சத்தமே இல்லாம விற்பனைக்கு வந்த புது ராயல் என்ஃபீல்டு பைக்!! ஆனால் எல்லாராலும் வாங்க முடியாது!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் ஷூட்கன் 650 (Shotgun 650) மோட்டார்சைக்கிளின் மோட்டோவெர்ஸ் (Motoverse) எடிசனை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பெரியதாக எந்தவொரு அறிவிப்பும் இன்றி, மோட்டோவெர்ஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் சர்பிரைஸ் செய்யும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ராயல் என்ஃபீல்டு பைக்கை பற்றி இனி பார்க்கலாம்.
கோவாவில், 2023ஆம் ஆண்டிற்கான மோட்டோவெர்ஸ் கண்காட்சி பல்வேறு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடந்து முடிந்துள்ளது. இதன்பின், அடுத்த 2024ஆம் ஆண்டில் நவம்பர் 22 - 24ஆம் தேதிகளில் மீண்டும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சியில் ராயல் என்ஃபீல்டு பலத்த எதிர்பார்ப்பில் இருந்த தனது ஹிமாலயன் 450 பைக்கை அறிமுகம் செய்தது.

புதிய ஹிமாலயன் 450 பைக்கின் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.2.69 இலட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அறிமுக விலை வருகிற டிசம்பர் 31ஆம் தேதி வரையில் மட்டுமே. அதன்பின் விலைகள் உயர்த்தப்பட உள்ளன. ஹிமாலயன் 450 பைக்கை தொடர்ந்து ஷூட்கன் என்ற பெயரில் தனது புதிய 650சிசி பைக்கையும் ராயல் என்ஃபீல்டு வெளியீடு செய்தது. புதிய ஷூட்கன் 650 பைக்கை பற்றிய விபரங்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டன.
இதனை தொடர்ந்து, ஷூட்கன் 650 அடுத்த 2024இல் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மோட்டோவெர்ஸ் கண்காட்சியின் நிறைவு நாளில் யாரும் எதிர்பாராத நேரத்தில், ஷூட்கன் 650 பைக்கின் மோட்டோவெர்ஸ் எடிசனை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது.

புதிய ஷூட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிசன் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.25 இலட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டு உள்ளன. ஷூட்கன் 650 பைக்கின் இந்த ஸ்பெஷல் எடிசனை முன்பதிவு செய்தவர்களுக்கு பைக் டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற 2024 ஜனவரி மாதத்தில் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இருப்பினும், ஷூட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிசன் பைக்கை சொந்தமாக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஏனெனில், இந்த ஸ்பெஷல் எடிசன் பைக் அனைவராலும் வாங்க முடியாது. மோட்டோவெர்ஸ் கண்காட்சியில் பங்கேற்றவர்கள் மட்டுமே வாங்க முடியும். அதுமட்டுமின்றி, மொத்தமாகவே வெறும் 25 யூனிட்கள் மட்டுமே இந்த சிறப்பு பதிப்பு தயாரிக்கப்பட உள்ளது.

இந்த 25 ஷூட்கன் 650 மோட்டோவெர்ஸ் எடிசன் பைக்குகளுக்கான உரிமையாளர்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தான் கண்காட்சியில் கலந்துக் கொண்டவர்களில் இருந்து குலுக்கல் முறையில் தேர்வு செய்யுமாம். வழக்கமான ஷூட்கன் 650 பைக் உடன் ஒப்பிடுகையில், இந்த மோட்டோவெர்ஸ் எடிசனில் ஸ்பெஷல் ஹேண்ட்-பெயிண்ட் கிடைக்கும்.
அத்துடன் என்ஜின் பாதுகாப்பான் பளபளப்பான கருப்பு நிறத்தில் கிடைக்கும். இவ்வாறான என்ஜின் கேஸ் ராயல் என்பீல்டு பைக்குகளிலேயே இதுதான் முதல்முறை என கூறப்படுகிறது. மோட்டோவெர்ஸ் எடிசனின் டெலிவிரி 2024 ஜனவரியிலேயே துவங்கினாலும், பொது விற்பனைக்கான ஷூட்கன் 650 பைக் 2024இன் மத்தியில்தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் விற்பனை சமீப மாதங்களாக சிறப்பாக உள்ளது. இந்த நிலையில்தான், சூப்பர் மீட்டியோரை விட விலை குறைவான ஷூட்கன் 650 பைக் கொண்டுவரப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, ராயல் என்ஃபீல்டு ஷுட்கன் 650-இன் டார்க்கெட் ஐரோப்பிய நாட்டு சந்தையும்தான்.


Click it and Unblock the Notifications









