பைக்கை வாடகை விடும் தொழிலில் களமிறங்கிய ராயல் என்பீல்டு.. வாடகை ரொம்ப அதிகமா இருக்குமோ! அதுதான் கிடையாது!
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு புதிய இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை ஆகிய செயல்பாடுகளுடன் சேர்த்து இனி இருசக்கர வாகனங்களை வாடகைக்கு விடும் செயலிலும் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ராயல் என்பீல்டு (Royal Enfield)ம் ஒன்றாகும். சென்னையை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனம், புதிதாக இருசக்கர வாகன வாடகையை (Two Wheeler Rental) சேவையைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதிய வாகனங்களை உற்பத்தி செய்தல் மற்றும் அவற்றை விற்றல் ஆகிய செயல்பாடுகளில் மட்டுமே நிறுவனம் ஈடுபட்டு வந்தநிலையில் தற்போது டூ-வீலர் வாடகை தொழிலிலும் அது களமிறங்கி இருக்கின்றது. பலருக்கு ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் எட்டாக் கனியாக இருக்கின்றது. இருப்பினும், அதை வாங்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட கால கனவாக இருக்கின்றது.
இந்த மாதிரியானோருக்கு நிறுவனத்தின் புதிய சேவை பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், நீண்ட தூரம் ராயல் என்பீல்டு பைக்கில் போனால் ஜாலியாக இருக்கும் என நினைப்பவர்களுக்கும் நிறுவனத்தின் இந்த புதிய சேவை பெரும் உதவியாக இருக்கும். நம்மில் பலர் வழக்கமான டூ-வீலரையோ அல்லது ஸ்கூட்டரையோ பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களாக இருக்கின்றோம்.

ஆனால், அவற்றைக் கொண்டு லாங் டிரைவ் எல்லாம் செல்ல முடியாது. இந்த மாதிரியான சூழலிலேயே நாம் ராயல் என்பீல்டு பைக்கை தேடுவோம். ஆனால், அதை நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ கடனாகக் கேட்டு சென்றால், கொடுக்க மனமில்லாமல் அவர்கள், பைக்கில் அது சரியில்லை, இது சரியில்லை என கூறி தட்டிக் கழிப்பார்கள்.
இந்த மாதிரியான அவலங்களை இனி வரும் நாட்களில் நம்மால் தவிர்த்துக் கொள்ள முடியும். இதற்காகவே பிரத்யேகமாக ராயல் என்பீல்டு ரென்டல் (Royal Enfield Rental) திட்டத்தைத் தொடங்கி இருக்கின்றது. நாட்டின் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்த சேவை முதல் கட்டமாக தொடங்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.
இந்த மையங்களுக்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை வைத்தே நாட்டின் பிற பகுதிகளிலும் தன்னுடைய வாடகை சேவையை அது விரிவாக்கம் செய்ய இருக்கின்றது. ஒவ்வொரு மையத்திலும் சுமார் 40 மோட்டார்சைக்கிள்கள் என 300க்கும் அதிகமான மோட்டார்சைக்கிள்கள் வாடகை சேவைக்காக நிறுவனம் சார்பில் ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது.
நிறுவனத்தின் தாயகமான நமது சென்னையிலும் ராயல் என்பீல்டு ரென்டல் திட்டம் தொடங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, பெங்களூரு, ஹைதராபாத், கோவா, திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், டெல்லி, ஷிம்லா, நைனிடல், பிர் பில்லிங், சிலிகுரி, டேராடூன், கொச்சி, புவனேஸ்வர், உதய்பூர், ஜெய்பூர், லே, மணாலி, ஹரிதுவார், தர்மசாலா, மும்பை மற்றும் அஹமதாபாத் உள்ளிட்ட பகுதிகளிலும் ராயல் என்பீல்டு தன்னுடைய இருசக்கர வாகன வாடகை சேவையைத் தொடங்கி இருக்கின்றது.
இந்த நகரங்களின் வரிசையிலேயே இன்னும் சில முக்கிய நகரங்கள் விரைவில் இணைக்கப்பட இருக்கின்றன. இதனை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்திருக்கின்றது. சரி நிறுவனத்தின் வாகனத்தை வாடகைக்கு எப்படி என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பியிருக்கலாம். இதற்கு நீங்க நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தை விசிட் செய்ய வேண்டி இருக்கும்.
அங்கு உங்களுக்கு தேவையான பிளான் மற்றும் வாகனத்தைத் தேர்வு செய்து, பின்னர், தேவையான ஆவணம் மற்றும் முன் தொகையை செலுத்துவதன் வாயிலாக உங்களுக்கான வாடகை வாகனம் ஒதுக்கப்படும். எந்தெந்த இருசக்கர வாகன மாடல்கள் வாடகைச் சேவைக்காக ஒதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.
நிறுவனத்தின் முன்னணி மாடல்கள் அனைத்தும், இந்த சேவையில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, கிளாசிக் 350, ஹண்டர் 350 மற்றும் மீட்டியோர் 350 உள்ளிட்ட மாடல்கள் கட்டாயம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் வாடகையாக எவ்வளவு வசூலிக்கும் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழும்பியிருக்கக் கூடும்.
நாங்கள் தளத்தில் சென்று ஆராய்ந்து பார்த்ததில் இன்டர்செப்டார் 650 மாடலுக்கு ஒரு நாள் வாடகையாக 2800 ரூபாயும், இரண்டு நாள் வாடகையாக ரூ 5,600-ம் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. சென்னையைப் பொருத்தவரை இந்த வாகனம் மட்டுமே இப்போதைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதைப் போல் தெரிகின்றுது.
வெவ்வேறு நாட்களுக்கு சென்று புக் செய்யும் விதமாக அதில் தீவிர தேடுதலில் ஈடுபட்டோம். ஒரே ஒரு இன்டர்செப்டார் 650 தேர்வை மட்டுமே தளத்தில் நிறுவனம் வழங்கி இருக்கின்றது. ஆகையால், இப்போதைக்கு இந்த மாடல் மட்டுமே நிறுவனத்தின் வாடகை சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பது தெரிய வருகின்றது. விரைவில் இதனுடன் வேறு சில மாடல்களும் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் கீழ் புல்லட் 350, சூப்பர் மீட்டியோர் 650, ஸ்கிரம் 411, இன்டர்செப்டார் 650, கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் ஹிமாலயன் உள்ளிட்ட பைக் மாடல்கள் விற்பனையில் இருக்கின்றன. இவற்றில் சிலவும் நிறுவனத்தின் வாடகை வாகன சேவையின்கீழ் வாடகைக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த சேவையால் ராயல் என்பீல்டு பைக்கின் உரிமையாளர் ஆகாமலே அதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








