பிடித்த கலரில் வாங்கலாம்!! ரூ.1.25 லட்சத்தில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - சூப்பரான ஸ்டைலில்!
இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மார்க்கெட்டில் ரன் ஆர் நிறுவனம் அதன் எச்.எஸ் இவி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொது விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இதுவரையில், வணிக பயன்பாடுகளுக்காக மட்டுமே விற்பனை செய்யப்பட்ட இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இனி பொது மக்களும் தங்களது அன்றாட பயன்பாட்டிற்கு வாங்கலாம்.
ஒரு சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வணிக பயன்பாட்டிற்காக மட்டுமே தயாரிப்படுகின்றன. அவற்றை பற்றிய விளம்பரங்களை பெரியதாக வெளியில் பார்க்க முடியாது. ஏனெனில், அத்தகைய ஸ்கூட்டர்களை வாங்குவது, சர்வீஸ் செய்வது உள்ளிட்ட உரையாடல்கள் அனைத்தும் ஸ்கூட்டரை தயாரிக்கும் நிறுவனம் மற்றும் அதனை வாங்கும் நிறுவனங்களிடையே முடிந்துவிடும்.

பிஸ்னஸிற்கான குறிப்பிட்ட தொலைவு போக்குவரத்துக்காக இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பயன்படுத்தும். அவ்வாறு, ரன் ஆர் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்த எச்.எஸ் இவி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பொது மக்களின் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.25 லட்சம் மற்றும் ரூ.1.30 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பொது மக்கள் வந்து வாங்குவதற்காக இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் டீலர்ஷிப் ஷோரூம்களை திறக்க ரன் ஆர் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அத்துடன், இந்த 2023-24ஆம் நிதியாண்டு முடிவடைவதற்குள் 40 பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்களை நிறுவவும் ரன் ஆர் முடிவெடுத்துள்ளது. டீலர்ஷிப் ஷோரூம்கள் வந்த பின் ஸ்கூட்டரை வாங்க விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் டெஸ்ட் ரைடு செய்து பார்க்கலாம்.
அதேபோல், பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்கள் வந்த பின், வீட்டில் சார்ஜ் செய்வதற்கு பதிலாக எச்.எஸ் இவி-இன் பேட்டரியை இந்த நிலையத்தில் கொடுத்து சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம். இந்த 2023 அக்டோபர் மாதம் முடிவடைவதற்குள் குறைந்தது 200 எச்.எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து நாட்டின் வெவ்வேறு பகுதிகளுக்கு அனுப்ப ரன் ஆர் நிறுவனம் தீவிரமாக உள்ளது.
எச்.எஸ் இவி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வெள்ளை, கருப்பு, கிரே, சிவப்பு மற்றும் பச்சை என 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம். 60 வோல்ட் 40 ஆம்பியர் லித்தியம்-இரும்பு லிக்யுடு-கூல்டு வயர்-பவுண்ட் பேட்டரி தொகுப்பை இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ரன் ஆர் நிறுவனம் பொருத்துகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் ஸ்கூட்டரை அதிகப்பட்சமாக 110கிமீ தொலைவிற்கு இயக்கி செல்லலாம்.
1.5 கிலோ வாட்ஸ் BLDC மோட்டாரின் உதவியில் இயங்கும் எச்.எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப்-ஸ்பீடு 70kmph ஆகும். தொழிற்நுட்ப அம்சங்களாக, ஓட்டுனருக்கு தகவல்களை வழங்க டிஜிட்டல் ஸ்க்ரீன், திருட்டை தடுக்க வாகனம் இருக்கும் இருப்பிடத்தை தெரிந்துக்கொள்ளும் வசதி, ரிமோட் ஃப்ளீட் மேனேஜ்மெண்ட், ஒவர் தி ஏர் அப்டேட்கள் மற்றும் பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்கள் உள்ளிட்டவை எச்.எஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்கூட்டரில் அலாய் சக்கரங்கள், அவற்றில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகம் குறித்து ரன் ஆர் மொபைலிட்டி நிறுவனர் செடுல் ஷா பேசுகையில், "எங்கள் புதிய ஷோரூம் திறப்பு விழா எங்கள் சாதனைகளுக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. காலத்தின் தேவையான தீர்வுகளை நாங்கள் கொண்டு வருகிறோம். இடைவெளியை பூர்த்தி செய்கிறோம். மேலும் எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தீர்வுகளை வழங்குகிறோம்" என்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு வணிக பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கும்போது தானாகவே ஓர் நம்பிக்கை உருவாகிவிடும். ஏனெனில், ஏற்கனவே அந்த மார்க்கெட்டில் சிறப்பாக விற்பனை செய்ததன் தைரியத்திலேயே எச்.எஸ் இவி எலக்ர்ட்ரிக் ஸ்கூட்டரை கம்பெனி-டூ-கஸ்டமர்ஸ் மார்க்கெட்டிற்கு ரன் ஆர் நிறுவனம் கொண்டுவந்துள்ளதாக கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








