அமெரிக்காவில் நம்ம ஊர் ராயல் என்பீல்டு செய்துள்ள தரமான சம்பவம்... ஹார்லி-டேவிட்சனுக்கு தலைவலி ஸ்டார்ட்!!
இந்தியாவில் உருவாக்கப்படும் ராயல் என்பீல்டு பைக் ஒன்று அமெரிக்காவில் விற்பனையை துவங்கியுள்ளது. எந்த ராயல் என்பீல்டு பைக் அது? எந்த அளவிலான விலையில் அங்கு விற்பனை செய்யப்பட உள்ளது? என்பது போன்றதான கேள்விகளுக்கான பதில்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
ராயல் என்பீல்டு, இங்கிலாந்தில் தோன்றி அதன்பின் முழு இந்திய நிறுவனமாக உருமாறி, தற்சமயம் பல்வேறு நாடுகளில் இந்திய பைக் நிறுவனமாக புகழப்படும் ஆட்டோமொபைல் நிறுவனம். ராயல் என்பீல்டு தனது தயாரிப்புகளை விற்பனை செய்யும் நாடுகளுள் ஒன்று அமெரிக்கா ஆகும். ஹார்லி-டேவிட்சன், இந்தியன் போன்ற பிரபலமான அமெரிக்க பைக் பிராண்ட்களை அந்த நாட்டில் ராயல் என்பீல்டு எதிர்கொண்டு வருகிறது.

அதுமட்டுமின்றி, உலகின் வல்லரசு நாடு என்பதால் அமெரிக்க ஆட்டோமொபைல் சந்தையில் போட்டிக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியை சமாளிக்கும் விதமாக, இந்தியாவில் சிறப்பாக வரவேற்பு கிடைக்கும் மாடல்களையும், அமெரிக்கர்களுக்கு ஏற்ற பைக்குகளையும் அந்த நாட்டில் தொடர்ச்சியாக ராயல் என்பீல்டு அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. இந்த வகையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கும் ராயல் என்பீல்டு பைக், ஹண்டர் 350 (Hunter 350) ஆகும்.
கடந்த 2022 ஆகஸ்ட்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்டர் 350 குறுகிய காலத்திலேயே பலத்தரப்பட்ட மக்களிடையே பிரபலமாகி உள்ளது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு வெளிநாடுகளிலும் இந்த பைக்கிற்கு வரவேற்பு கிடைக்கிறது. இதனை அறிமுகத்திற்கு முன்பே யூகித்துவிட்ட ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கை இந்தியாவில் இல்லாமல், தாய்லாந்தில் வைத்து உலகளவில் வெளியீடு செய்தது உங்களில் சிலருக்கு நினைவிருக்கலாம்.

ஹண்டர் 350-க்கு கிடைக்கும் வரவேற்புக்கு முக்கிய காரணம், அதன் குறைவான எடை மற்றும் குறைவான விலை ஆகும். அதாவது, தனது வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் வேறுப்பட்டு ஹண்டர் 350 மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் உருவாக்கியுள்ளது. இப்படிப்பட்ட ராயல் என்பீல்டு பைக் தான் தற்போது அமெரிக்க சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை 3,999 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.3.27 லட்சமாகும்.
அதிகப்பட்சமாக 4,199 அமெரிக்க டாலர்கள் (ரூ.3.43 லட்சம்) வரையிலான விலைகளில் அமெரிக்காவில் ஹண்டர் 350 மோட்டார்சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவில் விற்பனைக்கு சென்றுள்ள பைக்கில் எந்த மாற்றமும் இல்லை. அதாவது, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் விற்கப்படும் அதே மாடல் தான் அமெரிக்காவிற்கும் சென்றுள்ளது. மேலும், இந்தியாவில் போல், அமெரிக்காவில் ராயல் என்பீல்டின் விலை குறைவான பைக் ஹண்டர் 350 ஆகும்.

அமெரிக்காவில் ஒரேயொரு மெட்ரோ வேரியண்ட்டில் மட்டுமே இந்த பைக் களமிறக்கப்பட்டுள்ளது. புதிய ஜே பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஹண்டர் 350 பைக்கில் 349சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜினை ராயல் என்பீல்டு நிறுவனம் பொருத்துகிறது. அதிகப்பட்சமாக 6,100 ஆர்பிஎம்-இல் 20.2 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-இல் 27 என்எம் டார்க் திறனை இந்த என்ஜின் வெளிப்படுத்தகூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஹண்டர் 350 போன்ற குறுகிய காலத்திலேயே பெரும் வெற்றி பெற்றுள்ள தயாரிப்பை அமெரிக்கா போன்ற நாட்டில் அறிமுகப்படுத்தி இருப்பது ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு மகிழ்ச்சியை தந்திருக்கும். ஆனால் உண்மையில் இந்த பைக் அமெரிக்காவில் எந்த அளவிற்கு விற்பனையாகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில், அமெரிக்கர்கள் பிரீமியம் தரத்திலான மோட்டார்சைக்கிள்களையே விரும்ப கூடியவர்கள்.


Click it and Unblock the Notifications








