ஆக்டிவாவைபோல் விற்பனையில் வெளுத்து வாங்கும் ராயல் என்பீல்டு தயாரிப்பு.. ஒரு வருஷம்கூட ஆகல ஆனா சாதிச்சிருச்சு!
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் ஹண்டர் 350 (Hunter 350)-ம் ஒன்று. இந்த பைக் மாடலே இந்தியாவில் தற்போது விற்பனையில் புதிய சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சுமார் 2 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி இந்தியர்களின் பிரியமான இருசக்கர வாகன மாடல் என்கிற மகுடத்தை ஹண்டர் 350 சூடி இருக்கின்றது. இந்திய இருசக்கர வாகன உலகை அதகளப்படுத்தும் விதமாக ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த மோட்டார்சைக்கிளை (ஹண்டர் 350யை) கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

விற்பனைக்குக் களமிறக்கப்பட்ட அடுத்த ஆறு மாதங்களே ஆன நிலையில் இந்த பைக் சுமார் 1 லட்சம் யூனிட் விற்பனை என்கிற அசாத்தியான சாதனை மைல்கல்லை எட்டியது. 2023 பிப்ரவரியில் இந்த சாதனையை எட்டியநிலையில், அடுத்த 1 லட்சம் யூனிட் விற்பனையை அடுத்த ஐந்து மாதங்களிலேயே ஹண்டர் 350 தற்போது பெற்றிருக்கின்றது.
இதன் வாயிலாக மிக மிக அமோகமான விற்பனை வரவேற்பை ஹண்டர் 350 இந்தியாவில் பெற்றுக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது. இதற்கு மிக முக்கியமான காரணமே இந்த பைக்கின் மலிவு விலைதான். நிறுவனத்தின் மலிவு விலை மோட்டார்சைக்கிளே இதுதான் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரூ. 1.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய குறைவான விலையும், அதிக கவர்ச்சியான தோற்றமுமே இந்த பைக் இந்தியர்களை வாங்கத் தூண்டிக் கொண்டு இருக்கின்றது.
மேலும், இதுவே நிறுவனத்தின் முதல் 17 இன்ச் வீல் கொண்ட மோட்டார்சைக்கிளும் ஆகும். அதேவேளையில், எஞ்ஜின் விஷயத்தில் இந்த பைக் கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 உடன் தொடர்புடையதாகக் காட்சியளிக்கின்றது. ஆமாங்க, இந்த பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 350 சிசி மோட்டாரே ஹண்டர் 350-யிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் சிங்கிள் சிலிண்டர் டிஓஎச்சி ஃப்யூவல் இன்ஜெக்டட் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டார் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 20 எச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ஹண்டர்ஸ் மற்றும் ரெட்ரோ ஹண்டர்ஸ் என இரு விதமான தேர்வுகளில் இது விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மெட்ரோ ஹண்டர்ஸ் புதிய தலைமுறை அம்சங்களைக் கொண்ட ஓர் தேர்வாகும். டூயல் நிறம், காஸ்ட் அலாய் வீல், அகலமான ட்யூப்லெஸ் டயர்கள், ஸ்பிளிட் அலுமினியம் ரியர் கிராப் ரெயில் மற்றும் வட்ட வடிவ ரியர் லைட் ஆகியவை இந்த தேர்வை அலங்கரிக்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆனால், இதன் ரெட்ரோ வெர்ஷன் பழைய ஸ்கூல் பாயைப் போல் உருவாக்கப்பட்டு இருக்கும். போல்டான ஒற்றை டோன் நிறம், ட்யூப்ளர் ரியர் கிராப் ரெயில் மற்றும் ஸ்டைலிஷான ஸ்போக் வீல்கள் எனப் பலதரப்பட்ட அம்சங்கள் அதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று தனித்துவமான சிறப்பு வசதிகளை இந்த மோட்டார்சைக்கிள் கொண்டிருப்பதாலும் அதற்கு நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த பைக் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி, அர்ஜென்டினா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்ஸிகோ என ஏகப்பட்ட நாடுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டு உள்ளது. அங்கும் ஹண்டர் 350 பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹண்டர் 350 பைக்கிற்கு கிடைத்துக் கொண்டிருக்கும் விற்பனை வரவேற்பை வைத்து பார்க்கையில் விரைவில் இந்த மோட்டார்சைக்கிள் இந்திய இருசக்கர வாகன உலகின் அறிவிக்கப்படாத தலைவனாக மாறிவிடும் என கூறும் அளவிற்கு இருக்கின்றது. பலரின் ராயல் என்பீல்டு வாகன கனவை தீர்த்து வைக்கக் கூடிய தயாரிப்பாக ஹண்டர் 350 இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








