இந்தியாவே காத்து கிடந்த ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்! இந்த விலையில்தான் விற்பனைக்கு வரப்போகுதா!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு சூட்கன் 650 (Royal Enfield Shotgun 650). இந்த பைக் தற்போது அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் இந்த பைக் இன்னும் விற்பனைக்கு வரவில்லை.
ஆனால் கூடிய விரைவில் ராயல் என்பீல்டு சூட்கன் 650 பைக் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக வரும் ஜனவரி மாத மத்தியில், அதாவது இன்னும் சுமார் ஒரு மாத காலத்திற்குள், ராயல் என்பீல்டு சூட்கன் 650 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இது ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield 650 Super Meteor 650) பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள பாபர் (Bobber) ரக பைக் ஆகும். எனவே ஒரு இருக்கையுடன் மட்டுமே இந்த பைக் கிடைக்கும். எனினும் தேவைப்பட்டால் பின்னால் ஒருவர் அமர்வதற்கான இருக்கையை நீங்கள் வாங்கி கொள்ளலாம்.
ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கிற்கான பின் இருக்கையை தனியாக விற்பனை செய்யவுள்ளது. ஸ்டென்சில் ஒயிட், க்ரீன் ட்ரில், ப்ளாஸ்மா ப்ளூ மற்றும் ஷீட்மெட்டல் க்ரே என மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் ராயல் என்பீல்டு சூட்கன் 650 பைக் விற்பனைக்கு கிடைக்கும்.

செயல்திறனை பொறுத்தவரையில் ராயல் என்பீல்டு சூட்கன் 650 பைக்கில், 648 சிசி, ஆயில் கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7,250 ஆர்பிஎம்மில் 46.40 பிஹெச்பி பவரையும், 5,650 ஆர்பிஎம்மில் 52.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
இந்த இன்ஜின் உடன், 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப்பர் க்ளட்ச் வசதி ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. பிரேக்கிங்கை பொறுத்தவரையில், முன் பகுதியில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
ராயல் என்பீல்டு சூட்கன் 650 பைக்கின் பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 13.8 லிட்டர்கள் ஆகும். அதே நேரத்தில் இந்த பைக்கின் எடை 240 கிலோவாக உள்ளது. இது ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்குடன் ஒப்பிடும்போது, ஒரு கிலோ குறைவாகும். ராயல் என்பீல்டு சூட்கன் 650 பைக்கின் விலை (Price) எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எனினும் இந்த பைக்கின் விலை சுமார் 3.80 லட்ச ரூபாய் அல்லது 4 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். ராயல் என்பீல்டு சூட்கன் 650 பைக்கின் அதிகாரப்பூர்வ விலை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான் அறிவிக்கப்படும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து ஒரு புத்தம் புதிய பாபர் ரக பைக்கை எதிர்பார்த்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு, சூட்கன் 650 மிகச்சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம். இதன் விலை எவ்வளவு? என்பதை தெரிந்து கொள்ள உங்களை போலவே, நாங்களும் ஆர்வமாக இருக்கிறோம்.


Click it and Unblock the Notifications








