டில் கிடைக்கவுள்ள பேஸ் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.74 இலட்சம். டாப் வேரியண்ட்டான சம்மிட்டிற்கு இரு விதமான விலைகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. அதாவது, காமெட் வெள்ளை நிறத்தில் சம்மிட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.79 இலட்சம், ஹன்லே கருப்பு நிறத்தில் ரூ.2.84 இலட்சம் ஆகும்.

இவை அனைத்தும் அறிமுக விலையே. அதாவது, வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே இந்த அறிமுகம் விலைகள் இருக்கும். அதன்பின், இந்த விலைகள் கணிசமாக உயர்த்தப்படும். புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450 பைக் முற்றிலும் புதிய சேசிஸ், சஸ்பென்ஷன் பார்ட்ஸ், நீளமான வீல்பேஸ் மற்றும் முற்றிலும் புதிய லிக்யுடு-கூல்டு என்ஜின் உடன் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதனால், தற்போது இருக்கும் ராயல் என்பீல்டு பைக்குகள் அனைத்தை விடவும் புதிய ஹிமாலயன் 450 முற்றிலும் வித்தியாசமானதாகவும், புதுமையானதாகவும் விளங்குகிறது. இந்த புதிய ஹிமாலயன் 450 பைக் சஸ்பென்ஷனுக்கு முன் பக்கத்தில் ஷோவா நிறுவனத்தின் யுஎஸ்டி ஃபோர்க்குகளையும், பின் பக்கத்தில் மோனோஷாக்கையும் கொண்டுள்ளது. இதில் முன்பக்க சஸ்பென்ஷனை அட்ஜெஸ்ட் செய்ய முடியாது.

ஆனால், முன்னெச்சரிக்கையாக 200மிமீ-இல் நன்கு நீளமான டிராவல் உடன் முன்பக்க சஸ்பென்ஷன் யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்பட்டு உள்ளன.ஆனால், இவை எல்லாவற்றையும் விட புதிய ஹிமாலயன் 450 பைக்கில் கவனிக்கப்படுவது அதன் 450சிசி என்ஜின் தான். ஏனெனில், ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து தற்சமயம் எந்தவொரு 450சிசி பைக்கும் விற்பனையில் இல்லை. ஆக, ஹிமாலயன் 450 பைக்கிற்காக பிரத்யேகமாக ஒரு 450சிசி என்ஜினை ராயல் என்பீல்டு உருவாக்கி உள்ளது.
ஹிமாலயன் 450 பைக்கில் 450சிசி, லிக்யுடு-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 40 பிஎச்பி மற்றும் 40 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை மோட்டார்சைக்கிளுக்கு வழங்கும் திறன் கொண்டதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இந்த என்ஜின் அதன் 90% டார்க் திறனை 3,000 ஆர்பிஎம் என்ஜின் வேகத்திற்குள் பைக்கிற்கு வழங்கிவிடும் என ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது.

இந்த என்ஜின் உடன் இணைக்கப்படும் கியர்பாக்ஸ் செட்-அப்பில் எந்தவொரு குயிக்ஷிஃப்டரும் இல்லை. அதற்கு பதிலாக ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச்சை கொண்டுள்ளது. புதிய ஹிமாலயன் 450 பைக்கில் வட்ட வடிவில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் திரை வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் மட்டுமின்றி, உலகிலேயே இவ்வாறான ஒரு இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலை எந்தவொரு பைக்கும் கொண்டிருக்கவில்லை என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் ஹிமாலயன் பைக்குகளுக்கு என சில பிரத்யேக திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்களின் ஒரு பகுதியாக வரும் ஹிமாலயன் 450 பைக் சந்தையில் கஸ்டமர்களை கவரும் வகையில் விலையை பெற்று வந்திருப்பதை கூறியே ஆக வேண்டும். புதிய ஹிமாலயன் 450 பைக்கின் விலையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









